வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (02/11/2017)

கடைசி தொடர்பு:10:44 (02/11/2017)

ஒரு நிமிடத்துக்கு 4,000 ரவுண்டுகள்... #A-10Thunderbolt2... தாக்கும்/காக்கும் தோழன்!

A-10Thunderbolt2

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒழிக்கும் பணியில் அப்பொழுது அமெரிக்க ராணுவம் முழு வீச்சில் இறங்கியிருந்தது. அமெரிக்க இராணுவ வீரர்கள் ஒரு குழுவாகப் பிரிந்து பல இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி  ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று அங்கிருக்கும் தாலிபான்களின் நடமாட்டத்தை விசாரிப்பது, சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டால் அவர்களை விசாரிப்பது அல்லது கைது செய்வது. தேவைப்பட்டால் ஆயுதங்களை உபயோகிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

அன்றைக்கும் அதே போல இராணுவக் குழுவினர்  ஒரு கிராமத்தில் தேடுதலை நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கு சென்ற சற்று நேரத்திலேயே அவர்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துவரத் தொடங்கிவிட்டன. அவர்கள் அங்கு இருப்பதை தெரிந்துகொண்ட தாலிபான்கள் அந்த இடத்தை நெருங்கி வந்து தாக்குதலைத் தொடங்கி விட்டார்கள். இராணுவத்தினர் நடந்தே வெகு தூரம் செல்பவர்கள் என்பதால் கையில் ஆயுதங்களைக் குறைந்த அளவே எடுத்துச்செல்வார்கள். அருகில் இருக்கும் வாகனத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் எதிரில் இருக்கும் தலிபான்களைத் தாண்டியாக வேண்டும்.

வேறு வழியில்லை. இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டியதுதான். இராணுவத்தினர் எதிர்த் தாக்குதல் நடத்த ஆரம்பித்துவிட்டனர். இருபக்கமும் தாக்குதல் தொடர்ந்தது. தலிபான்களோ பின்வாங்கும் எண்ணத்தில் இல்லை. ராணுவக் குழுவினர் பின்வாங்க நினைத்தாலும் அவர்களால் முடியாது. இன்னும் சற்று நேரத்தில் கையில் இருக்கும் தோட்டாக்கள் தீர்ந்து விடும் நிலைமை. இப்பொழுது அவர்களிடத்தில் இருக்கும் ஒரே ஒரு வழி அவனை அழைப்பதுதுதான். "மிக அவசரம்" அருகில் இருக்கும் ராணுவத் தளத்திற்கு தகவல் பறக்கிறது. தாமதம் இல்லாமல் உதவி கேட்பவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி அவன் கிளம்பிவிட்டான். அடுத்த சில நிமிடங்களில் ஓர் இடி முழக்கம் அவர்கள் அருகில் கேட்கிறது. தலிபான்கள் இருக்கும் இடம் தகர்க்கப்பட்டு தாக்குதல் முடிவுக்கு வருகிறது. இராணுவ வீரர்கள் பத்திரமாக முகாம்களுக்குத் திரும்புகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வந்தவன் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த A10 தண்டர்போல்ட் 2 போர் விமானம். இது போன்ற பல சூழ்நிலைகளில் தரைப்படை இராணுவ வீரர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியது இந்த A10 தண்டர்போல்ட் 2 போர் விமானம்தான்.

A10 தண்டர்போல்ட் 2  போர் விமானம்

1939-ல் இரண்டாம் உலகப்போர், அதன் பிறகு வியட்நாம் போர் எனத் தொடர்ச்சியாகப் போர்களில் ஈடுபட்டு வந்தது அமெரிக்கா. அவர்களிடம் சாதாரண குண்டுகள் முதல் அணுகுண்டுகள் வரை எடுத்துச் செல்லக்கூடிய வகையில் போர்விமானங்கள் இருந்தன. தரையில் போராடக்கூடிய வீரர்களுக்கு பக்க பலமாக இருக்கக் கூடிய வகையில் ஒரு விமானம் தேவைப்பட்டபோது உருவாக்கப்பட்டதுதான் இந்த A10 தண்டர்போல்ட் 2. ஃபேர்சைல்ட் ரிபப்ளிக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1977-ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில் இணைக்கப்பட்டது. இராணுவ வீரர்கள் தரையில் இருக்கும்போது அவர்களை வான் பரப்பிலிருந்து பாதுகாப்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.

தரைப்படை வீரர்கள் தண்டர்போல்ட் 2 வை புகழ்வதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது இதன் சுடும் திறனும் அதற்காக இதில் இருக்கும் 30 எம்.எம் GAU-8 Avenger தானியங்கி வகை  துப்பாக்கியும்தான். தண்டர்போல்ட் 2 விமானத்தின் முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும் இந்தத் துப்பாக்கியின் மொத்த எடை 281 கிலோ நீளம் 19 அடி. மொத்தம் 7 பேரல்கள் அமைப்பைக் கொண்ட இதன் சுடும் வேகம் ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சமாக 4200 ரவுண்டுகள். சராசரியாக 3900 ரவுண்டுகள். ஒரு முறை இதனை இயக்கினால் 7பேரல்களில் இருந்தும் மணிக்கு 3540 கி.மீ வேகத்தில் தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் இருக்கும் இலக்கை தாக்கும். எடுத்தக்காட்டாக தரையில் இருக்கும் ஓர் இலக்கை தண்டர்போல்ட் 2 குறிவைத்து தாக்கினால் ஒரே நேரத்தில் பல தோட்டாக்கள் பாய்ந்து செல்லும். இதன் மூலமாக இலக்கு எளிதாகவும் விரைவாகவும் அழிக்கப்படும். 

A-10Thunderbolt2

தரைப்படை வீரர்கள் இதன் சுடும் திறனை பாராட்டுகிறார்கள் என்றால் இதை இயக்கும் விமானப்படை வீரர்கள் இதன் உயிர் காக்கும் தன்மைக்காகப் பாராட்டுகிறார்கள். விமானத்தை இயக்கும் பைலட்டின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு தண்டர்போல்ட் 2 வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பைலட் கேபின் முழுவதும் டைட்டானியம் உலோகம் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏறிப் பறந்தால் எதிரியின் இடத்திற்கு சென்று மீண்டும் உயிரோடு திரும்பி வந்துவிடலாம் என்பது இவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் பொய்யாக்காமல் ஒரு சம்பவமும் நிகழ்ந்தது.

A-10Thunderbolt2

2003 ம் ஆண்டு ஈராக்கில் போர் தொடங்கியிருந்த நேரம். ஏப்ரல் 7 ம் தேதி பாக்தாத் நகரில் அமெரிக்க தரைப்படை வீர்கள் போரிட்டு கொண்டிருக்கும்போது இடையில் எதிரிகளின் டாங்கிகள் குறுக்கிட அவர்கள் அவசர உதவிக் கேட்டு தகவல் அனுப்பினார்கள். உடனே கேப்டன் காம்பெல் என்ற பெண் விமானி தண்டர்போல்ட் 2 போர் விமானத்தில் சென்று அவர்களுக்கு இடையுறாக இருந்த டாங்கிகள்மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார். திடீரென அவரது விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. தாக்குதலில் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்புகள் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து வேறு திசையில் பறக்க ஆரம்பித்தது. பாராசூட்டை இயக்கி வெளியேற நினைக்கும் வேளையில் கேப்டன் காம்பெலுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. தண்டர்போல்ட் 2 விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்புகள் செயலிழந்ததாலும் அதை மேனுவலாகவும் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் அது. தயங்காமல் அதைச் செயல்படுத்தினார் விமானம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அருகில் இருந்த விமானப்படை தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கினார். "மிகப்பெரிய அளவில் தாக்குதலுக்கு உள்ளான பின்பும் நான் உயிர் பிழைக்கக் காரணமாய் இருந்த எனது விமானத்திற்கும் அதை வடிவமைத்தவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்". இவை கேப்டன் காம்பெல் கூறிய வார்த்தைகள்.

A-10Thunderbolt2

1977 ம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது முதல் மொத்தமாக 716 விமானங்கள் உருவாக்கப்பட்டன. அதில் தற்பொழுது 283 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த விமானத்தின் மற்றொரு தனித்தன்மை இதன் ஒலி. இதன் துப்பாக்கிகள் இயங்கும் பொழுது இடி போன்று ஓசை உருவாகும். அதை வைத்து இதன் வருகையை இராணுவ வீரர்கள் எளிதில் அறிந்துகொள்வார்கள். இப்பொழுதும் உலகின் பல இடங்களில் போர்க்களத்தில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் இருக்கும் A10 தண்டர்போல்ட் 2. இவ்வளவு பெயர் இருந்தாலும் இதற்கு ஒரு செல்லப்பெயர் கூட உண்டு அது "காட்டுப்பன்றி"(Warthog).

அமெரிக்கர்களைக் காட்டுப்பன்றி காப்பாற்றும். அமெரிக்கர்களிடம் இருந்து மற்றவர்களை யார் காப்பாற்றுவது?


டிரெண்டிங் @ விகடன்