‘வயது தடையில்லை!’ - சாதித்த பெண்ணின் கதை #FeelGoodStory | Age is not a ban for victory! a successful woman story

வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (01/11/2017)

கடைசி தொடர்பு:07:44 (01/11/2017)

‘வயது தடையில்லை!’ - சாதித்த பெண்ணின் கதை #FeelGoodStory

40 வயதில் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டு, 50 வயதுக்குள் அந்தத் துறையில் கிடுகிடுவென முன்னேறி, ஊர் உலகத்தையே திரும்பிப் பார்க்கவைக்க ஒருவரால் முடியுமா? முடியும். அதற்கு உதாரணம் ஜூலியா சைல்டு (Julia Child). தேர்ந்தெடுத்த துறையில் கட்டுக்கடங்காத ஆர்வம், முன்னேற வேண்டும் என்கிற உத்வேகம், விடா முயற்சி இவை இருந்தால் வாழ்க்கையில் முன்னேற வயது ஒரு தடையில்லை என்பதை ஜூலியா சைல்டின் கதை நமக்கு உரக்கச் சொல்கிறது. தனக்கு எது பிடிக்கும், தனக்கு ஏற்ற துறை எது என்பது தெரியாமல்தான் பலரும் தங்களுக்குப் பொருத்தமே இல்லாத துறையில் கால் பதித்துவிட்டு, அதிலிருந்து மீள முடியாமல் அல்லாடுகிறார்கள். நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பொருத்தமான வாய்ப்பு என்கிற கதவு திறக்கப்பட்டிருக்கும். அதைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு, அதன் வழியே பயணத்தைத் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம். அதைத்தான் தன் வாழ்க்கையில் செய்தார் ஜூலியா சைல்டு. 

உன்னை அறிந்தால்

1912, ஆகஸ்ட் 15. அமெரிக்கா, கலிஃபோர்னியவிலிருக்கும் பாஸாடெனா-வில் (Pasadena) பிறந்தார் ஜூலியா சைல்டு. அப்பா ஜான் மெக்வில்லியம், அம்மா ஜூலியா கரோலின்.  ஜூலியாவுக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. அந்த வீட்டில் ஜூலியா உள்பட எல்லோருமே அசாதாரணமான உயரத்தோடு இருந்தார்கள். பண்ணை, அழகான வீடு, சொல்கிற வேலையைச் செய்ய வேலையாட்கள், சமையல்காரர்கள்... என ஒரு பெரிய பட்டாளமே அந்த வீட்டில் இருந்தது. 1930-ம் ஆண்டு மாசாசூசெட்ஸில் இருக்கும் ஸ்மித் கல்லூரியில் வரலாற்றுப் பாடப் பிரிவில் சேர்ந்தார் ஜூலியா. பட்டம் பெற்றதும் நியூயார்க்கில் இருந்த ஒரு ஃபர்னிச்சர் கம்பெனியில் காப்பிரைட்டர் வேலைக்குச் சேர்ந்தார். படிப்பு, வீடு, நண்பர்கள், உறவினர்கள், வேலை... என வழக்கமான சூழ்நிலையில் உப்புச்சப்பில்லாமல் நகர்ந்துகொண்டிருந்தது வாழ்க்கை. அப்போதுதான் இரண்டாம் உலகப்போர் மூண்டது.

ஜூலியா - கதை

போர்க் காலங்களில் செயல்படும் அமெரிக்காவின் `ஆபிஸ் ஆஃப் ஸ்ட்ரேட்டஜிக் சர்வீசஸ்’ (ஓ.எஸ்.எஸ்) என்கிற புலனாய்வு ஏஜென்சியில் வேலைக்குச் சேர்ந்தார் ஜூலியா. அங்கே ஓர் உளவாளியாக வேலை பார்த்தார் என்று சொல்லப்படுகிறது. ராணுவ உடையில் வலம் வந்தார். பல வெளிநாடுகளுக்கு வேலையின் பொருட்டு பயணம் செய்தார். ஆனாலும், அங்கே தான் ஒரு `ஃபைல் கிளார்க்’ என்றுதான் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார் ஜூலியா. ஆனால், அந்த நிறுவனத்தில் சேர்ந்ததும், அவர் மேற்கொண்ட ஒரு வெளிநாட்டுப் பயணமும்தான் அவர் வாழ்க்கைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

ஃபிரெஞ்ச் உணவுகள் - ஜூலியாவின் கதை

அலுவலக வேலையாக சீனாவில் இருக்கும் குன்மிங்குக்குப் போனார் ஜூலியா சைல்டு. அங்கே அவருக்கு அறிமுகமானார் பால் குஷிங் சைல்டு (Paul Cushing Child). அவரும் ஆபிஸ் ஆஃப் ஸ்ட்ரேட்டஜிக் சர்வீசஸில் பணியாற்றிக்கொண்டிருந்தார். பாஸ்டனின் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மேப்களைத் தயாரிப்பதுதான் முக்கியமான பணி. இருவரும் ஒன்றாக வேலை பார்க்கவேண்டிய சூழல்... அதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கம், மெள்ள மெள்ளக் காதலாகக் கனிந்துகொண்டிருந்தது. ஜூலியாவுக்கு பால் பலவிதங்களில் புதுமையானவராக இருந்தார். அவருடைய மெல்லிய உணர்வுகளும், ரசனையும் ஜூலியாவைத் திகைக்கவைத்தன. முக்கியமாக பால், உணவுகளின் காதலனாக இருந்தார். சிறந்த உணவகங்களைத் தேடித் தேடிப் போனார். அந்தந்த இடங்களுக்கே உரிய ஸ்பெஷல் உணவுகளைக் கண்டுபிடித்து ரசித்து, ருசித்துச் சாப்பிட்டார். பால்-ன் உணவு வேட்கை, ஜூலியாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் புரியாத ஒன்று அவருக்குப் புரிந்தது. `உணவில் பசி, ருசியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அதைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டால், சாப்பிடுபவர்களை அதைக்கொண்டே வசியப்படுத்திவிடலாம். நான்கு பேருக்கு நல்ல சமையலைக் கொண்டு சேர்க்கலாம்.’

பால், ஃபிரெஞ்ச் உணவுகளின் பிரியர். ஒரு சமையலறை எப்படி இருக்க வேண்டும், எப்படி சமைக்க வேண்டும் என்கிற ஆரம்பப் பாடங்களை ஜூலியாவுக்கு அறிமுகப்படுத்தினார் பால். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஜூலியா கலிஃபோர்னியாவில் இருந்த ஒரு சமையல் பள்ளியில் முறையாகச் சமையற்கலையைக் கற்றுக்கொண்டார். 1946-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். வாஷிங்டனுக்குத் திரும்பினார்கள். அங்கே வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்பட்டார் பால். புதுப் பதவி வந்த கையோடு அவரை பாரிஸுக்கு அனுப்பிவைத்தார்கள். 

ஃபிரெஞ்ச் உணவுகள் - கதை

வேலை, வேலை என்று போய்விடுகிறார் கணவர். பெரும்பாலான நாள்கள் உடன் இருப்பதில்லை; தனிமை. நேரம் நிறைய இருந்தது. `என்ன செய்யலாம்?’ ஜூலியா வெகு மும்முரமாக ஃபிரெஞ்ச் மொழியைக் கற்றுக்கொண்டார்... கூடவே ஃபிரெஞ்ச் சமையல் முறையையும். `லே கார்டன் ப்ளியூ’ (Le Cordon Bleu) உலகின் மிகப் பிரபலமான பள்ளி. அங்கே போய்ச் சேர்ந்தார். ஃபிரெஞ்ச் சமையல்முறையின் அடி முதல் ஆழம் வரை கற்றார். ஆனால், அவர் தேடலுக்கு அது போதுமானதாக இல்லை. பல பிரபல சமையல்கலை நிபுணர்களிடம் போய் ஃபிரெஞ்ச் சமையலைக் கற்றுக்கொண்டார். அவர் எண்ணம் முழுக்க சமையலிலேயே இருந்தது. தொடர்ந்து, பெண்களுக்கான `லே செர்க்கிள் டே கோர்மெட்ஸ்’ (Le Cercle des Gourmettes) என்ற கிளப்பில் உறுப்பினரானார். வார இறுதி நாள்களில் பாரிஸைச் சேர்ந்த பெண்கள் கூடுவார்கள். விதவிதமாக சமைத்துச் சாப்பிடுவார்கள். அங்கே இரண்டு பேர் ஜூலியாவுக்கு அறிமுகமானார்கள். அவர்களின் உதவியோடு ஒரு சமையல் பள்ளியை ஆரம்பித்தார். ஏற்கெனவே அவர்கள் அமெரிக்கப் பெண்களுக்கான ஒரு சமையல் குறிப்புப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு ஜூலியாவும் சேர்ந்துகொண்டார். புத்தக வேலை ஜரூராக நடந்தது. அதுவரை தான் கற்ற அத்தனை சமையல் நுணுக்கங்களையும் புத்தகத்தில் கொண்டு வந்தார் ஜூலியா. அவர் அதில் அவர் கொடுத்திருந்த சமையல் விளக்கங்களும், அற்புதமான புகைப்படங்களும் அந்தப் புத்தகத்தை மேலும் மெருகேற்றின. 

ஃபிரெஞ்ச் உணவுகள் - கதை

1961-ம் ஆண்டு. பால் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதே ஆண்டு ஜூலியும் அவருடைய பாரிஸ் நண்பர்கள் இருவரும் இணைந்து எழுதிய `மாஸ்டரிங் தி ஆர்ட் ஆஃப் ஃபிரெஞ்ச் குக்கிங்’ (Mastering the Art of French Cooking) நூல் வெளியானது. புத்தகம் பயங்கர ஹிட். ஒரு சமையல் புத்தகம் இந்த அளவுக்கு விற்பனையில் சக்கைபோடு போடுமா? என்று வியந்து போனது பதிப்புத் துறை. அதற்குப் பிறகு ஜூலியா சைல்டுக்கு ஏறுமுகம்தான். பல பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் சமையல் தொடர்பான கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 1963-ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி வாய்ப்பு. `தி ஃபிரெஞ்ச் செஃப்’ என்ற அந்தத் தொலைக்காட்சித் தொடரில் அவர் செய்துகாட்டிய ரெசிப்பிகளுக்கு அமெரிக்கப் பெண்களில் பல லட்சம் பேர் ரசிகைகளானார்கள். அதிகம் அலட்டிக்கொள்ளாமல், நம் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரணப் பெண்ணைப்போல அவர் இருந்ததும், அவருடைய நகைச்சுவை உணர்வும், ரெசிப்பிகளைத் தெள்ளத் தெளிவாகச் செய்து காட்டியதும் ஏராளமானவர்களைக் கவர்ந்தது. `பிரபல சமையல்கலை நிபுணர்’ என்கிற பெயரை ஜூலியா எடுத்திருந்தபோது அவருக்கு வயது ஐம்பது. சரியாக 40-வது வயதில் சமையல்கலைக்குள் நுழைந்து, 50 வயதுக்குள் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டார். பிறகு அமெரிக்காவின் பிரபல பீபாடி விருது, எம்மி அவார்டெல்லாம் வாங்கிக் குவித்தார் ஜூலியா. 

தொடர்ந்து எழுதினார் ஜூலியா. பல விருதுகள் பெற்றார். அவருடைய பல ஃபிரெஞ்ச் சமையல் ரெசிப்பிகள், குறிப்புகள், விளக்கங்கள் அடங்கிய அவருடைய `குக் புக்’ (Cook Book) சமையல்கலையில் முக்கியமான ஓர் ஆவணமாகவே கருதப்படுகிறது. இந்த வெற்றிக்கெல்லாம் அடிப்படை, `நல்ல சமையலை நான்கு பேருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்’ என்கிற ஜூலியாவின் நல்லமனதும் லட்சியமும்தான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்