
பழுதடைந்த கட்டடத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள்..!

திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனை, செவந்தலிங்கபுரம், உமையாள்புரம், சந்தப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மருத்துவமனையாக விளங்குகிறது. இதற்காகவே இம்மருத்துவமனையில், அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் படுக்கை வசதியுடன்கூடிய உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, ஸ்கேன், இ.சி.ஜி, எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில், உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் கட்டடம் உள்ளிட்டவை கடந்த 1972-ம் ஆண்டு கட்டப்பட்டவை. 40 வருடங்களுக்கும் மேலான இந்தக் கட்டடத்தின் மேற்கூரை பழுதடைந்து, சிமென்ட் காரைகள் பெயர்ந்த நிலையில் இருந்தது. இதையடுத்து, பராமரிப்புப் பணிகளுக்காக கட்டடத்தின் சீலிங், சிமென்ட் காரைகள் பெயர்க்கப்பட்டதால், கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறாதநிலையில், நோயாளிகள் பழுதடைந்த கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “கட்டடங்கள் பழுதாகிப்போனதால், அதைப் புனரமைக்கத் திட்டமிட்ட அரசு, அதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கையில், பாதுகாப்பு இல்லாத அறைகளில் தங்கவைக்கப்பட்டிருப்பது தவறு. நோயாளிகளைப் பாதுகாப்பான கட்டடங்களில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கலாம். இதேபோல, மருத்துவமனையில் உள்ள இன்னொரு கட்டடத்தில், செடி வேர்விட்டு வளர்ந்து மரமாகி, கட்டடத்தின் சுவர் சேதமடைந்துள்ளது. இவை அனைத்தையும் சரிசெய்யும் பணி, கடந்த சில தினங்களாக நடக்கிறது. ஆனால், பணி அக்கறையின்மையால், சிமென்ட் பூச்சுகள் பெயர்த்து எடுக்கப்பட்டும் கிடக்கிறது. இந்தக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தபிறகே, நோயாளிகளுக்குப் பாதிப்பு, இடையூறு இல்லாமல் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் விபத்துகள் தவிர்க்க முடியாமல் போய்விடும்' என நொந்துகொண்டார்கள்.
இதுகுறித்துப் பேசிய மருத்துவமனை ஊழியர்கள், “கட்டடம் பழுதடைந்து இருந்த நிலையில், பழுதடைந்த பகுதிகளைப் புனரமைப்புச் செய்யும் பணிகள் நடந்துவருகின்றது. தற்போது மணல் தட்டுப்பாடு நிலவுவதால், கட்டடப்பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால், மேல் சீலிங் அதிகமாகப் பழுதடைந்ததுபோல இருக்கும். உண்மை அது இல்லை. உள்நோயாளிகள் பிரிவுக்கும் அருகில் உள்ள கட்டடங்களில் மரம் வளர்ந்திருந்ததைச் சரிசெய்து பணிகள் நடக்கிறது. மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்தப் பகுதியில் அதிகமாக உள்ளதால், மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனால், உள்நோயாளிகள் பிரிவு கட்டடத்தில், நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பராமரிப்புப் பணிகள் நடக்கும் கட்டடத்தில் நோயாளிகளைத் தங்கவைத்ததுதான் நாங்கள் செய்த தவறு. அதுவும் தவிர்க்க முடியாமல் நடந்ததுதான். அதுமட்டுமல்லாமல், அரசு மருத்துவமனையில், பழைய கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டவும் அரசுக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது. அது கிடைக்கும்வரை புனரமைப்புசெய்யப்படும் பழைய கட்டடத்தில் நோயாளிகளைத் தங்கவைப்பது தவிர்க்க முடியாது” என்றார்கள்.