வைரலான ஸ்டீபன் ஹாக்கிங் கட்டுரையில் அப்படி என்ன இருக்கிறது? | 20 lakh views... Stephen Hawking's research article goes viral online.

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (31/10/2017)

கடைசி தொடர்பு:11:26 (31/10/2017)

வைரலான ஸ்டீபன் ஹாக்கிங் கட்டுரையில் அப்படி என்ன இருக்கிறது?

“என்னுடைய ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றி படித்துக்கொள்ளும் வசதி செய்து தரப்பட வேண்டும்.”    

ஸ்டீபன் ஹாக்கிங்

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் வார்த்தைகள் இவை. இளம் வயதில் மோட்டார் நியூரான் நோய் தாக்கி தன் உடலின் செயல்பாட்டை இழந்தார். இருந்தபோதும், அறிவியல் மேல் அவருக்கிருந்த காதல் கொஞ்சமும் குறையவில்லை. தன் 24ம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு பயின்று வந்தபோது 134 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார். “விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்” (Properties of expanding universes) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது நம் அண்டத்தின் மீது நமக்கு அப்போதிருந்த இருந்த அறிவை மேலும் அகலப்படுத்தியது. எண்ணற்ற பல விடையில்லா கேள்விகளுக்கு விடைகள் தானாகப் புலப்பட்டது. முனைவர் பட்டம் பெற இதையே தன் ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தார். இது நடந்த வருடம் 1965.

சென்ற வாரம் வரை, இந்த ஆய்வறிக்கையைப் படிக்க, நகல் எடுக்க ஒரு மாணவன் 65 பவுண்டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திற்குக் கட்டணமாக செலுத்த வேண்டும். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இதை இலவசமாகப் படித்துக்கொள்ள, தரவிறக்கம் செய்ய அனுமதியளித்துள்ளது. தன்னுடைய இணையத்தளத்திலேயே இந்த ஆய்வுக் கட்டுரையின் ஸ்கேன் செய்த நகலை வெளியிட்டுள்ளது. வெளியான ஒரு வாரத்திலேயே, 20 லட்சம் வியூஸ்களைத் தாண்டியுள்ளது இந்தக் கட்டுரை. இதுவரை, சுமார் 5 லட்சம் பேர் இதைத் தரவிறக்கம் செய்துள்ளார்கள்.

அப்படி என்ன இருக்கிறது அந்தக் கட்டுரையில்?    

ஆராய்ச்சிக் கட்டுரை

Photo Courtesy: Cambridge University/Stephen Hawking

விரிவடைந்து கொண்டே இருக்கும் நமது பேரண்டத்தின் பல்வேறு பண்புகளை குறித்து அலசி ஆராய்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. அண்டம் விரிவடைவதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் என்னென்ன என்பதைச் சுற்றி பல்வேறு கோட்பாடுகள் மற்றும் விளக்கங்களை முன்வைக்கும் இது, இயற்பியல் உலகில் ஓர் அசாத்திய மைல்கல். இதன் ஒவ்வொரு பகுதியும் எதைக் குறித்துப் பேசுகிறது என்று காண்போம்.

முதல் பகுதி, நம் அண்டம் விரிவடையும் நிகழ்வு எவ்வாறு ஹோயல்-நர்லிகர் அவர்களின் ஈர்ப்புவிசை கோட்பாட்டை (Hoyle-Narlikar theory of gravitation) பாதிக்கிறது என்று விளக்குகிறார். இரண்டாம் பகுதியில், ஒரே இயல்புடைய சமநிலையற்ற பிரபஞ்சம் விரிவடைவதால் இயல்பான அதன் பண்புகளில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து விவரிக்கிறார். இதே பகுதியில், சமீபத்தில் உணரப்பட்ட ஈர்ப்புவிசை அலைகள் குறித்தும் அப்போதே பேசியுள்ளார். மூன்றாம் பகுதியில் ஈர்ப்புவிசை அலைகள் அணுகுகோட்டுவிரிவின் அடிப்படையில் (asymptotic expansion) நம் அண்டத்தில் எவ்வாறு பரவுகிறது என்று விளக்குகிறார். இறுதிப் பகுதியில் விரிவடையும் அண்டங்கள் ஒரு மையப்பகுதியில் குவிந்து (Singularity) நிலைகுலையும் தன்மையைப் பற்றி விளக்குகிறார்.

ஸ்டீபன் ஹாக்கிங்

Photo Courtesy: Hawking.org

இந்த ஆராய்ச்சி முழுவதும் இலவசமாக இணைய உலகத்தில் பகிரப்பட்டதை குறித்துக்கருத்துத் தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங், “இதன் மூலம் இளைய சமுதாயத்தை என் ஆராய்ச்சிகள் ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். நான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் போது, என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது ஐசக் நியூட்டன், ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றோரின் ஆராய்ச்சிகள்தான். இப்பேரண்டத்தில் நாம் எந்தப் புள்ளியில் இருக்கிறோம், எவ்வாறு இருக்கிறோம், மாபெரும் அண்டத்தின் தன்மையை உணர்வது போன்ற புரிதல்களை இந்த ஆராய்ச்சியின் மூலம் பெற்றுவிட முடியும்” என்று தெரிவித்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் மேலும் ஒரு சிறப்பு அம்சம், இது முழுக்க முழுக்க தட்டச்சு செய்யப்பட்ட ஒரு புத்தகம். 1966ம் ஆண்டில் எழுதப்பட்டதால், அப்போது தட்டச்சில் பல கணிதக் குறியீடுகள் கிடையாது. எனவே, அவை மட்டும், தேவையான இடத்தில் கைகளால் எழுதப்பட்டுள்ளன.  

இணையத்தில் இலவசமாகப் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்