Published:Updated:

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?
News
அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

Published:Updated:

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?
News
அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

ர்ச்சகர் பயிற்சி முடித்து பணி வழங்கப்படாமல் கஷ்டப்படும் 206 தமிழக மாணவர்களுக்காக கருவறை நுழைவுப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "கேரளாவில் தேவசம் போர்டு, தனது கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது. இவர்களில் 6 பேர் தலித்துகள். அதேநேரத்தில் தமிழகத்தில், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று, சான்றிதழும், தீட்சையும் பெற்ற 206 மாணவர்கள் பத்து ஆண்டுகளாக, பணி நியமனம் மறுக்கப்பட்டு தெருவில் நிற்கிறார்கள். 

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத்தீண்டாமையை ஒழிக்கவும் 1993 ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். 2007-ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்சநீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்திவிட்டார்கள். 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்றபோதிலும், அ.தி.மு.க அரசு, மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. பார்ப்பனராகப் பிறக்காத குற்றத்துக்காக தகுதியுள்ள இம்மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  வைக்கம் போராட்டம் நடத்திய பெரியார் பிறந்த தமிழகத்தின் இன்றைய நிலை இதுதான்.

2006-ல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு தி.மு.க அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்து தடையாணை பெற்றவர்கள் மதுரை மீனாட்சி கோயிலின் அர்ச்சகர்கள். 1972-ல் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்க தி.மு.க கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றவர்களும் இவர்கள்தான். தங்களைத் தவிர வேறு யாரும் கடவுள் சிலையைத் தொட்டால்  தீட்டாகிவிடும் என்ற அப்பட்டமான தீண்டாமைக் கருத்தைத்தான் ஆகமவிதி என்ற பெயரிலும் மதநம்பிக்கை என்ற பெயரிலும்  முன்வைக்கிறார்கள். பார்ப்பனரல்லாதவர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களின் மற்ற உட்பிரிவினர் கூட அர்ச்சகராக முடியாது என்று சாமர்த்தியமாக வாதிடுகிறார்கள். மாரியாத்தா, காளியாத்தா கோயில்கள் போன்றவற்றில் மற்ற சாதியினர் பூசாரியாக இருப்பதைக் காட்டி, ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு மரபு என்றும் நியாயப்படுத்துகிறார்கள்.

சென்னை கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், தஞ்சை, திருவையாறு, நெல்லை, ராமேசுவரம், பழனி உள்ளிட்ட எல்லா முக்கிய கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பார்ப்பனர் மட்டும்தான். 1972 சேசம்மாள் தீர்ப்பு, 'வாரிசு உரிமையாக அர்ச்சகர் பதவியைக் கோர முடியாது' என்று தெளிவாகக் கூறிவிட்ட பின்னரும், தற்போது இத்தகைய பெருங்கோயில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் 1174-ல் 574 பேர் வாரிசுரிமையாக பதவி பெற்றவர்கள்தான். மேலும், 411 பேர் அவர்களின் சிபாரிசால் நுழைந்தவர்கள்.

அது மட்டுமல்ல, மதுரைக் கோயிலின் 116 அர்ச்சகர்களில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். சென்னை கபாலீசுவரர் கோயில் அர்ச்சகர்கள் 41 பேரில் 4 பேர்தான் ஆகமம் கற்றவர்கள். மற்றவர்களுடைய தகுதி சாதி மட்டும்தான் என்பதை நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்துகிறது. ஆனால், தகுதியுள்ள பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை நியமிக்க அரசு மறுத்து வருகிறது. 
மேற்கண்ட கோயில்கள் அனைத்தும் பொதுக்கோயில்கள். அவை முன்னர் மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. இன்று இக்கோயில்களின் பணிநியமனம் உள்ளிட்டவைகள் அரசு அதிகாரத்தின் கீழ் வந்திருக்க வேண்டும். ஆனால், ஆகமவிதி, மரபு, பழக்கவழக்கம், இந்துக்களின் மத உரிமை என்ற போர்வையில் தமிழ்மக்களுடைய உழைப்பில் உருவான இந்தக் கோயில்களின் கருவறைக்குள் தமிழனே உள்ளே நுழையமுடியாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சகர் வேலைக்கு வந்த தீட்சிதர்கள், இன்று கோயிலே தங்களுக்குச் சொந்தம் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பும் வாங்கி விட்டார்கள்.

இவர்கள் சொல்வதைத்தான் மரபு என்று உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கிறது. கோயில் தேவதாசி முறையும், தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதும்கூட ஆகமவிதிகள்தான். பால்ய விவாகம், பலதார மணம், உடன்கட்டையற்றுதல் போன்ற அனைத்தும் இந்து மரபுகள்தான். பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது என்பதும் அதுபோன்ற  மரபு. ஒழிக்கப்படவேண்டிய தீண்டாமை மரபு.  இளையபெருமாள் கமிட்டி தீண்டாமை ஒழிப்புக்கு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், 1971 ல் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தையும், 2006 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியையும் கருணாநிதி கொண்டுவந்தார்.

இதற்கு எதிரான வழக்கில், 2015-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். சட்டப்பிரிவு 25-ன் படி அர்ச்சக மாணவர்களும், பல்வேறு சாதிகளிலும் பிறந்த இந்துக்களும் பெற்றிருக்கும் மத உரிமையைக் காட்டிலும், சட்டப்பிரிவு 26- ன் படி குறிப்பிட்ட உட்சாதியைச் சேர்ந்த அர்ச்சகர்கள் கோரும் மரபுரிமைதான் பெரியது என்கிறது அத்தீர்ப்பு.  தங்களைத் தவிர மற்றவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டு என்று அர்ச்சகர்கள் கூறுவது தீண்டாமைக்குற்றம் ஆகாது என்றும் இந்த தீர்ப்பு கூறுகிறது. இருந்தபோதிலும் மாணவர்களின் பணிநியமனத்துக்கு இத்தீர்ப்பு தடை விதிக்கவில்லை. அரசு இவர்களை நியமனம் செய்யலாம் என்றும், அந்த நியமனம் மரபுக்கு எதிரானது என்றால் அந்த நியமனத்துக்கு அர்ச்சகர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறுகிறது இத்தீர்ப்பு.

கேரளாவில் பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்குப் போகாததற்கு காரணம் சமூக ரீதியாகத் தனிமைப்பட்டு விடுவோம் என்ற அச்சம்தான். அத்தகைய அச்சவுணர்ச்சியை தமிழ்ச்சமூகம் அரசுக்கும் அர்ச்சகர்களுக்கும் ஏற்படுத்தவில்லை. 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தீண்டாமைக்கு முட்டுக்கொடுக்கிறது என்றபோதிலும், அது பணி நியமனத்துக்குத் தடை விதிக்கவில்லை என்பதால், தமிழக அரசு, 206 மாணவர்களையும் பெருங்கோயில்களில் நியமிக்கவேண்டும். அவர்களுடைய பணி நியமனத்துக்கு எதிராக அர்ச்சகர்கள் நீதிமன்றம் சென்றால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மட்டுமின்றி வீதியிலும் நாம் போராடவேண்டும்.

சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்தச் சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்தச் சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது. மரபுக்குத் தலைவணங்குவது என்ற பெயரில் சாதி ஆதிக்கத்துக்கும் தீண்டாமைக்கும் தலை வணங்க முடியாது. அர்ச்சகர் நியமனத்துக்கு மட்டுமல்ல, தலித் கோயில் நுழைவு, சாதி, தீண்டாமை மறுப்பு திருமணம் உள்ளிட்ட அனைத்துக்கும் இது பொறுந்தும். 

206 மாணவர்களை பெருங்கோயில்களில் தமிழக அரசு உடனே பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழகமெங்கும் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்த வேண்டுமென்று தமிழ் மக்களின் நலன் நாடும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம். இது தமிழர்களின் தன்மான பிரச்னையாகும். வைக்கம் வீரருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்'' என்றார்.