‘அருள் வேண்டும் கைகள்’ - உலகத்தை நெகிழச்செய்த ஓர் ஓவியத்தின் கதை! #FeelGoodStory | `The Praying Hands' - Story of a painting

வெளியிடப்பட்ட நேரம்: 08:13 (30/10/2017)

கடைசி தொடர்பு:08:13 (30/10/2017)

‘அருள் வேண்டும் கைகள்’ - உலகத்தை நெகிழச்செய்த ஓர் ஓவியத்தின் கதை! #FeelGoodStory

கதை - உன்னையறிந்தால்...

ரலாறு நமக்குக் கற்றுக் கொடுக்கும் படிப்பினைகள் ஏராளம். சில நிகழ்வுகளைப் படிக்கும்போது இது இட்டுக்கட்டிய கதையோ என்றுகூடத் தோன்றும். அது குறித்து ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும். அது புனைவோ, வரலாறோ அந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் செய்தி முக்கியம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியைச் சொல்கிறது `தி பிரேயிங் ஹேண்ட்ஸ்’ (The Praying Hands) என்கிற புகழ்பெற்ற ஓவியத்துக்குப் பின்னணியில் இருக்கும் கதை. இந்த ஓவியத்தை வரைந்தவர் 15 - 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய ஓவியர் ஆல்பிரெக்ட் டியூரர் (Albrecht Dürer). சரி... கதைக்கு வருவோமா? 

கதை - ஓவியம்

அது, 15-ம் நூற்றாண்டு. நியூரெம்பெர்க் (Nuremberg) என்ற ஊருக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம். அந்தப் பகுதி அப்போது ரோமப் பேரரசின் ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அந்தக் கிராமத்தில் ஒரு பொற்கொல்லர் இருந்தார். அவருக்கு ஒன்று, இரண்டல்ல... 18 குழந்தைகள்(!). பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது சகஜமாக இருந்த காலம் அது. ஆனால், குடும்பத் தலைவர் ஒருவர்தானே! அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்தார். ஆனாலும், அத்தனை பேரும் மூன்று வேளைச் சாப்பாட்டை முழுதாகச் சாப்பிட வழியில்லை. வறுமை அந்தக் குடும்பத்தை ஒரு கரையானைப்போல மெள்ள மெள்ள அரித்துக்கொண்டிருந்தது. 

அந்தப் பொற்கொல்லருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் ஆல்பிரெக்ட் டியூரர். அவரின் அண்ணன் பெயர் ஆல்பர்ட் (Albert). அண்ணன், தம்பி இருவருக்கும் ஓவியத்தில் தீராத ஈடுபாடு... ஓவியம் வரைந்து அதில் சாதனை படைக்க வேண்டும், பெரிய ஓவியராக வேண்டும் என்கிற பெரும் கனவு. ஆனால், ஒரு வேளை ரொட்டிக்கே வீட்டில் பிரச்னை எனும்போது ஓவியம் படிக்கவைக்க அவர்களின் தந்தையால் எப்படி முடியும்? அண்ணன், தம்பி இருவரும் இதைப் பற்றியே சதா யோசித்தார்கள்; பேசினார்கள்; இறுதியில் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தார்கள். அதன்படி, ஒரு நாணயத்தை வைத்து `பூவா, தலையா’ (Toss) போட்டுப் பார்ப்பது. அதில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவர் ஓவியம் கற்றுத்தரும் கல்விச்சாலைக்குச் சென்று சில வருடங்கள் கற்றுக்கொண்டு, அதில் சாதனை படைத்துத் திரும்புவார். அதுவரை, தோற்றவர் இங்கேயிருந்து வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவ வேண்டும். வெற்றி பெற்றவர் வந்த பிறகு, அவர் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வார். தோற்றவர், ஓவியம் கற்கச் செல்லலாம். `ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, அதன்படி ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியுமா?’ என்கிற கேள்விக்கே அங்கு இடமிருக்கவில்லை. அன்றைக்கு அவர்களின் எதிர்காலத்தை தீர்மானித்தது ஒரு பழைய செல்லாத காசு.

கதை - ஓவியம் வரைதல்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. `பூவா, தலையா’ போட்டுப் பார்த்ததில், ஆல்பிரெக்ட் டியூரர் பக்கம் இருந்தது வெற்றி. டியூரர், தன் குட்டி கிராமத்திலிருந்து நியூரெம்பெர்க்குக்கு ஓவியம் கற்கச் சென்றார். ஆல்பர்ட், குடும்பத்துக்காகவும், படிக்கச் சென்ற தம்பியின் கல்விச் செலவுகளுக்காகவும் சுரங்க வேலைக்குச் சென்றார். ஆல்பிரெக்ட் டியூரர், மைக்கேல் வோல்ஜ்மட் (Michael Wolgemut) என்ற பிரபல ஓவியரிடம்தான் ஆரம்பத்தில் ஓவியம் கற்றுக்கொண்டார் என்றெல்லாம் சொல்கிறது வரலாறு. டியூரர் படு சுட்டி; திறமைசாலி. ஓவியம் கற்றுக்கொண்டிருக்கும்போதே வரையவும் ஆரம்பித்துவிட்டார். அதில் கொஞ்சமாகக் கிடைத்த வருவாய், கணிசமாக உயரவும் ஆரம்பித்திருந்தது. ஓவியப் படிப்பு முடிந்தது. ஆனால், படிப்பு முடிவதற்குள்ளாகவே அந்தப் பகுதியில் டியூரரின் ஓவியத் திறமை பரவலாகிவிட்டது. நிறைந்த மனதோடு, கை நிறையக் காசோடு ஒருநாள் தன் கிராமத்துக்குத் திரும்பினார் ஆல்பிரெக்ட் டியூரர். 

டியூரரின் குடும்பமே அன்றைக்கு மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது. டியூரரின் தந்தை, கிராமம் முழுக்க வீடு வீடாகப் போய், தன் அருமை மகன் வெற்றியாளனாகத் திரும்பி வந்த கதையைச் சொல்லி, அன்றைக்கு அவர்கள் வீட்டில் நடக்கவிருக்கும் விருந்துக்கு அழைத்துக்கொண்டிருந்தார். 

ஆல்பிரெக்ட் டியூரர்

அது இரவு நேரம். வீட்டுக்கு முன்னால் இருந்த புல்வெளி. டியூரரின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் அங்கே கூடியிருந்தார்கள். விருந்து களைகட்டிக்கொண்டிருந்தது. தன் நண்பர்களிடம் அண்ணன் ஆல்பர்ட்டின் தியாகத்தை வியந்து சொல்லிக்கொண்டிருந்தார் டியூரர். “என் அண்ணன் மட்டும் அன்னிக்கி ஒத்துக்கலைனா, நான் ஓவியம் கத்துக்கப் போயிருக்கவே முடியாது’’ என்று புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார். விருந்து முடியும் நேரத்தில் டியூரர் தன் அண்ணனைப் பார்த்தார். ஆல்பர்ட் விருந்து மேஜையின் கடைக்கோடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். டியூரர் ஆல்பர்ட்டின் அருகே போனார். 

“அண்ணா! இனி உன் முறை. நீ ஓவியம் படிக்க நியூரெம்பெர்க்குக்குப் போ! நான் வீட்டையும் உன்னையும் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார் டியூரர். ஆல்பர்ட் பதில் சொல்லாமல் அப்படியே கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார். 

“என்னண்ணா பேசாம இருக்கே?’’

விருந்துக்கு வந்தவர்கள் அத்தனைப் பேரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆல்பர்ட்டின் வெளிறிய முகத்திலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் முதலில் வழிந்தது. ஒரு தேம்பல் சத்தம் கேட்டது. `இல்லை’ என்பதுபோல் அவருடைய தலை இடமும் வலமுமாக அசைந்தது. பிறகு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார் ஆல்பர்ட். 

“முடியாது தம்பி. என்னால நீயுரெம்பெர்க்குக்குப் போக முடியாது. இனிமே என்னால ஓவியம் கத்துக்க முடியாது. என் கைகளைப் பார். சுரங்கத்துல வேலை பார்த்ததுல என் கைகளுக்கு என்ன ஆகியிருக்குனு பார். சுரங்கத்துல என் கை விரல் எலும்புகள் எல்லாமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உடைஞ்சு போயிருக்கு. கடைசியில என் வலது கைக்கு வாதப் பிரச்னைகூட வந்துடுச்சு. இந்தக் கையால ஒரு கிளாஸைக்கூட உயர்த்திப் பிடிக்க முடியலை. இந்தக் கையைவெச்சுக்கிட்டு என்னால எப்படி கேன்வாஸ்ல, பிரஷ்ஷைவெச்சு அழகழகான ஓவியம் வரைய முடியும்? காலம் கடந்து போச்சு தம்பி...’’ 

கதை

இதைக் கேட்டு, ஆல்பர்ட்டின் கைகளைப் பற்றிக்கொண்டு கதறி அழுதார் டியூரர். அண்ணனின் தியாகத்துக்கு அவரால் என்ன கைமாறு செய்ய முடியும்? செய்தார். அண்ணனின் தொய்ந்துபோன, பழுதுபட்ட கரங்களை ஒரு புகைப்படத்தைப்போல ஓவியமாக வரைந்தார். அவரின் மாஸ்டர் பீஸான அந்த ஓவியத்துக்கு `ஹேண்ட்ஸ்’ என்று பெயரும் வைத்தார். பின்னாளில் உலகம் அந்த ஓவியத்துக்கு மறுபெயர் சூட்டியது. `தி பிரேயிங் ஹேண்ட்ஸ்’. வணங்கும், அருள் வேண்டும் கைகள்! இதைவிடப் பொருத்தமான பெயர் வேறு இருக்க முடியாதுதானே! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்