இசை எங்கிருந்து வருகிறது தெரியுமா? - நம்பிக்கை குட்டிக் கதை #FeelGoodStory

பெரிய சாதனைகள் புரிவதற்கு முதலில் தேவை தன்னம்பிக்கை’ - அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson). `என்னால் எதையும் செய்ய முடியும்’ என்கிற தன்னம்பிக்கை உள்ளவர்களால்தான் இமயமலையின் உச்சியில் ஏற முடிகிறது; வியாபாரமோ, இலக்கியமோ... தாங்கள் சார்ந்த துறையில் உச்சம் தொட முடிகிறது; வாழ்க்கை முழுக்க எதிர்ப்படும் சவால்களையெல்லாம் துணிவோடு எதிர்கொள்ளும் திராணி கிடைக்கிறது. அப்படி, தன் தன்னம்பிக்கையின் அருமையை ஓர் இசைக் கலைஞன் உணர்ந்துகொண்ட கதையைப் பார்க்கலாமா?

உன்னை அறிந்தால்

அது ஓர் அரங்கம். ஆங்கிலத்தில் `ஓபரா ஹவுஸ்’ (Opera House) என்று சொல்வார்கள். இசைக்குழுவினரின் (Orchestra) கச்சேரிகளையும், தனி இசை நிகழ்வுகளையும் நிகழ்த்துவதற்கான பிரத்யேக அரங்கம் அது. உட்கார இருக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை, நின்றுகொண்டேகூடப் பார்ப்போம் என்பதுபோல அரங்கின் மூலை, முடுக்குகளில்கூட நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருந்தார்கள் ஜனங்கள். அன்றைக்குப் பிரபல வயலின் கலைஞர் ஒருவரின் இசை நிகழ்வு அங்கே நடைபெறவிருந்தது. அவருக்காகத்தான் கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. அவர் வயலின் மேதை நிக்கோலோ பாகானினி (Niccolo Paganini).

வயலின்

நிக்கோலோ பாகானினி... இத்தாலியைச் சேர்ந்த பிரபல வயலின் கலைஞர். `நவீன வயலின் தொழில்நுட்பத்தின் தூண்களில் ஒருவர்’ என்று போற்றப்படுபவர். மயங்கவைக்கும் அவருடைய வயலின் இசைக்குப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள். இசை நிகழ்வு ஆரம்பிக்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. பாகானினி தன் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தார். கண்ணாடியில் தன் முகத்தைப் இசை நிகழ்ச்சிபார்த்துக்கொண்டார். கலைந்திருந்த தலைமுடியைச் சீர்ப்படுத்திக்கொண்டார். தன் மேல் கோட்டை எடுத்து அணிந்துகொண்டார். ஒரு நிமிடம் கண்ணை மூடி அப்படியே நின்றார். அன்றைக்கு அவர் வாசிக்கத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இசைக்குறிப்புகளை, பிரதானமாக அவர் இசைக்கவேண்டிய இசையை நினைவுபடுத்திக்கொண்டார். பிறகு, தன் வயலினை எடுத்தார். மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

மேடையை நெருங்கும்போது உள்ளுக்குள் ஏதோ உறுத்தல். `என்ன இது... ஏதோ தவறாகப்படுகிறதே!’ என யோசிக்க ஆரம்பித்தார். ஏதோ நினைவுக்கு வந்தவராக தன் கையில் இருந்த வயலின் பெட்டியைப் பார்த்தார். அதிர்ந்துபோனார். அவர் கையிலிருந்தது அவருடைய வயலின் அல்ல; வேறொரு வயலின். அதற்குள், அரங்கத்துக்குள் பாகானினி வருவதற்கான அறிவிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மக்களின் ஆரவாரம் அரங்கத்தைத் தாண்டி ஒலித்தது. `ஐயோ... என்னுடைய மதிப்புக்குரிய வயலின் எங்கே? அது இல்லாமல் இன்றைக்கு எப்படி இந்த இசை நிகழ்வை நிகழ்த்துவேன்?’ லேசாகக் கலக்கம் அவரைத் தொற்றிக்கொண்டது. பாகானினி போற்றிப் பாதுகாத்துவைத்திருந்த வயலின் பிரபல வயலின் தயாரிப்பாளர் கார்னரி (Guarneri) என்பவரால் தயாரிக்கப்பட்டது. `இன்று என்னால் சரியாக இந்த நிகழ்வை நிகழ்த்த முடியுமா?’ என்று தனக்குத் தானே ஒருமுறை கேட்டுக்கொண்டார்.

முடியும் என்ற தன்னம்பிக்கை வார்த்தை

ஆனால், பாகானினிக்கு அன்று வேறு வழியிருக்கவில்லை. அந்த வயலினை வைத்துத்தான் அவர் இசை நிகழ்வை நிகழ்த்தியாக வேண்டும். அதற்குள் அரங்கத்தின் திரை உயர்ந்துவிட்டது. பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். பாகானினி தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொண்டார். பார்வையாளர்களுக்கு வந்தனம் சொன்னார். தன் கையிலிருந்த வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அதுவரை தான் கற்றுவைத்திருந்த இசையை, தன் திறமை அத்தனையையும் பயன்படுத்தி வயலினில் இசைக்க ஆரம்பித்தார். அன்று மேடையில் நிகழ்ந்தது மாயாஜாலம். அவரின் வயலின் இசையில் கூட்டம் சொக்கிப்போய்க் கிடந்தது. இசை நிகழ்வு முடிந்ததும், பார்வையாளர்கள் அத்தனைபேரும் பாகானினிக்கு மரியாதை செலுத்தும்விதமாக, எழுந்து நின்று கைதட்டினார்கள். `பாகானினியின் வாழ்நாளில் அப்படி ஓர் இசை நிகழ்வை அவர் நிகழ்த்தியதில்லை’ என்பது அத்தனைபேரின் கருத்தாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து, தன் டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினார். அங்கே அவரின் உறவினர்களும் நண்பர்களும் அவரை வாழ்த்தக் காத்திருந்தார்கள். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார்...  “அற்புதமான இசை நிகழ்வு பாகானினி... இதுவரை இப்படி ஒரு வயலின் இசையை நான் கேட்டதே இல்லை. எப்படி உங்களால் இப்படி ஓர் இசையைத் தர முடிந்தது?’’

தன்னம்பிக்கை  உணர்த்தும்  குட்டிக் கதை

பாகானினி மெதுவான குரலில் சொன்னார். “நன்றி நண்பா, என் இசைப் பயணத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை இன்று நான் கற்றுக்கொண்டேன். இன்று வரை என் வயலினில்தான் இசை இருந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றுதான் இசை, எனக்குள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அதுதான் இந்த நிகழ்ச்சி அருமையாக அமைந்ததற்கான காரணம்.’’

அன்றைக்கு அவருக்குத் தன் வயலின் இல்லையென்றாலும், வேறொரு வயலினைக் கொண்டு இசைக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை இருந்தது. அதனால்தான் அவரால் அற்புதமான ஓர் இசை நிகழ்வை நிகழ்த்த முடிந்தது. தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல... நம்மை வாழ்க்கையில் மேலே மேலே உயர்த்திச் செல்ல உதவும் ஏணி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!