Published:Updated:

சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம்!

சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம்!
சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம்!

சேலத்தில் டெங்கு தீவிரம் அடைந்திருப்பதை அடுத்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தினந்தோறும் நோய் தடுப்பு மற்றும் விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று சாரதா கல்லூரி அருகே உள்ள பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் விதத்தில் துப்புரவுப் பணிகளையும், விழிப்பு உணர்வு பிரசாரங்களும் செய்துவந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வுசெய்ததை அடுத்து  சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் அந்த மருத்துவமனைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து குடிநீர் இணைப்பையும் துண்டித்தார்.

சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம்!

இன்று காலை சேலம் அஸ்தம்பட்டியிலிருந்து  ஐந்து ரோடு செல்லும் சாலையில் சாரதா கல்லூரி அருகே சண்முகா மருத்துவமனை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டார்கள். அப்போது சண்முகா மருத்துவமனை வளாகத்துக்குள் ஆங்காங்கே மருத்துவக் கழிவுப் பொருள்கள் இருப்பதைப் பார்த்து மருத்துவமனைக்குள் ஆய்வுசெய்யச் சென்றார்கள்.

மருத்துவமனைக்குள் ஆய்வுசெய்ததில் 3 குடிநீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்கள். உடனே மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பன்னீர்செல்வமும் மாநகராட்சி ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார்கள். அதையடுத்து மாநகர ஆணையர் சதீஷூக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே மாநகராட்சி ஆணையர் சதீஷ் சம்பவ இடத்துக்கு வந்தார்.

ஆணையர் வந்த பிறகு தொடர்ந்து ஆய்வுசெய்ததில் 5 குடிநீர் தொட்டிகளில் அதிர்ச்சிக் காட்சிகள் தென்பட்டன. அனைத்துத் தொட்டிகளிலும் புழுக்கள் இருந்ததோடு ஒரு குடிநீர் தொட்டியில் கொடிய விஷம் உடைய பாம்பும் படுத்திருந்தது. அந்த குடிநீரை மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பருகுகிறார்கள். அது தவிர மருத்துவமனை குடோனில் 3 டன் மதிப்புடைய மருத்துவக் கழிவுகள் இருந்ததை அடுத்து அந்த மருத்துவமனைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும், குடிநீர் இணைப்பும், சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகள் வைத்திருந்ததற்காக வழக்கும் போடப்பட்டது.

சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம்!

இதுப்பற்றி மாநகராட்சி கமிஷனர் சதீஷ், ''தினந்தோறும் காலை 300 குழுக்களாக பிரிந்து மாநகராட்சி முழுவதும் நோய் தடுப்பு மற்றும் விழிப்பு உணர்வுப் பேரணிகளை தொடந்து ஒரு மாதமாக நடத்தி வருகிறோம். சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. அது வருத்தம் அளிக்கிறது. சேலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொண்டு மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஆனால், சில தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தராமல் இருக்கிறார்கள். இன்று சண்முகா மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தி ஆவதற்கான பல காரணங்கள் அங்கு இருந்ததோடு, மருத்துவக் கழிவுகளை அங்கு கொட்டி வைத்திருந்தார்கள். அதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்துக்குள் அபராத தொகை கட்டவில்லை என்றால் வருவாய் வரி வசூல் சட்டத்தின் படி அந்த மருத்துவமனையின் சொத்துகளை பறிமுதல் செய்து அபராத தொகையை மாநகராட்சி எடுத்துக்கொள்ளும்'' என்றார்.

இதுகுறித்து சண்முகா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பன்னீர்செல்வம்,''பாம்பு இருந்த அந்த தொட்டியில் உள்ள நீர் செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் தொட்டி. மருத்துவமனையை நாங்கள் சுத்தமாகத் தான் வைத்திருக்கிறோம்'' என்றார்.