கனவுகள்... காரணம், அர்த்தம் மற்றும் மீட்டெடுக்கும் வழிகள்! #ScienceOfDreams

கனவுகள்

உங்களுக்குக் கனவுகள் அடிக்கடி வருமா?

உங்கள் நண்பருடன் காபி ஷாப்பில் காபி குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது போன்ற கனவு வந்தால், அது நினைவிலிருக்கும். ஆனால், யோசித்து பார்த்தால் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பது தெரியாது. கனவின் ஆரம்பம் யாருக்கும் தெரியாது. 
கனவுகள் என்பது நினைவலைகளால் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்பமுடியாத கற்பனை உலகத்திற்கு நம்மைக் கூட்டிச்செல்லும்.  

இந்தக் கனவில் தோன்றும் நடிகர்களுக்கு கால்ஷீட் பிரச்னை இல்லை. பின்னணி இசைக்கும் சம்பளம் கொடுக்க தேவையில்லை. இவை நாம் பார்த்த, கேட்ட ஓசைகள், உணர்வுகளால் உருவாக்கப்படுபவை.

நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நண்பன் உங்கள் முகத்தைப் பார்க்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது, திடீரென்று உங்கள் கண்கள் வலது இடது புறம் ஓடிக் கொண்டே இருந்தால் இப்போது நீங்கள் கனவு காண ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதைத்தான் Rapid eye movement என்கிறார்கள்.

கனவில் நடக்கும் விஷயங்களுக்கு அர்த்தம் இருக்கிறதா இல்லையா? உளவியலாளர்கள் (psychiatrist) என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

யாரோ துரத்துவது போல கனவு கண்டால்..

உளவியல் ரீதியாகப் பார்த்தால், உங்கள் பிரச்னைகளைக் கண்டு நீங்கள் பயந்து ஓடி ஒளிந்துகொள்கிறீர்கள் என்று அர்த்தம். யார் துரத்துகிறார்கள் என்பது பிரச்னையைப் பொறுத்து அமையும்.

பரீட்சை (Exam) எழுதுவது போல...

இது நாம் எல்லோரும் கண்ட கனவுதான். கடைசிவரைக்கும் தேர்வு அறையைத் தேடித்தான் அலைவோம். இந்தக் கனவுக்கு “ஒரு முடிவை தேடி அலையக் கூடிய நபராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையிலுள்ள பிரச்னையின் தீர்வு என்ன என்று தெரியாமல் கவலைப்படுகிறீர்கள் என்பது அர்த்தம்” என்கிறார்கள்.

திடீரென  மாடியில் இருந்து குதிப்பது போல்: 

இதுவும் அடிக்கடி வரும் கனவு. நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முக்கியமான விஷயம் கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டாலும் இந்த மாதிரி கனவுகள் வரும்.  

ஓடிக் கொண்டேயிருப்பது போல:

ஒரு பிரச்னை தீராமல் சென்று கொண்டிருக்கிறது. பல முயற்சிகள் செய்தாலும் அடுத்த பிரச்னை வருகிறது என்பதால்தான் இந்த மாதிரியான கனவுகள் வருகின்றன.

பறப்பது போல் கனவு கண்டால்..

உங்கள்மீது அதீத சுய நம்பிக்கை. மேலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்த்து கொண்டிருக்கிறீர்கள்.

திடீரென்று இதுவரை நீங்கள் பார்த்திராத நபர்கள் உங்கள் கனவில் பலமுறை பார்த்ததுண்டு. யார் அவர்கள்? எங்கே இருந்து தானே வருகிறார்கள் என்று யோசிக்கிறீர்கள்? நீங்கள் இதுவரை பார்க்காத நபர்களை நினைவலைகள் கனவில் உருவாக்குவதில்லை. 
அவர்கள் உங்களுடன் பஸ் அருகில் உட்கார்ந்தவர், லிப்ட்லில் வந்தவர், ஷாப்பிங் செல்லும்போது எதிரில் சென்றவர்களாக இருக்கலாம். சமீபகாலமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் நாம் பின் தொடர்பவர்கள் கூட கனவில் வருகிறார்களாம்.

95% கனவுகள் கண் விழிக்கும் போது மறந்து விடுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் நாம் எழுந்தாலும் கனவுகள் மறக்காமல் இருக்க விஞ்ஞானிகள் கனவை ரெக்கார்டு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நம் மனதுக்குள் ஒரு விஷுவலை உருவாக்கும்பொழுது குறிப்பிட்ட நீயூரல் பேட்டர்னை மூளை உருவாக்கும். ஆக, கனவின் போது உருவாகும் காட்சிகளுக்கும் இப்படி ஒரு பேட்டர்னை மூளை உருவாக்கும். அந்த டேட்டாவை பிடித்துவிட்டால், கனவை ரெக்கார்டு செய்துவிடலாம் என்கிறார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். 2013ல் இருந்தே இதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன.

வருங்காலத்தில் நம் கனவுகளை நமது நண்பர்களுடன் சேர்ந்து மொபைல் திரையில் பார்த்து மகிழலாம். கொஞ்சம் ரிஸ்க்கான கனவு என்றால் தனியே பார்த்துக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!