ஃபீலிங்க்ஸ், தனிமை... அட பிரேக் அப்ல இருந்து வெளிய வாங்க கேர்ள்ஸ்! | How to come out of a breakup

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (28/10/2017)

கடைசி தொடர்பு:13:42 (28/10/2017)

ஃபீலிங்க்ஸ், தனிமை... அட பிரேக் அப்ல இருந்து வெளிய வாங்க கேர்ள்ஸ்!

பிரேக் அப்... 

நாம் ஆழமாக நேசித்தவர், நம்மைவிட்டு விலகும் அந்தத் தருணம் மிகவும் துன்பமானது. வாழ்க்கையின் அத்தனை இன்பங்களும் பனியாகக் கரைந்து, துன்ப சூரியன் உக்கிரமாகத் தீண்டுவதுபோல இருக்கும் நேரம். ஆனால், அது மீண்டு வரவேமுடியாத நிலையில்லை. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அரளி விதை, மாத்திரை, தூக்குக் கயிற்றைத் தீர்வாக நினைப்பீர்கள்? அட பிரேக்அப்ல இருந்து வெளியே வாங்க! 

பிரேக் அப்

நீங்கள் செய்யவேண்டிய முதல் விஷயம் 

மீண்டும் மீண்டும் முறிந்துபோன அந்த உறவை ஒட்டவைக்க முயற்சி எடுக்காதீர்கள். அது முடிந்துவிட்டது என்ற உண்மைக்கு நீங்கள் வர வேண்டும். கெஞ்சிக் கூத்தாடி உங்கள் சுயமரியாதையை இழக்காதீர்கள். அந்த நபரின் போன் நம்பரை பிளாக் செய்துவிடுவது நல்லது. அவருடைய முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்குச் செல்வதை விடுங்கள். அது உங்களை மேலும் மேலும் துன்பத்தில் ஆழ்த்தும். 

அப்படிச் சொல்லியிருக்கலாமோ? 

‘நான் ஒருவேளை அதைச் செய்திருக்கலாமோ? அப்படி நடந்துகொண்டிருக்கலாமோ?’ என்று உங்களைக் குற்றம்சாட்டுவதை நிறுத்துங்கள். தேவைப்பட்டால் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். அல்லது, அக்கறைகொண்ட நெருங்கிய நண்பரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அந்த உறவில் இருந்ததுபோலவே, அந்தப் பிரிவையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.

வேறென்ன செய்யலாம்? 

உணவைத் தவிர்த்து உடலை வருத்தாதீர்கள். புது ஹேர்ஸ்டைலுக்கு மாறுங்கள். நீங்கள் அணியும் உடைகளை மாற்றி, ஒரு பேட்டனுக்கு பிரேக் அப்வாருங்கள். நிறையப் புத்தகங்கள் வாசியுங்கள். இதுவரை சென்றிடாத இடத்துக்கு நீண்ட பயணம் செல்லுங்கள். ஒரு புதிய பயணக் குழுவுடன் இணையுங்கள். அது உங்களுக்குப் பழைய நினைவுகளை மட்டுப்படுத்தும். நீச்சல், நடனம் எனப் புதிதாக எதையாவது கற்க ஆரம்பியுங்கள். செல்லப் பிராணியும் வளர்க்கலாம். (ஆனா, உங்க எக்ஸ் பெயரை வெச்சுடாதீங்க)

கண்ணீரே கூடாதா? 

கையறு நிலையின் வெளிப்பாடுதான் கோபமும் அழுகையும். உங்கள் மொத்த வலியும் வெளியே வந்துவிடுவதுபோல ஒரே முறையில் அழுது தீர்த்துவிடுங்கள். பிறகு, எப்போதும் அதை ஆக்கிரமிக்க விடாதீர்கள்.

இதைச் செய்யவே வேண்டாம்! 

ஆல்கஹால் அல்லது போதைப் பொருள் பக்கம் மட்டும் போகவே போகாதீர்கள். இதனால், எந்த வகையிலும் சோகம் தீராது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இவை, சோகத்தை அதிகப்படுத்தவே செய்யும். 

இதுபோன்ற நேரங்களில் எல்லோருக்கும் வரும் இயல்பான பிரச்னை, இன்னொரு ரிலேஷன்ஷிப். ஆனால், உடனடியாக எந்த உறவுக்கும் சென்றுவிடாதீர்கள். அடுத்த உறவுக்குள் செல்ல சற்று அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். 

'இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் புரிஞ்சுப்போச்சுடீ' என்று பொதுப்படுத்தி, இனி யாரையும் நம்பவே மாட்டேன் என்றும் தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் என வண்டியைக் கிளப்புங்கள்!


டிரெண்டிங் @ விகடன்