அழகு... அதிர்ச்சி... பிரமிப்பு... பயம்... கண்ணைக் கவரும் காட்டுயிர் புகைப்படங்கள்..! #WildLifePhotography | best wild life photography Award winning photos

வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (17/10/2017)

கடைசி தொடர்பு:19:27 (17/10/2017)

அழகு... அதிர்ச்சி... பிரமிப்பு... பயம்... கண்ணைக் கவரும் காட்டுயிர் புகைப்படங்கள்..! #WildLifePhotography

ஒவ்வொரு வருடமும் உலகின் ஒருவர் சிறந்த காட்டுயிர் புகைப்படத்திற்கான விருதைப் பெறுகிறார். விருது பெறுகிற ஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்னாலும் அது சார்ந்த பயணங்களும் கதைகளும் இருக்கின்றன. காட்டுயிர் புகைப்படங்களைப் பொறுத்தவரை அர்ப்பணிப்பு, பொறுமை, தேடல் அவசியம். காடுகளில் புகைப்படங்கள் எடுக்கிறதென்பது ஆபத்தான செயல். உலகில் யாரும் எடுக்க முடியாத விலங்குகளின் சிறந்த தருணத்தைப் புகைப்படமாக சேமிப்பது மிகப்பெரிய சவால். கடந்த சில ஆண்டுகளாக விருதுபெற்ற புகைப்படங்கள்  மற்றும் புகைப்படக்காரர்கள் பற்றிய ஒரு பார்வை. 

டிம் லமென் - 2016

டிம் லமென் காட்டுயிர்

photo courtesy : Tim Laman

அமெரிக்கப் புகைப்படக்காரர் டிம், இந்தோனேசியாவிலுள்ள குணங் போலுங் தேசியப் பூங்காவில் பெரிய மரத்திலிருந்து இளம்  உராங்குட்டான் குரங்கு ஒன்று இறங்குவதைப் பார்க்கிறார். எப்படியும் உராங்குட்டான் திரும்பி அதே மரத்திற்கு வரும் என்பதால் தன்னிடமிருந்த கோப்ரோ (Go Pro) கேமராவை அந்த மரத்தின் மேற்பரப்பில் பொருத்தி விடுகிறார்.  உராங்குட்டான்  திரும்பி வரும் என்கிற நம்பிக்கையில் மூன்று நாள்களாக அங்கே காத்திருக்கிறார். உணவு தேடச் சென்ற உராங்குட்டான் திரும்பி வருகிறது. அந்த நிமிடங்களுக்காகக் காத்திருந்து, உராங்குட்டான் மரம் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது ரிமோட் மூலமாக இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். முதல் பரிசைப் பெற்ற இந்தப் புகைப்படம் உலக வெப்பமயமாவதைத் தடுக்கும் பொருட்டு விழிப்புஉணர்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு போர்னியோ காடுகளில் ஓரங்குட்டான் வசிக்கிற காடுகளில் 21000 சதுர கிலோ மீட்டர்கள் காட்டுத் தீயால் அழிந்து போயிருக்கின்றன. இதைத் தடுத்தாக வேண்டும் என்கிறார் டிம்.

 

டான் குடோஸ்கி - 2015

டான் குடோஸ்கி காட்டுயிர்

photo courtesy : Don Gutoski 

டான் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவராக இருக்கிறார். நேரம் கிடைக்கும்  கேமராவை எடுத்துக்கொண்டு காடுகளுக்குள் சென்று விடுவார். கனடா நாட்டின் வாபுஷ்க் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட படம்தான் வருடத்தின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில், தொலைவில் செந்நரி ஒரு விலங்கை துரத்திக் கொண்டு போவதைப் பார்க்கிறார். நரியைப் பின்தொடர்ந்துப் போய் பார்த்தபோது, துரத்திச் சென்ற விலங்கைச் செந்நரி கொன்று விடுகிறது. வெகு பக்கத்தில் பார்க்கும் போதுதான் தெரிகிறது இரையாகக் கொல்லப்பட்டது ஆர்டிக் நரி. கொல்லப்பட்ட ஆர்டிக் நரியைச் செந்நரி தூக்கிக்கொண்டு போவதைப் புகைப்படமாக எடுக்கிறார். உயர்ந்து வரும் வெப்பநிலை காரணமாக ஆர்டிக் பனி பிரதேசம் உருகி வருகிறது. இதன் விளைவாகச் செந்நரிகள் தங்களின் இருப்பிடத்தை விரிவு செய்கின்றன. அப்படியான நேரங்களில் இதுபோன்ற மோதல்கள் தவிர்க்க முடியாத ஒன்று என்கிறார் டான்.

மைக்கேல் நிக்கோலஸ் - 2014

மைக்கேல் நிக்கோலஸ் புகைப்படம்

photo courtesy : Michael Nicholas

அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ், தான்சானியாவிலுள்ள செரெங்கெட்டி தேசியப் பூங்காவில் இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். அன்றைய தினம் ஐந்து பெண் சிங்கங்கள் அதன் குட்டிகளுடன் படுத்திருக்கிறது. அதைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதற்கு முன்பு அந்தப் பெண் சிங்கங்கள் இரண்டு ஆண் சிங்கங்களுடன் சண்டையிட்டு வந்திருக்கின்றன. அந்தச் சுவடுகள் இல்லாமல் அவை அங்கிருந்த பாறைகளின் மேல் படுத்திருக்கின்றன. நிக்கோலஸ் இந்தப் புகைப்படம் எடுக்கும் முன்பு ஆறு மாதங்களாகச் சிங்கங்களைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார். நிகோலஸ் சிங்கங்கள் இருக்கிற பகுதிக்கு வருவதும் போவதுமாக இருந்ததால் அவை பழகிவிட்டன என்கிறார்.  அன்றைய தினம் அந்தச் சிங்கங்கள் இருக்கிற பகுதிக்கு அருகில் இருந்துதான் இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். 

கிரேக் டு டோய்ட் 2013

காட்டுயிர்

photo courtesy : Greg Du Toit 

கிரேக் தென் ஆப்பிக்காவைச் சேர்ந்த காட்டுயிர் புகைப்படக்காரர். போட்வானாவின் வடக்கு டூலி விளையாட்டு ரிசர்வ் பகுதியில் இந்த யானைகள் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கிரேக், யானைகள் பற்றிய தேடுதலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். புகைப்படம் எடுக்கப்பட்ட அன்றைய தினம் யானைக்கு மிக அருகில் நின்று இந்தப் படத்தை எடுத்துள்ளார். ”பொதுவாக யானைகளை கேமராவுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். கேமராவின் லோ ஷட்டரைப் பயன்படுத்தி எடுக்கும்போது ஒரு மாயத்தோற்றம் என்னைக் கடந்து போனது போல இருந்தது” என்கிறார் கிரேக்


 


டிரெண்டிங் @ விகடன்