வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (31/10/2017)

கடைசி தொடர்பு:16:00 (31/10/2017)

அவென்ஜருக்குப் போட்டியாக சுஸூகி இறக்கும் இன்ட்ரூடர் 150 #Suzuki #intruder150

 

நவம்பர் 7-ம் தேதி, புதிதாக ஒரு பிரிமியம் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது சுஸூகி நிறுவனம். `இன்ட்ரூடர்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது, 150 சிசி க்ரூஸர் பைக்காக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச பைக் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சுஸூகியின் XL சைஸ் க்ரூஸர் பைக்குகளான இன்ட்ரூடர் M800 மற்றும் இன்ட்ரூடர் M1800 ஆகியவற்றை நினைவுப்படுத்தும்படியான டிசைனே இதை உறுதிப்படுத்திவிடுகிறது. முன்பக்கத்தில் அகலமான ஹெட்லைட்டுடன் பிரமாண்டமான டேங்க் ஸ்கூப்புடன்கூடிய 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசீகரிக்கிறது. ரைடர் மற்றும் பில்லியன் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஸ்ப்ளிட் சீட், 740 மிமீ உயரத்தில் தேவையான குஷனிங்குடன் வசதியாக இருக்கும் என்றே தெரிகிறது LED டெயில் லைட்டுக்கு மேலே வட்டமான கிராப் ரெயிலும் அதற்குக் கிழே தடிமனான மட்கார்ட்டும் அழகாகப் பொருந்தியுள்ளன.

சுஸூகி

Dual Port பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பெரிய எக்ஸாஸ்ட் பைப், ஜிக்ஸர் பைக்கின் ஜெராக்ஸ்தான்! ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வடிவேலு சொல்வதுபோல ``வாங்குற காசுக்குமேல கூவுறான்...'' என்ற ரீதியில் அதிரடியான தோற்றத்தையே கொண்டிருக்கிறது இன்ட்ரூடர் 150. இருப்பினும், பைக்கின் கட்டுமஸ்தான வடிவமைப்புடன் (2,130 மிமீ நீளம் - 805 மிமீ அகலம் - 1095 மிமீ உயரம் - 1,405 மிமீ வீல்பேஸ்) ஒப்பிடும்போது, டயர்கள் கொஞ்சம் சிறிதாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. என்னதான் டிசைன் வித்தியாசமாக இருந்தாலும், மெக்கானிக்கலாக ஜிக்ஸருக்கும் இன்ட்ரூடருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இன்ட்ரூடர் 150 பைக்கின் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன், அலாய் வீல்கள் - டயர்கள், முன்பக்க - பின்பக்க டயர்கள், இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், ரியர் வியூ மிரர்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவை அனைத்தும் ஜிக்ஸர் பைக்கிலிருந்தே பெறப்பட்டுள்ளன. 

இன்ட்ரூடர் 150

இதில் எத்தனை வசதிகள் ஸ்டாண்டர்டாக இருக்கும் என்பது, பைக் விற்பனைக்கு வரும்போதுதான் தெரியும். சேஸியும் ஒன்றுதான் என்றாலும், க்ரூஸர் கோட்பாடுகளுக்கு ஏற்ப இதில் சில மாறுதல்களை (பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கும் ஹேண்டில்பார் மற்றும் முன்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ்) சுஸூகி செய்திருக்கிறது. ஆனால், ஜிக்ஸரில் இல்லாத LED ஹெட்லைட், இன்ட்ரூடர் 150 பைக்கில் இடம்பெற்றுள்ளது. இப்படி கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஜிக்ஸரைவிட 13 கிலோ எடை கொண்டிருக்கிறது இன்ட்ரூடர் 150 (148 கிலோ). இந்த இரண்டு பைக்களிலும் இருப்பது, 14.8bhp பவர் மற்றும் 1.4kgm டார்க்கை வெளிப்படுத்தும் 154.9சிசி கார்ப்பரேட்டட் இன்ஜின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிக்ஸர் SF பைக்கைப் போலவே, இன்ட்ரூடர் 150 பைக்கிலும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷனை, பின்னாளில் சுஸூகி வழங்கும் என நம்பலாம்.

suzuki intruder 150

எனவே, அதிக எடையைச் சுமக்கும்விதமாகவும், க்ரூஸர் பைக்குக்கு ஏற்றவிதமாகவும், குறைவான வேகத்தில் அதிக பிக்கப்புக்காக இன்ஜின் ரி-டியூன் செய்யப்படும் என நம்பலாம். தவிர, ஜிக்ஸரைவிட அதிக விலையில் (1 லட்சம் ரூபாய், உத்தேச ஆன்ரோடு விலை) வெளிவரப்போகும் இன்ட்ரூடர் 150, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்குக்குப் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிக்ஸரைவிட 10 மிமீ கூடுதல் கிரவுண்ட் க்ளியரன்ஸைக் (170மிமீ) கொண்டிருக்கும் இந்தப் புதிய க்ரூஸர் பைக்கின் புக்கிங், சுஸூகியின் டீலர்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில், தனது டீலர்களுக்கு இன்ட்ரூடர் பைக்குகளின் Dispatch-யை சுஸூகி தொடங்கும் எனத் தெரிகிறது. பட்ஜெட் க்ரூஸர் செக்மென்ட்டின் `ரூட் தல'-யான அவென்ஜர் பைக்குடன் மோதுவதற்குத் தேவையான ஹோம்வொர்க்கை சிறப்பாகச் செய்திருக்கும் சுஸூகி, தனது 150சிசி பைக்கான ஜிக்ஸரில் மிஸ் செய்த சிக்ஸரை, இன்ட்ரூடர் 150 பைக்கின் வாயிலாக தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் போல பவர்ஃபுல்லாக அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்