சே குவேராவின் அந்தப் படம் இவர் எடுத்தது..! ரெனே புர்ரி நினைவு தினப் பகிர்வு | Rene burri the man who took cheguvera's famous photograph

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (20/10/2017)

கடைசி தொடர்பு:18:47 (20/10/2017)

சே குவேராவின் அந்தப் படம் இவர் எடுத்தது..! ரெனே புர்ரி நினைவு தினப் பகிர்வு

``நான், என் கண்கள், மனம், மூளை அனைத்தையுமே இந்த உலகத்தின் ஒரு பகுதியாகவே பயன்படுத்த விரும்புகிறேன், என்னைச் சுற்றி இருப்பவற்றைப் புகைப்படமெடுப்பதற்காக...'' - இவை, உலகப் புகழ்பெற்ற புகைப்படங்கள் பலவற்றை எடுத்த ஸ்வீடன் நாட்டுப் புகைப்படக் கலைஞர் ரெனே புர்ரியின் வார்த்தைகள். இன்று அவரின் நினைவு தினம்.

ரெனே புர்ரி

ஒரு புகைப்படம் நம்மை என்ன செய்யும்?

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். போரில் பாதிக்கப்பட்ட குழந்தை அழும் புகைப்படத்தை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. பசியில் வாடி, இறக்கும் தறுவாயில் உள்ள குழந்தையின் உடலைக் கொத்திச்செல்ல,  அதன் பின்னால் காத்திருக்கும் பிணந்தின்னிக் கழுகின் புகைப்படம், அரசையும் அதிகாரத்தையும் உலுக்கும். கம்பீரம் பொருந்திய தன் தலைவனின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, துவண்டு கிடப்பவர்களுக்குப் புதியதொரு நம்பிக்கை பிறக்கும். புகைப்படங்கள் வெறுமனே படங்கள் மட்டுமே அல்ல. 

ரெனே புர்ரி - சே குவேரா

வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் ஆவணம் சேர்த்ததில் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அத்தகைய புகைப்படக்காரர்களில் `ரெனே புர்ரி' முக்கியமானவர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் சில டாக்குமென்ட்ரிகளிலும் பிறகு ஜெர்மன் நாட்டிலுள்ள கேமரா நிறுவனம் ஒன்றிலும் வேலைசெய்தார். அதன்பிறகு சிலகாலம் `டிஸ்னி'யிலும் வேலைபார்த்த ரெனே, துருக்கி, எகிப்து, சிரியா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பல பத்திரிகைகளுக்குப் புகைப்படம் எடுக்கும் பொருட்டு மூன்று ஆண்டுகள் சுற்றியுள்ளார்.

ரெனே புர்ரி

சே குவேராவின் புகைப்படம்: 

`மேக்னம் போட்டோஸ்' நிறுவனத்தில் ரெனே புகைப்பட நிருபராகப் பணிபுரிந்த காலகட்டத்தில், பல்வேறு நாடுகளின் அரசியல்ரீதியான புகைப்படங்கள் எடுத்துவந்தார். அந்த நேரத்தில்தான் அவருக்கு சே குவேரா-வை புகைப்படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ``சே குவேரா கோபக்கார மனிதர். அவரது அறையில் அவர் கூண்டுக்குள் இருக்கும் புலியைப்போல காட்சியளித்தார்'’என, சே குவேராவை படம் எடுத்த அனுபவத்தைப் பகிர்ந்தார் ரெனே. சே குவேராவை மட்டுமன்றி புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ, ஆர்கிடெக்ட் லீ கோர்புசியர், ஃபிடல் கேஸ்ட்ரோ உள்ளிட்ட பலரின் புகழ்பெற்ற புகைப்படங்களை எடுத்துள்ளார்.

தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளின் வீதிகளையும், பல்வேறுவிதமான மக்களையும் புகைப்படமெடுத்துள்ளார். கறுப்பு-வெள்ளை காலகட்டத்தில் மட்டுமன்றி வண்ணப் புகைப்படங்களின் காலகட்டத்திலும் மகத்தான புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார்.

ரெனே புர்ரி

டாக்குமென்ட்ரி மற்றும் விருதுகள்:

போர் சார்ந்த புகைப்பட நிருபராக இருந்த ரெனே புர்ரி, `தி டூ ஃபேசஸ் ஆஃப் சைனா' என்ற 53 நிமிட டாக்குமென்ட்ரியைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த டாக்குமென்ட்ரியை, பி.பி.சி மற்றும் ஜெர்மன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டன.

இதைத் தவிர, பல்வேறு நாடுகளில் இவர் எடுத்த புகைப்படங்களையும், சே குவேரா, பிகாசோ போன்றோரை எடுத்த புகைப்படங்களையும் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.  புகைப்படத் துறையில் இவரது சாதனைக்காக ஜெர்மன் போட்டோகிராஃபி சொசைட்டி, தி ராயல் போட்டோகிராஃபி சொசைட்டி உள்ளிட்டவை விருது வழங்கியுள்ளன. 2013-ம் ஆண்டில் `இம்பாசிபிள் ரெமினிசென்சஸ்' என்ற இவரது வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டது. 

ரெனே புர்ரி

தன் 13-வது வயதில் முதல் புகைப்படத்தை எடுத்தார் ரெனே புர்ரி. கிட்டத்தட்ட 30,000-க்கும்  மேலான அவர் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. புகைப்படங்கள், நமக்குள் உணர்வுகளைக் கடத்தவல்லவை. அவை நமக்குள் கடத்தும் மகிழ்ச்சி, துக்கம், அதிர்ச்சி அத்தனைக்குப் பின்னாலும் அந்தக் கணத்தை தன் சட்டத்துக்குள் அடக்கிய புகைப்படக்காரர்களின் அசாத்திய உழைப்பும் சில தியாகங்களும் அடங்கியுள்ளன. புகைப்படங்களைக் கொண்டாடும் நாம், அதை எடுத்தவர்களையும் `ரெனே புர்ரி'யின் நினைவு நாளில் நினைவுகூருவோம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close