மனித இனம் அழிந்தாலும் இந்த உலகில் நாய்கள் பிழைத்திருக்கும்… எப்படி?

நாய்கள்

நாய்கள் நம் மனித இனத்தோடு ஓர் அங்கமாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு சில வீடுகளில் எல்லாம் வசதியிருந்தால், தங்களின் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளில் கூட அவற்றைச் சேர்த்து விடுவார்கள். நன்றியுள்ள பிராணிகளாக வலம் வரும் நாய்கள் குட்டியிலிருந்து தன்னுடைய வயோதிக இறப்பு வரை ஒரே வீட்டில் அன்போடு வளர்க்கப்படும் கதைகள் ஏராளம். அதன் அன்பும் அரவணைப்பும் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆனால், உண்மையில் மனிதர்களுக்குத்தான் நாய்கள் தேவை. மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும், நாய்கள் நிச்சயம் பிழைத்திருக்கும் என்கிறது அறிவியல். மனித இனம் அழிந்த பின்பு பல நூற்றாண்டுகள் கூட அவை பிழைத்திருக்கும் என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி சாத்தியம்?

நாய்களின் அசாத்திய பரிணாம வளர்ச்சி

அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியில் இருக்கும் அந்த ஆராய்ச்சி அறையைத் தன் உலகமாக மாற்றிக்கொண்ட டாக்டர். ஜாக் செங் ஒரு நாய் பிரியர். நாய்கள் குறித்த ஆராய்ச்சியில் கடந்த பத்து வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து கண்கள் விரிய விவரிக்கிறார்.  

“இந்த உலகில் மனித இனம் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கி தோராயமாக 30 லட்சம் வருடங்கள் ஆகின்றன. நாய்கள் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கி 400 லட்சம் வருடங்கள் ஆகின்றன. அதாவது, நம் மனித இனம் தோன்றுவதற்கு பல காலம் முன்பே நாய்கள் உலகில் கால் பதித்துவிட்டன.”

நாய்கள்

இத்தனை வருடங்கள் ஓர் இனம் பிழைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த இடத்திற்கு மனிதனுக்கு மிக அருகில் வர நாய்கள் பல்வேறு பனியுகங்கள் மற்றும் வெப்பக்காலங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அதற்கு ஏற்றபடி தன் உடல் அமைப்புகளையும் மாற்றிக் கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்தன. உலகின் முதல் நாய் இனம் தற்போதிருக்கும் நாய்கள் போன்று இருந்தது இல்லை. அவை அளவில் மிகவும் சிறியவை மற்றும் மரவாசிகள். பின்னர் மரம் என்ற ஒன்றைத் தாண்டி அவை வாழ ஆரம்பித்தபோது உணவுக்காகப் நீண்டதூரம் செல்ல வேண்டியிருந்தது. எனவே, ஓடுவதற்கு ஏதுவாக அதன் கால்கள் பெரியதாகின. உடலும் அதற்கு ஏற்றவாறு பெரியதானது. பனியுகத்தைச் சமாளிக்க உடல் பெருத்தன. அந்த இனத்திலிருந்து வந்தவைதான் தற்போதிருக்கும் ஓநாய்கள்.

எப்படிச் சாத்தியமானது?

இத்தனை வருடங்கள் நாய்கள் இனம் வாழ முக்கியமான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது அதன் பற்கள். அதன் எலும்புகள் பலம் பெறும்போது அதன் பற்களும் பலம் பெற்றன. அதன் கடைவாய்ப்பல் இரையின் எலும்பைக்கூட உடைக்கக் கூடிய பலம் பெற்றது. முன்கடைவாய்ப்பற்கள் மற்றும் கோரைப்பற்கள் இரையைக் கிழிக்க உதவும். முன்னாளிருக்கும் வெட்டுப்பற்கள் இரையில் துளையிட உதவும். அதன் பற்கள் மனித பற்களைப் போல எளிதில் விழுந்து விடாது. இதனால்தான் நாய்களால் எந்த வகை உணவையும் உட்கொள்ள முடியும். எந்தப் பொருளையும் கடிக்க முடியும்.   

 

“நாம் நினைப்பது போல் நாய்களுக்கு உணவளிக்க, நாம் தேவையே இல்லை. காட்டு விலங்குகளைப் போல, தன் இரையைத் தானே வேட்டையாடும் திறன் கொண்டவை நாய்கள். காடுகள் என்ன, எந்தவித சூழலுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும். இதனால்தான் நாய்கள் மனித இனம் அழிந்தாலும் பிழைத்திருக்கும் என்று கூறப்படுகிறது” என்று முடித்தார் டாக்டர். ஜாக் செங்.

நாய்கள் நிஜமாகவே போராளிகள்தாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!