1 மைல்... 4:06.8 நிமிடங்கள்... மரத்துப்போன கால்களின் மகத்தான சாதனை! #MotivationStory

உன்னை அறிந்தால்

`இனி அவ்வளவுதான் வாழவே முடியாது’ என்கிற நிலை ஏற்படுகிறதா? உற்றார், உறவினர், நண்பர்கள்... உதவ யாரும் இல்லை என்கிற நிராதரவான சூழல் ஏற்படுகிறதா? ஒன்றே ஒன்று இருந்தால் போதும்... எப்பேர்ப்பட்ட இன்னலையும் எதிர்கொண்டு தவிடுபொடியாக்கிவிடலாம். அது, மன உறுதி! அவன் எட்டு வயதுச் சிறுவன். `இனி பிழைக்க மாட்டான்; பிழைத்தாலும், பிரயோசனமில்லை. அவனால் நடக்க முடியாது. இவன் இனி இருப்பது ஒரு சுமை’ என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தினார்கள் மருத்துவர்கள். அந்தச் சிறுவன் மன உறுதி என்ற ஒன்றை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். தனக்கு ஏற்பட்ட பிரச்னையிலிருந்து மீண்டெழுந்தான். உலகத்தையே தன் சாதனையால் திரும்பிப் பார்க்கவைத்தான். அவன் கதையைப் பார்க்கலாமா? 

அமெரிக்காவின் கான்சாஸ். அதற்கருகே ஒரு சின்னஞ்சிறு ஊர்... பெயர், எல்கார்ட் (Elkhart). அங்கேதான் இருந்தான் சிறுவன் கிளென் கன்னிங்ஹாம் (Glenn Cunningham). எட்டு வயது. அந்த வயதில் அவனுக்குப் பெரிய பொறுப்பு ஒன்றைப் பள்ளியில் ஒப்படைத்திருந்தார்கள். எல்லோரும் வருவதற்கு முன்னதாகவே வகுப்பறைக்கு வரவேண்டும். வகுப்பின் ஒரு மூலையில் பானை வடிவில் இருக்கும் சிறிய நிலக்கரிக் கணப்பைப் (Pot belly Coal Stove) பற்றவைக்க வேண்டும். அது குளிர்காலம். ஆசிரியரும் மாணவர்களும் வகுப்பறைக்கு வருவதற்கு முன்னரே அந்த அடுப்பைப் பற்றவைத்திருந்தால், அதிலிருந்து எழும் வெப்பம் அறையைச் சூழ ஆரம்பிக்கும். பள்ளி நேரம் தொடங்கியதும் மாணவர்களுக்குக் குளிர் தெரியாமல் அறை கதகதப்பாக இருக்கும். 

மன உறுதி

கன்னிங்ஹாம், அந்த அடுப்பைப் பற்றவைக்க, ஒரு கேனில் இருக்கும் மண்ணெண்ணெயைப் பயன்படுத்துவான். ஒருநாள் யாரோ தவறுதலாக கேனில் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலை ஊற்றிவைத்திருந்தார்கள். அது அவனுக்குத் தெரியாது. வழக்கம்போல எல்லோருக்கும் முன்னதாகப் பள்ளிக்கு வந்த கன்னிங்ஹாம் கேனில் இருந்ததை மண்ணெண்ணெய் என நினைத்து, அடுப்பில் ஊற்றினான். அடுப்பு வெடித்தது. அது, மிக மோசமான தீ விபத்து. அந்த விபத்தில் கன்னிங்ஹாம் மாட்டிக்கொண்டான். 

ஆசிரியர்களும் மாணவர்களும் வந்தபோது வகுப்பறை முழுக்க நெருப்புப் பற்றியெரிவதைப் பார்த்தார்கள். உள்ளே கன்னிங்ஹாம் இருப்பதை அறிந்து, உள்ளே ஓடினார்கள். பேச்சு மூச்சில்லாமல் கீழே கிடந்த அவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள். கிளென் கன்னிங்ஹாமுக்கு உடலெல்லாம் தீக்காயம் என்றாலும், இடுப்புக்குக்  கீழே, குறிப்பாக முழங்காலுக்குக் கீழே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தான். 

மருத்துவமனை. தீக்காயங்களுடன், அரைகுறை நினைவாக பெட்டில் படுத்திருந்தான் கன்னிங்ஹாம். உடம்பெல்லாம் எரிந்தது. வலியில் துடித்துக்கொண்டிருந்தான். டாக்டர், தன் அம்மாவிடம் பேசுவது தெளிவாகக் காதில் விழுந்தது. ``அம்மா... மனசைத் தேத்திக்கங்க. எனக்கு சொல்றதுக்குத் தயக்கமா இருக்கு. உங்க மகன் பிழைக்க மாட்டானு தோணுது. உண்மையைச் சொல்லணும்னா, அதுதான் அவனுக்கு நல்லது. ஏன்னா, அவனோட முழங்காலுக்குக் கீழே எல்லாச் சதைகளும் மிக மோசமா எரிஞ்சு போயிருக்கு. இனிமே இவன் பிழைச்சாலும், இவனால நடக்க முடியாது.’’ 

கன்னிங்ஹாம் டாக்டர் சொன்னதை முழுதாகக் கேட்டான். ஆனால், அவர் சொன்னதுபோல அவனுக்குச் சாவதில் விருப்பமில்லை. `பள்ளி மைதானம் அவன் விளையாட வர வேண்டுமென்று காத்திருக்கிறது. அவன் நண்பர்கள் சிலர் அவனைப் போட்டிக்கு அழைத்திருந்தார்கள். அதில் ஜெயிக்க வேண்டும். அடுத்த தேர்வில் எப்படியாவது நல்ல கிரேடு வாங்கி அம்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. கடவுளே... நான் சாகக் கூடாது. எப்படியாவது பிழைத்துவிட வேண்டும்.’ அவன் மனதில் ஓர் உறுதி பிறந்தது... வெகு அழுத்தமாக! 

சாதனை

கிளென் கன்னிங்ஹாம் பிழைத்துக்கொண்டான்... அல்ல... அவனுடைய மன உறுதி அவனைப் பிழைக்கவைத்துவிட்டது. ஆனால், இடுப்புக்குக் கீழே எதையும் அவனால் அசைக்கக்கூட முடியவில்லை. தன் மெலிந்த, தீக்காயம்பட்ட, துவண்டுகிடக்கும் கால்களைப் பார்ப்பான். `நான் ஊனமுற்றவன் இல்லை. நான் நடப்பேன். ஓடுவேன். நிறைய தூரம் ஓடுவேன்’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வான். மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். தினமும் அம்மாவும் அப்பாவும் அவன் கால்களில் எண்ணெயெல்லாம் தடவி மசாஜ் செய்துவிடுவார்கள். அவனுக்குக் கால்களில் உணர்ச்சியே இருக்காது. ஆனால், ஒருநாள் நிச்சயம் தன் கால்களைத் தன்னால் அசைக்க முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. 

அவனுடைய உடம்பு கொஞ்சம் தேறியதும் அவனுக்கு ஒரு சக்கர நாற்காலி வாங்கிக் கொடுத்தார்கள். தினமும் காலையிலும் மாலையிலும் அம்மா, அந்த நாற்காலியில் வைத்து அவனை வெளியே அழைத்துப் போவார். காற்றோட்டமாக இருந்தால் அவன் மனதுக்கு இதமாக இருக்குமே என்கிற எண்ணம். புல்வெளி, மரம், செடிகள், பூனை, பறவைகள்... இவற்றையெல்லாம் பார்க்க அவனுக்கு உற்சாகமாக இருந்தது. அதே நேரம் நடந்துவிட வேண்டும் என்கிற வேட்கை உள்ளே கனன்றுகொண்டிருந்தது. 

மன உறுதி

ஒருநாள் அவனை வெளியே அழைத்துச் சென்றபோது, தன் உடம்பை வலுக்கட்டாயமாக இழுத்து புல்தரையில் விழுந்தான். அம்மாவும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் பதறிப்போய் அவனைத் தூக்க ஓடி வந்தார்கள். அவன், அவர்களை சைகையாலேயே தடுத்தான். இயக்கமே இல்லாமல் மரத்துப்போயிருந்த தன் கால்களை இழுத்து இழுத்து நகர்ந்தான். அப்படியே வேலிக்கருகே போனான். வேலிக் கம்பிகளைக் கைகளால் பற்றிக்கொண்டு மெள்ள எழுந்திருக்க முயன்றான். அவனால் அன்றைக்கு முடியவில்லை. `என்னால் முடியும்’ என்கிற மன உறுதி மட்டும் அவனிடம் அழுத்தமாக இருந்தது. இது தினமும் நடந்தது.

 கொஞ்சம் கொஞ்சமாக வேலியைப் பிடித்து நிற்கப் பழகினான். இன்னொரு நாள் வேலி ஓரமாக அதைக் கைகளால் பிடித்தபடி மெதுவாக நடக்க முயற்சி செய்தான். நாளாக நாளாக அது அவனுக்குக் கைகூடியது. ஒரு நாள் நடக்க ஆரம்பித்தான். பிறகு மெள்ள ஓட்டம்... ஊரே அவனை விழி விரிய ஆச்சர்யமாகப் பார்த்தது. 

கிளென் கன்னிங்ஹாம்

கன்னிங்ஹாம் பள்ளிக்கூட மைதானத்தில் ஓடினார். எங்கெல்லாம் ஓட முடியுமோ, அங்கெல்லாம் ஓடினார். கல்லூரியில் சேர்ந்தபோது, ஓடுவதற்காக ஒரு குழுவையே உருவாக்கினார். 1932, 1936-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு முறையே நான்காவது, இரண்டாவது இடங்களுக்கு வந்தார். 1934-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நியூயார்க்கில், பிரபல மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஓடினார். பிழைக்க மாட்டான், நடக்க மாட்டான் என்றெல்லாம் நம்பப்பட்ட கன்னிங்ஹாம் ஒரு மைல் தூரத்தை 4:06.8 நிமிடத்தில் ஓடி முதல் முறையாக உலக சாதனை படைத்தார். 1936-ம் ஆண்டில் 800 மீட்டர் தூரத்தை 1:49.7 என்ற நிமிடக் கணக்கில் ஓடி இன்னோர் உலக சாதனை! மன உறுதியிருந்தால் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் எதிர்கொள்ளலாம் என்பது மட்டுமல்ல, சாதனையே புரியலாம் என்பதற்கு கிளென் கன்னிங்ஹாமின் கதை கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த உதாரணம். 

 

***     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!