வெளியிடப்பட்ட நேரம்: 07:38 (27/10/2017)

கடைசி தொடர்பு:07:38 (27/10/2017)

‘4 மினிட் மைல்’... ஓடு... ஓடிக்கொண்டே இரு! நன்னம்பிக்கை கதை #FeelGoodStory

கதை

ற்றவர்கள், `முடியாது’ என நினைக்கும் ஒன்றைச் செய்து முடிப்பது சாதனையாளர்களுக்கு மட்டுமே சாத்தியம். அதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் ஒரே ஆயுதம்... நம்பிக்கை! உலகமே அதுவரை `இது சாத்தியமில்லை’ என நினைத்திருந்த ஒன்றைச் செய்து சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரு தடகள வீரரின் கதை... அல்ல... வரலாறு இது! 

கதை

லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் பெரிய நகரம் ஹாரோ (Harrow). அதுதான் ரோஜர் பேனிஸ்டர் (Roger Bannister) பிறந்த ஊர். பேனிஸ்டரின் அப்பா சாதாரண கூலித் தொழிலாளர். பள்ளிப் படிப்பைப் படிக்கவைக்கவே மிகவும் சிரமப்பட்டார். ஆனால், பேனிஸ்டருக்கு மருத்துவம் படிக்கவேண்டும், ஒரு மருத்துவராக லண்டனில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று ஆசை. அதே நேரத்தில் தன் குடும்பத்தால் நிச்சயம் தன்னை மருத்துவம் படிக்கவைக்க முடியாது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், தன்னிடம் இருக்கும் ஒரு திறமை மருத்துவம் படிக்கக் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை பேனிஸ்டருக்கு இருந்தது. அது... ஓட்டம்! 

பேனிஸ்டருக்கு ஓடுவது பிடிக்கும். அதிலும் அதிவேகமாக விரைகிற ஒரு ட்ரெயினோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடுவது என்றால் அலாதிப் பிரியம். பத்து வயதில் ஆரம்பித்த அந்தப் பழக்கத்தின் மீதான ஈடுபாடு வயதாக ஆக அதிகமானதே தவிர, குறையவில்லை. ஒரு ட்ரெயின் தண்டவாளத்தில் விரைந்துகொண்டிருக்கும். அதை ஒட்டிய சாலையில் பேனிஸ்டர் ஓடிக்கொண்டிருப்பார். பார்க்கிறவர்களுக்கு `இந்தப் பையன் என்ன லூஸா, ஏன் இப்படி ஓடுகிறான்?’ என்று தோன்றும். அவர் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை; அக்கம் பக்கத்தில் எதையும் பார்க்கவில்லை; யார் என்ன சொல்வார்களோ என்று யோசிக்கக்கூட இல்லை... அந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயினை முந்திவிட வேண்டும் என்கிற இலக்கு மட்டும்தான் அவருக்கு. ஓடிக்கொண்டே இருந்தார் பேனிஸ்டர். 

ஓடு - கதை

பள்ளிப் படிப்பு முடிந்தது. பேனிஸ்டர் நினைத்தது நடந்தது. ஓட்டத் திறமைக்காகவே அவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஸ்காலர்ஷிப் கொடுத்து, மருத்துவம் படிக்கத் தன் கதவுகளை விரியத் திறந்துவிட்டது. அங்கே அவரின் ஓட்டத் திறமைக்குப் பல வாய்ப்புகள்... அத்தனையிலும் பிரகாசித்தார். அது, 1948-ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடந்துகொண்டிருந்த நேரம். பேனிஸ்டர் அந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அந்தப் போட்டியை உற்று கவனித்ததில், அடுத்த ஒலிம்பிக்கில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டது. 

1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்து சார்பாகக் கலந்துகொண்டார் பேனிஸ்டர். எப்படியும் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பேனிஸ்டர் வெற்றி பெறுவது நிச்சயம் என ஒட்டுமொத்த இங்கிலாந்தே எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சில குளறுபடிகள்... ஷெட்யூல் மாற்றப்பட்டது... பேனிஸ்டரின் வழக்கமான ஓய்வு நேரம் பாதிக்கப்பட, நான்காவது இடத்துக்குத்தான் அவரால் வர முடிந்தது. 

கதை - ஓடு

அடுத்த இரண்டு மாதங்கள்... நரகவேதனை தந்த காலம் பேனிஸ்டருக்கு! ஓடுவதைத் தொடர்வதா, விட்டுவிடுவதா என்கிற மிகப் பெரிய கேள்வி. ஒலிம்பிக்கில் தோற்றுவிட்டுத் திரும்பிய பின்னர் ஏற்பட்ட கேலிப் பேச்சுகள், அவமானங்கள் பேனிஸ்டரைத் துளைத்தெடுத்தன. அதனாலேயே அதை விட்டுவிடலாம் என்கிற எண்ணம். அதே நேரத்தில், `ஓட்டத்தை விடாதே! அதுதான் உன்னை உலகமறியச் செய்யும்’ என உள்ளே ஒலித்த குரலை அவரால் அலட்சியம் செய்ய முடியவில்லை. `சரி... ஓடுவோம்’ என முடிவெடுத்தார். ஆனால், அந்த ஓட்டம் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இருக்க வேண்டும் என்கிற வெறி பிறந்தது... அதற்காக அவர் கையில் எடுத்த அந்த ஓட்டம், `4 மினிட் மைல்!’ (4 Minute Mile). 

அதுவரை ஒரு மைல் தூரத்தை யாரும் 4 நிமிடங்களுக்குள்ளாக ஓடிக் கடந்ததில்லை. உலக அளவில், `அது சாத்தியமில்லை’ என்பதே பொதுக் கருத்தாக இருந்தது. `மனித உடல் அதற்குத் தகுதி வாய்ந்ததல்ல. அதற்காக முயற்சி செய்தால் நுரையீரல் வெடித்து, மரணம்கூட ஏற்படலாம்’ என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்று. ஆனாலும், சிலர் 4 நிமிடங்களுக்குள் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடந்துவிட முயற்சி செய்துகொண்டுதான் இருந்தார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் லேண்டி (John Landy). பேனிஸ்டரும் அந்த முயற்சியில் இறங்கினார். பயிற்சி... இடைவிடாத, கடுமையான பயிற்சி. அது மட்டும்தான் அவருடைய அத்தியாவசியத் தேவையாக அன்றைய தினங்களில் இருந்தது. 

கதை - ஓடு... ஓடிக்கொண்டே இரு

அது, 1954-ம் வருடம், மே மாதம், 6-ம் தேதி. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஓட்டப் பந்தய மைதானம். ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். `4 மினிட் மைல்’ சாதனை நிகழுமா என்கிற எதிர்பார்ப்பு அத்தனை பேர் முகத்திலும். அன்றைக்கு அந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை என்றால், ஆஸ்திரேலியாவின் ஜான் லேண்டி அதைச் செய்துவிடுவார் என்று நினைத்தார் பேனிஸ்டர். வெற்றி... அதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அன்று காலையிலிருந்தே தட்பவெப்ப நிலை சரியாக இல்லை. காலையில் பலத்த காற்று; மாலையில் மழை! காற்றும் சேர்ந்து சுழன்றடித்துக்கொண்டிருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படவில்லை பேனிஸ்டர். ஓட்டம் ஆரம்பமானது. ட்ராக்கில் இறங்கி ஓட ஆரம்பித்தார்.

அந்தப் போட்டியில் ஆறு பேர் கலந்துகொண்டார்கள். பேனிஸ்டருடன் பிரேஷர் (Brasher) என்பவரும் முன்னணியில் இருந்தார். இருவரும் மாறி மாறி முந்திக்கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக பேனிஸ்டர் ஓடும் வேகம் கூடியது. கிட்டத்தட்ட பறந்தார் என்றுகூடச் சொல்லலாம். அன்றைக்கு `4 மினிட் மைல்’ ஓட்டத்தில் பேனிஸ்டர் ஒரு மைல் தூரத்தைக் கடந்த நேரம், 3:59.4. அது உலக சாதனை. நினைத்ததைச் சாதித்துவிட்டார் பேனிஸ்டர். எத்தனையோ பேர் சாத்தியமில்லை என நினைத்ததை சாத்தியமாக்கினார். வரலாறு படைத்தார். இப்போதும் நிறையபேர் `4 மினிட் மைல்’ பந்தயத்தில் புதிய சரித்திரம் படைக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் பேனிஸ்டர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்