வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (26/10/2017)

கடைசி தொடர்பு:14:28 (26/10/2017)

செல்லூர் ஆர்மி, பன்னீர் ஆர்மி, ஆன்டி இந்தியன் ஆர்மி! - இது ரணகள பாகுபலி

சமூக வலைதளங்களில் வைரலாகும் நபர்களுக்கு ஆர்மி அமைப்பதுதானே இப்போதைய டிரெண்ட். நாட்டின் எல்லையில் உள்ள ஆர்மியைவிட, ஃபேஸ்புக், ட்விட்டர் ஆர்மிகள்தான் ஆல்டைம் அலெர்ட். `பிக் பாஸி'ல் ஃபேமஸான ஓவியாவில் தொடங்கி `ஜிமிக்கி கம்மல்' ஷெரில் வரை ஆர்மி அமைத்து அழகுபார்த்தனர் மக்கள். ஆனால், ஆல்டைம் வைரலாகவே இருக்கும் முக்கியமான புள்ளிகள் சிலருக்கு ஆர்மி அமைத்தால் எப்படியிருக்கும்? அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்மியைப் பற்றி பார்ப்போம்.

‘ஆன்டி இண்டியன்' ஆர்மி:  

ஆர்மி

ஒரே வார்த்தை மூலம் ஓவர்நைட்டில் வைரலாகி மீம் க்ரியேட்டர்களின் செல்லப்பிள்ளையானவர் ஹெச்.ராஜா. பழக்கதோஷத்தில் மோடியைப் பார்த்து `ஆன்டி மோடி, மைண்ட்செட்டை மாத்துங்க' எனச் சொல்லும் அளவுக்கு மைண்ட் செட்டாகிப்போனவர். ‘‘ ‘மெர்சல்‘ படத்தை இன்டர்நெட்டில்தான் பார்த்தேன்” எனக் கூறி, பிறகு ‘சில காட்சிகளை மட்டும் பார்த்தேன்' என உளறித் தள்ளி சமீபத்தில் டிரெண்ட் அடித்தவர். இவர் எந்த ஆங்கிளில் அம்பு விட்டாலும் அது  ரிவர்ஸில் வந்து அவரையே பதம்பார்க்கும் சிறப்புமிக்கவர். இனிமேல் தமிழகத்தில் பிறக்கப்போகும் பல குழந்தைகளுக்கு மத, இன, பாலினப் பேதம் மறந்து ‘ஜோசப்’ எனப் பெயர் வைக்க வித்திட்ட காரணத்துக்காகவே இவருக்கு ஆர்மி அமைக்கலாம்.

‘நாஞ்சில்’ ஆர்மி: 

ஆர்மி

‘காறித் துப்பினால் துடைச்சிருவேன்' என குபீர் பேச்சின் மூலம் வைரலான நாஞ்சில் சம்பத், எந்தப் பஞ்சாயத்தாக இருந்தாலும் களத்தில் தனி ஆளாக நிற்பவர். ‘இன்னோவா’ வாங்கியதிலிருந்தே அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக இருந்தவர், தற்போது சமூக வலைதளங்களில் பலரின் மீம் மெட்டீரியலாக இருக்கிறார். எத்தனை பேர் புதுசு புதுசாக வைரலானாலும், ஆல்டைம் ஹிட் லிஸ்ட்டிலிருப்பது இவரின் சிறப்பம்சம். டெங்கு, மெர்சல் போன்ற சமீபத்திய விஷயங்களில் இவரின் கருத்துக்காகப் பலரும் காத்திருக்கிறார்கள். இவருக்கு ஒரு ‘ஆர்மி’ அமைத்தால் அவரே கொ.ப.செ-வாகச் செயலாற்றுவார் என்பது தனிச்சிறப்பு.

‘பன்னீர்’ ஆர்மி:

ஆர்மி

ஜெயலலிதா இறப்புக்கு முன்னால் ‘மாணிக்கமாக’ மீசை வைத்த குழந்தையாக வலம்வந்தார். ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு கிடைத்த முதலமைச்சர் பதவியும் பறிக்கப்பட, `பாட்ஷா'வாக மாறி தர்மயுத்தம் நடத்தத் தொடங்கினார். ஒரே தியானத்தில் ஃபேமஸானவருக்கு ஆதரவாக ‘பன்னீருனா, பொட்டு வெச்சுட்டு பொங்கல் சாப்பிட்டுட்டு இருப்பார்னு நினைச்சுயா? பன்னீருடா..!’ எனப்  பொங்கி மீம்ஸ் போட்டனர் நெட்டிசன்கள். அடுத்தடுத்து பிரஸ்மீட், எம்.எல்.ஏ-க்கள் சேர்ப்பு என திரைக்கதையில் பல ‘டிவிஸ்ட்’களை வைத்தார். ‘பிரேக்கிங் நியூஸ்' என்ற ஒன்றே இவருக்காகவே உருவானது எனச் சொல்லும் அளவுக்கு ஃபேமஸானவருக்கு ஆர்மி அமைத்தால், ஹா..... ஹா... அள்ளும்!

‘செல்லூர்’ ஆர்மி: 

ஆர்மி

‘செல்லூர்’ என்றாலே ஊர் என்பதை மறந்து, இவரின் ஞாபகம் வரும் அளவுக்குப் பிரபலமானவர் அமைச்சர் ‘செல்லூர்’ ராஜு. வைகை ஆற்றின் நீர் ஆவியாவதைப் பார்த்து மனம் வாடி ஒரு லோடு ‘தெர்மாகோல்களுடன்' ஆற்றை நோக்கி ஓடிய பெருமைக்குரியவர். டெங்குக் காய்ச்சலுக்கு `நிலவேம்புக் கஷாயம்' குடிக்கலாமா, வேண்டாமா என ஊரே விவாதம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், டெங்குவை ஒழிப்பதற்கு ‘வீட்டு வாசலில் சாணம் தெளிக்கும் திட்டத்துக்கு' ஐடியா கொடுத்தவர். இவரை செல்லமாக ‘விஞ்ஞானி' என்று அழைத்த மக்கள் இவருக்கும் ‘ஆர்மி’ அமைத்திருக்கலாம்.

‘சுப்பிரமணியன் சுவாமி’ ஆர்மி:  

ஆர்மி

அறிமுகமே தேவைப்படாத அளவுக்கு எசகுபிசகான கருத்துகளைக் கூறி மக்களிடம் பிரபலமானவர் சுப்பிரமணியன் சுவாமி. ‘ஜல்லிக்கட்டு’க்காக தமிழகமே வீதியில் இறங்கிப் போராடியபோது ட்விட்டரில் தமிழர்களை ‘பொறுக்கி’ எனத் திட்டி மக்களை படுபயங்கரமாக எதிர்வினையாற்றவைத்தவர். வான்டட்டாக வந்து எல்லா பிரச்னைகளுக்கும் கருத்து கூறி மீம் க்ரியேட்டர்களிடம் புதுப்புது டிசைன்களில் அன்பளிப்பைப் பெறுவது இவரது வழக்கம். சமூக வலைதளங்களில் ‘ட்ரோல்’ செய்து பழகும் பலரும் இவரை வைத்து ஆரம்பிப்பது இவரின் திறமைக்குக் கிடைத்த பரிசு. எந்த நேரமும் ட்விட்டரில் ஏதாவது கருத்துச் சொல்லி களேபரம் நடத்தும் இவருக்கு ஒரு ‘ஆர்மி’ ஆரம்பித்தால் ஆல்டைம் வைரல் கியாரன்டி. 

‘ராஜேந்திர’ ஆர்மி: 

ஆர்மி

சினிமாவில் கூட்டத்தோடு கூட்டமாக வரும் `ஜூனியர்' ஆர்டிஸ்ட்போல இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘தனியார் பாலில் கலப்படம் உள்ளது' எனக் கொளுத்திப் போட்டதன் மூலம் ஓவர்நைட்டில் ஹீரோவானவர். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற ஏரியாக்களில் தாமதமாகவே கவனிக்கப்பட்ட இவர், தனது அடுத்தடுத்த பேட்டிகள் மூலம் ‘நெட்டிசன்களால்’ தவிர்க்க முடியாத சக்தியானார். சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் “நம்மகூட மோடி இருக்கார், நமக்குதான் சின்னம். எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்” என அறைகூவல் விடுத்தார். எப்போது ‘என்ட்ரி’  கொடுத்தாலும் ‘ஸ்லீப்பர் செல்’, கலப்படம் என கிளப்பும் ராஜேந்திர பாலாஜிக்கு ஆர்மி அமைத்தால், அவரே கமாண்டோவாகவும் செயலாற்றுவார்.

இன்று நாம் சமூக வலைதளங்களில் ‘ஆர்மி’ அமைக்கலாம். அதற்கான விதை, மேற்கூறியவர்கள் போட்டது. ஆக மக்களே!  நம் முன்னோர்கள் ஒன்றும் சாதாரணமானவர்கள் அல்ல... ஆர்மி அமைக்கவைத்த ஆல்ரவுண்டர்கள்!


டிரெண்டிங் @ விகடன்