Election bannerElection banner
Published:Updated:

கோவையில் களைக்கட்டும் கள் விற்பனை!

கோவையில் களைக்கட்டும் கள் விற்பனை!
கோவையில் களைக்கட்டும் கள் விற்பனை!

கோவையில் களைக்கட்டும் கள் விற்பனை!

கோவை மாவட்டத்தில் மதுபான கடைக்கு எதிராக ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தீவிரமான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் கணிசமாக தொடங்கிய கள் விற்பனை இன்று கோடிகளில் விற்பனையாகும் அளவுக்கு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி மது விற்பனை கடந்தாண்டைவிட குறைந்துள்ளது.

கோவை மாவட்டம், மேற்குமலைத்தொடர்ச்சியில் ஆனைகட்டியை ஒட்டியிருக்கும் மலை கிராமங்களில் மதுபானக் கடை கிடையாது. அவர்கள் மது வாங்க 12 கிலோ மீட்டர் தூரம் வந்தால் மட்டுமே முடியும். அருகிலுள்ள கேரள எல்லை ஆனைகட்டி,  அகழி  மது இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு மது விற்பனை கிடையாது. இதனால் குடிமகன்கள் அதிக விலை கொடுத்து கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்துவந்தனர். 

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் , ''ஆனைகட்டி கொண்டனூர் புதூருக்கிடையேயுள்ள தோட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக லிட்டர் 100 ரூபாய் என கள் விற்பனை தொடங்கி, தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 100 லிட்டர் கள் விற்கப்படுவதாகவும் , தமிழகம் கேரளாவைச் சேர்ந்தவர்கள் கள் வாங்க வருவதால் காலை ஆறு மணிக்கு தொடங்கும்  விற்பனை இரண்டு மணி நேரத்தில் விற்று விடுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு கள் வாங்க வந்து திரும்பிச்செல்வது வாடிக்கையாகி விட்டது. கேரளாவில் இருந்து வருபவர்கள் முன்தினமே தொலைபேசியில் பதிவுசெய்து விடுவதால் உள்ளூர் காரர்களுக்கு கள் கிடைக்கவில்லையாம்.

மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை தொடர்ச்சியாக  நடைபெறும் மலைப்பகுதியில் கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது குறித்து அப்பகுதி மக்கள் ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதேபோல சூலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு லிட்டர் கள் 60 ரூபாய் என தினமும் 100 லிட்டர் வரை கள் விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் காவல்துறையினருக்கு அதிகமாக கள்ளில் இருந்து பணம் வருவதால் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்'' என்றனர்.

கோவை மாவட்டத்தில் துடியலூர் மற்றும் மாதப்பூர், இராவூத்தர் பிரிவு, பாப்பம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட இடங்களில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பது சிறு தொழிலாக மாறியிருக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு