Published:Updated:

கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள்... நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள்... நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள்... நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள்... நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல்வர் காமராஜர் தலைமையில் இணைக்கப்பட்டது. அதற்கு முன் தென் திருவிதாங்கூர் தமிழர் பகுதிகள் தாய்த் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். தங்களுக்காக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்கிற கட்சியும் அவர்கள் உருவாக்கினார்கள். சாம் நந்தானியேல், பி.எஸ்.மணி, காந்திராமன், ஆர்கே ராம் போன்றவர்களால் தொடங்கப்பட்ட அந்த இயக்கம் நேசமணி இணைந்தபின் வலுப்பெற்று தமிழர் பகுதிகளில் எழுச்சியோடு இருந்தது.

அப்போது நடைபெற்ற போராட்டத்தில் பல தலைவர்கள் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில், அரசியல் களத்தில் நின்றனர். அவர்களில் குஞ்ஞன் நாடார், தாணுலிங்கம் நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பரநாதன் நாடார், டி.டி.டேனியல் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள். தமிழர் பகுதிகள், தமிழகத்தோடு இணைய நடந்த போராட்டத்தில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பின் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து 9 தாலுக்காக்களில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை பாதி பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.

இதில் செங்கோட்டை பகுதி திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்தது. அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, தோவாளை ஆகிய நான்கு தாலுக்காக்களும் கன்னியாகுமரி மாவட்டம் என்று வரையறுக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவானது. நேற்றுடன் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. மாவட்டம் உதயமாக காரணமாக இருந்த தியாகிகளை நினைவு கூர்ந்து பல்வேறு இடங்களில் அஞ்சலியும் மரியாதையும் செய்யப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள், தியாகிகள் சார்பில் குஞ்ஞன்நாடார், ஜீவானந்தம், நேசமணி, சிதம்பரம் நாதன் நாடார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் நேசமணி, சிலைக்கு கன்னியாகுமரி அ.தி.மு.க. மாவட்டச்  செயலாளர் விஜயகுமார் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கிருஷ்ணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட  பலர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நாகர்கோவில் எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜனுக்கு எந்த அழைப்பும் கொடுக்கப்படாததால் தி.மு.க.வினர் யாரும் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரவில்லை. வழக்கமாக அரசு சார்பில் அமைச்சர்கள் வந்து நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அமைச்சர்கள் யாரும் வரவில்லை. நாடார் சங்கங்கள், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தியாகிகள்  சங்கம், நேசமணி தமிழர் பேரவை போன்ற பல்வேறு அமைப்புகள் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு