வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (01/11/2017)

கடைசி தொடர்பு:20:17 (01/11/2017)

ஆந்திர ஸ்குவாஷ் வீராங்கனைக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அழைப்பு!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா எனப் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள்  சேர்ந்து படிப்பதற்கு தவம் கிடக்கிறார்கள். இதற்காகப் பல்வேறு ஆலோசனை நிறுவனங்களையும், வெளிநாட்டு மொழித் தேர்வையும் எழுதி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் படிகளில் ஏற முயற்சி செய்து வருகிறார்கள். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்திய மாணவர்களைச் சேர்க்க பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. சில பல்கலைகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி மாணவர்களைச் சேர்த்தும் வருகின்றன.

ஆனால், அமெரிக்காவில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்டான்ஃபோர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்கள் சில வித்தியாசமான முறைகளைக் கையாள்கின்றன. இவை இரண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் புதிய படைப்புகள், அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுப்பிடிப்புகள், கட்டுரை வெளியீடுகள், விளையாட்டுப் போட்டிகளில் சாதித்தவர்கள், சர்வதேச பார்வையை தங்கள் பக்கம் திருப்பியவர்கள் போன்றவர்களைக் கண்டறிந்து,  தங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அழைப்பு விடுவிக்கின்றன. 

அந்த வரிசையில், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான அழைப்புக் கடிதத்தைப் பெற்றிருக்கிறார், ஹைதராபாத் ஓக்ரிட்ஜ் சர்வதேசப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அமிதா கொண்டி (Amita Gondi). 

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமிதா கொண்டி

அமிதா கொண்டி, 17-வயதுக்குட்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலில் நம்பர் -1 வீராங்கனை. ஸ்குவாஷ்  ராக்கெட்பால் மட்டுமல்லாது நீச்சலிலும் தேசிய அளவில் சாம்பியன்.  அமெரிக்காவில் 2016-ம் ஆண்டில் நடைபெற்ற ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் போட்டியிலும், கனடாவில் 2015, 2016-ம் ஆண்டுகளில் நடந்த கனடா ஜூனியர் ஸ்குவாஷ் ஓப்பன் தொடரிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். கொலம்பியாவில் 2013-ம் ஆண்டு நடந்த ராக்கெட்பால் போட்டியில் ஜூனியர் சாம்பியன்.

இந்தியாவில் 2005-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை நீச்சல் போட்டியில் தேசிய அளவில் முதலிடம்  பிடித்திருக்கிறார்.  2010-ம் ஆண்டில் ஸ்குவாஷ் விளையாட்டை வீடியோவில் பார்த்தவருக்கு, ஸ்குவாஷ் ரொம்பவே பிடித்துப்போனது. அதற்கான பயிற்சியில் இறங்கியிருக்கிறார். 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, தொடர்ந்து வெற்றிபெற்று 17-வயதுக்குட்பட்டோருக்கான பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

இதற்காக காலையில் ஐந்து மணிக்கு எழுந்து உடற்பயிற்சி, அதன் பின்பு பள்ளி பாடங்களைப் படிப்பது, பள்ளிக்குச் செல்வது, மாலை நேரத்தில் விளையாட்டுப் பயிற்சி என்று தன்னை சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வடிவமைத்துக்கொண்டார் அமிதா. சப்-ஜூனியர், ஜூனியர் என இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் அனைத்துப் போட்டிகளிலும் பரிசு பெற்றிருக்கிறார். விளையாட்டுப் போட்டியில் ஜொலித்தாலும், 'அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்க ஆசை' என்கிறார்.

பல்கலைக்கழகம் ஹார்வர்ட்

விளையாட்டில் பெற்ற வெற்றிகள் அவரது ஆசையை நிறைவேற்றியிருக்கிறது. இவரது விளையாட்டுத் திறனை பார்த்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஜூலை மாதத்தில் இவருக்குச் சேர்க்கைக்கான கடிதத்தை அனுப்பியிருக்கிறது. ஹார்வர்டு  பல்கலைக்கழகத்தின் ஸ்குவாஷ் விளையாட்டுப் பிரிவின் பயிற்சியாளர் லூக்கா ஹம்மண்ட், அமிதாவுக்கு எழுதிய கடிதத்தில் 'நீங்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தை எப்போது வேண்டுமானாலும் பார்வையிட வரலாம். நேர்காணலில் கலந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் சேரலாம்" என்று அழைப்பு விடுவித்திருக்கிறார். 

இதைப்போலவே, அக்டோபர் மாதத்தில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தும் சேர்க்கைக்கான கடித அழைப்பைப் பெற்றிருக்கிறார் அமிதா. 'மாணவர் பருவத்திலேயே பல்வேறு சாதனை படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்! உங்களுடைய சாதனைகளை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் பாராட்டுவதுடன், 2018-ம் ஆண்டில் எங்கள் பல்கலையில்  சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.  எங்கள் வழக்கமான அறிவிப்பு காலத்துக்கு முன், உங்களுடன் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்டான்ஃபோர்டுக்கு உங்களை வரவேற்க தயாராக இருக்கிறோம்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் ஸ்டாராக இருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் என்பதற்கு அமிதா ஒரு சிறந்த உதாரணம்.. வாழ்த்துகள்!


டிரெண்டிங் @ விகடன்