நரகத்தின் வாயிலில் ஒரு கடைசிக் கதறல்... மரத்தவளையின் வாயில் பாம்பு! #Viral | Viral photo of a frog eating snake

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (24/10/2017)

கடைசி தொடர்பு:20:02 (24/10/2017)

நரகத்தின் வாயிலில் ஒரு கடைசிக் கதறல்... மரத்தவளையின் வாயில் பாம்பு! #Viral

பாம்பு, தவளையை விழுங்குவதைப் பல முறை நேரிலும் தொலைக்காட்சியிலும்  பார்த்திருக்கிறோம். சில நாள்களாக இணையத்தில் தவளை ஒன்று பாம்பை விழுங்குவதுபோல ஒரு புகைப்படம் சுற்றி வருகிறது. எல்லாம் முடிந்து மரணித்துப் போகிற ஓர்  உயிரினத்தின் கடைசி குரல் எப்படி எல்லாம் ஒலிக்கும், விடுதலையின் கடைசி கட்டப் போராட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த மரத்தவளைப் புகைப்படம் ஒரு சாட்சியாக இருக்கிறது.   

கடந்த வார இணைய  வைரலாக இருந்தது இந்தப் புகைப்படம். தவளை ஒன்று  பாம்பை விழுங்குகிறது. தவளை வாயில் பாம்பின் தலை மட்டும் வெளியில் இருக்க உடல் முழுதும் தவளைக்குள்  சென்றுவிடுகிறது. பாம்பின் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்டது இந்தப் படம்.  இந்தப் புகைப்படம் உண்மையா என்கிற ரீதியில் உலகெங்கும் விவாதங்களும் நடந்துவருகின்றன.

மரத்தவளை


இந்தப் புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது. கடந்த வாரம் ரெட்டிட் இணையதளத்தில் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. பாதுகாப்பு உயிரியலாளர் மற்றும் தேசிய புவியியல் ஆர்வலர் ஜோடி ரவுலி என்பவர் புகைப்படத்தில் இருக்கிற தவளை ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கக் கூடிய பசுமை மரத்தவளை (GREEN TREE FROG) என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.  விழுங்கப்பட்ட பாம்பு கடும் விஷம் கொண்ட பிரௌன் வகை பாம்பு எனக் கண்டறியப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட  இந்தப் புகைப்படம் எந்த மாதிரியான சூழ்நிலையில் எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது, யாரால் எடுக்கப்பட்டது என்கிற எந்தத் தகவலும் இப்பொழுது வரை தெரியவில்லை.

ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா நாடுகளில் பசுமை மரத் தவளை, வெள்ளை மரத் தவளை, டம்பி மரத்  தவளை என மூன்று வகையான தவளைகள் இருக்கின்றன. தவளை இனத்தின் முக்கிய இனம் பசுமை மரத் தவளை இனம். மரப்பொந்துகளிலும் பாறைகளுக்கு அடியிலும் வாழ்கிற மரத்தவளைகள் இரவு நேரத்தில் இரையைத் தேடி வெளியே வரும். மரத்தவளைகள்  புழு பூச்சிகள் கரையான் எனச் சிறிய வகை உயிரினங்களை உணவாகக் கொள்கின்றன. சமயத்தில் பாம்புகளையும் உண்ணும் பழக்கமுடையவை. பல மருத்துவ குணங்கள் இருக்கிற இந்தத் தவளை இந்தோனேசியா விலங்குகள் சந்தையில் அதிக டிமாண்டில் விற்பனையாகிற பட்டியலில் இருக்கிறது. பாங்காக்கில் இருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிற இத்தவளைகளைப் பாதுகாப்பு பட்டியலில் வைத்துக் கண்காணித்துவருகிறது ஆஸ்திரேலியா அரசு.

மரத்தவளை

 

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப எல்லா தவளை இனங்களும் தனது உடலின் வெப்பநிலையைத் தகவமைத்துக்கொள்ளும். தோல் மூலம் சுவாசிக்கும் தன்மை, அமினியாட்டிக் திசுவால் சூழப்பட்ட கருவைப் போன்ற பண்புகளைத் தவளை கொண்டுள்ளதால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மோசமான மாற்றங்களை இவற்றால் தாங்கிக்கொள்வது கடினம். அதனால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களால், தவளைகளின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் தவளை முக்கிய இரைக்கொல்லிகளாக உள்ளன. ஒரு தவளை மூன்று மாதங்களில் சுமார் 10,000 பூச்சிகளை உணவாகச் சாப்பிடும். பறவைகள், பாம்புகள், என சில உயிரினங்களுக்குத் தவளைகள் உணவாகின்றன. காலம் மாறும் காட்சிகள் மாறும் என்கிற இயற்கையின் அடிப்படையில் இப்போது பாம்புகள் தவளைகளுக்கு உணவாக இருக்கின்றன. வல்லவனுக்கு வல்லவன் பாம்பாகவும் இருக்கலாம். தவளையாகவும் இருக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்