இந்தியா தீபாவளியைக் கொண்டாடி ஓய்ந்திருக்கிறது. அடுத்து இயற்கை கொண்டாடப்போகிறது. இந்தியாவில் மட்டும் இல்லை; உலகம் முழுவதும். இயற்கை ஒரு பேரதிசயம்தான். அது எப்பொழுதாவது தனது அழகை வெளிக்காட்டும். அதுவும் பரந்த ஆகாய வெளியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வும் நமக்கு பரவச அனுபவத்தை அள்ளிக்கொடுக்கும். அப்படி ஒரு நிகழ்வு இன்று முதல் அடுத்த இரண்டு நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. ஓரியானிட் (Orionid) விண்கற்கள் பொழிவு எனப்படும் இதை வரும் 23-ம் தேதி வரை இரவு வானத்தில் காணமுடியும்.
எப்படி ஏற்படுகிறது இந்த விண்கற்கள் பொழிவு:
இதன் வரலாறு ஹேலி வால்நட்சத்திரத்தில் இருந்து தொடங்குகிறது. நம்மில் பலரும் ஹேலி வால்நட்சத்திரம் பற்றிய தகவல்களை கேள்விப்பட்டிருக்கக்கூடும். வான்வெளியில் சுற்றிவரும் ஹேலி வால்நட்சத்திரம் 75 வருடங்களுக்கு ஒரு முறை நமது சூரிய மண்டலத்தில் நுழையும். இது கடந்த 1986-ம் ஆண்டு நமது சூரிய மண்டலத்தில் தென்பட்டது. அப்பொழுது பூமியில் இருந்தும் பார்வைக்கு புலப்பட்டது. ஹேலி வால்நட்சத்திரம் 2061-ம் ஆண்டில் மீண்டும் நமக்கு காட்சியளிக்கும்.
ஹேலி வால்நட்சத்திரம் மட்டுமின்றி இதுபோன்ற பல வால்நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு பாதையில் பயணிக்கும்போது தனது வழியில் பெரும் சிதறல்களை விட்டுச்செல்லும். வால்நட்சத்திரங்களின் சிதறல்கள் இருக்கும் பாதையில் பூமி பயணிக்கும் வேளையில் அதன் சிதறல்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்பொழுது விண்கற்கள் பொழிவு ஏற்படும். அப்படி தற்பொழுது ஹேலி வால்நட்சத்திரத்தின் பாதையில் நுழையவிருக்கிறது பூமி. அப்பொழுது ஹேலி வால்நட்சத்திரத்தின் சிதறல்கள் வளிமண்டலத்தில் நுழையும். இதுபோன்ற சமயங்களில் சிதறல்கள் வளிமண்டலத்தில் நுழைவது தொடர்ச்சியாக நிகழும்.
எப்பொழுது காண முடியும்:
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இரவு நேரங்களில் ஓரியானிட் விண்கற்கள் பொழிவை காண முடியும். நள்ளிரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை ஒவ்வொரு நாளும் இதைக் காணலாம். 21-ம் தேதி இந்தப் பொழிவு அதிக அளவில் இருக்கும். நள்ளிரவு வானத்தில் தூசிகளும் அதிகமான வெளிச்சம் இல்லாத தெளிவான வானத்தில் இதைக் காண முடியும். வால்நட்சத்திரத்தின் சிதறல்கள் அதிகபட்சமாக 238,000 கி.மீ வேகத்தில் வளிமண்டலத்தில் நுழையும். அப்படி நுழையும்பொழுது காற்று உராய்வின்பொழுது ஏற்படும் வெப்பத்தின் காரணமாக எரிந்து சிதறும். அது நம் கண்களுக்கு வானவேடிக்கைபோல தெரியும்.
தற்போதைய நிலையில், அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 20 முதல் 25 வரையிலான எண்ணிக்கையில் சிதறல்கள் வளிமண்டலத்தில் நுழையும் வாய்ப்பு இருக்கிறது.
Be dazzled by the Orionid meteor shower, peaking Oct 20-21! Watch before dawn in a dark area. May see ~20 meteors/hr https://t.co/skIudgju38 pic.twitter.com/yuCD8MZVi1
— NASA (@NASA) October 21, 2017
நகர்ப்புறங்களில் இருந்து வெளிப்படும் அதிக வெளிச்சத்தால் இதைப் பார்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். எனவே, கிராமப்பகுதிகளில் இருப்பவர்கள் இதைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை வெறும் கண்களிலேயே நம்மால் பார்க்க முடியும் இதற்குத் தனியாக தொலைநோக்கிகள் எதுவும் தேவைப்படாது. அதேபோல இதைப் பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது.
ஒரு வருடத்தில் இது மட்டுமின்றி இதுபோல பல விண்கற்கள் பொழிவுகள் வெவ்வேறு மாதங்களில் நிகழ்கின்றன. இதற்கு முன்னால் இதுபோன்ற ஒன்றை பார்த்திராதவர்களுக்கு இது நிச்சயமாக ஒரு புது அனுபவமாக இருக்கும். தீபாவளியன்று வான வேடிக்கைகளை ரசித்திருப்போம். அதேபோல இயற்கை நிகழ்த்தும் இந்த வானவேடிக்கையும் பார்த்துவிடுங்கள்.
