Published:Updated:

''என்னை அழைத்தால் காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன்!”

 ''என்னை அழைத்தால் காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன்!”
''என்னை அழைத்தால் காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன்!”

ஜூனியர் விகடனிலிருந்து...

வாட்டாள் நாகராஜ் பராக்

கன்னட மொழி, கன்னட இனம், கன்னடப் பண்பாட்டுக்காக கழுதை, எருமை, குரங்கு, குதிரை மீது சவாரி என விதவித மாகப் போராடுபவர். சட்டமன்ற உறுப்பினராக 21 ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். 'கன்னட சலுவளி வாட்டாள்’ கட்சியின் தலைவர். காவிரிப் பிரச்னை எழுந்தால்... உடனே தமிழர்களுக்கு எதிராகக் கொதிப் பவர். இன்றைய டென்ஷன் நிலையில் வாட்டாள் நாகராஜை சந்தித்தோம்.

நாம் கேள்வி கேட்காமலேயே எண்ணெயில் போட்ட கடுகாய் வெடித்துத் தள்ளினார். அதில் பாதிக்கும் மேல் சென்சார் செய்யப்பட வேண்டியவை என்பதால் மீதி மட்டும் இங்கே...

''தண்ணீரை பாக்கெட்டில் வைத்துக்கொண்டா, இல்லை என சொல்கிறோம். மழையே பெய்யவில்லை என்றால், அப்புறம் எங்கிருந்து வரும் தண்ணீர்? ஜெயலலிதா பேசுவதைப் பார்த்தால், நாங்கள் என்

 ''என்னை அழைத்தால் காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன்!”

னமோ தண்ணீரை அண்டர்கிரவுண்டில் 'சம்ப்’ வெட்டி அடைச்சு வைத்திருப்பது போல இருக்கு. எந்த அணையிலுமே தண்ணீர் இல்லை என்ப‌தைக்கூட புரிந்து கொள்ளாமல் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போவதும், காவிரி நதி நீர் ஆணையத்துக்குப் போவதும், ஒன்றுமே தெரியாத அப்பாவி மன்மோகன் சிங்கிடம் போய் முறையிடுவதும் என்று, இந்த ஜெயலலிதா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? இந்த விஷயத்தில் கருணாநிதி எவ்வளவோ தேவலாம். கொஞ்சம் விட்டுக் கொடுப்பார். அவர்கிட்ட ஜெயலலிதா மாதிரி முரட்டுப் பிடிவாதம் கிடையாது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தப்பவே, என் லட்சக்கணக்கான தொண்டர்களிடம் கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணேன். 'ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாச்சு... இனி தலைவலி, ரோதனை தாங்க முடியாதுன்னு!’ அதே மாதிரி நடக்குது பார்த்தீங்களா? அவங்க மக்களுக்காக போராடுறாங்கன்னு நினைக்கிறீங்களா? இல்லவே இல்லை. ஏதோ பாலிடிக்ஸ் இருக்கு.

அவங்க கேஸுக்காக அஞ்சு தடவை பெங்களூரு வரத் தெரிஞ்சது. டெல்லிக்குப் போற ஜெயலலிதா பெங்களூரு வந்து, எங்க சி.எம்-மிடம் அஞ்சு நிமிஷம் பேசினா, தண்ணீரைக் கையோட கொண்டு போகலாம். அதை விட்டுட்டு ஆ... ஊ...ன்னா டெல்லிக்குப் போறாங்க. நீங்க எங்கே போனாலும் சரி... தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத்தண்ணீர் தர முடியாது. தர முடியாது. தரவே முடியாது!''

''எங்களுடைய முதலமைச்சர் மீது அப்படி என்ன தனிப்பட்ட கோபம்?''

அவர் மீது எந்தத் தனிப்பட்ட கோபமும் கிடையாது. மரியாதைதான் இருக்கு. அவர் நடிகையாக இருந்தப்போ மைசூரில் நடந்த கண்காட்சி நிகழ்ச்சிக்கு வர கே.கே.மூர்த்திகிட்ட பணம் வாங்கிட்டு, அவங்க வரலை. அப்புறம் மூணு நாள் கழிச்சு பிரிமியர் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் வந்திருந்தாங்க. அப்போ அவங்களை மறிச்சு, மூர்த்தியோட ஆட்கள் ஏகப்பட்ட கலாட்டா பண்ணிட்டாங்க. அப்ப நான் எம்.எல்.ஏ-வா இருந்தேன். உடனே, ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், மூர்த்திக்கு எதிராகவும் பிரச்னை செய்தவன் நான். இந்த வரலாறைத் தெரிஞ்சுக்குங்க தம்பி. ஜெயலலிதா என்னைக் கூப்பிட்டுப் பேசினா, காவிரிப் பிரச்னையை சுமுகமாக முடிச்சு வைப் பேன்.!''

'’ரஜினியையும் விமர்சனம் செஞ்சிருக்கீங்க?''

''ஆமா... அப்பப்போ ஏதாவது பேசுவேன். ரஜினி ஒரு மாராட்டிக்காரர். கர்நாடகாவில் பொறந்து வளர்ந்து இப்போ தமிழ்நாட்டில நடிச்சுப் பிழைக்கிறாரு. அவர் அதோடு நிறுத்திக்க வேண்டும். அதை விட்டுட்டு 'தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் விடுங்க’ன்னு இந்த முறை ஏதாவது பேசினா, நான் இன்னும் அதிகமாகப் பேசுவேன். அவருக்குப் (ரஜினிக்கு) பிடிச்ச பேச்சாளர் நான்தான். அவரே சென்னையில சொல்லி இருக் கார். அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு, என்னை உதைப்பேன்னும் பேசினார். ஆனா அதுக்காக என்கிட்டேயும், என் தொண்டர்களுக்கிட்டயும் மன்னிப்பு கேட்ட பிறகுதான் பெங்களூருக்குள்ளே கால் வெச்சார் தெரியுமா? அதனால் அவர் ஏதோ பேசிப் பிழைச்சுட்டுப் போறார் விடுங்க...'' என்று நக்கலாகச் சொல்கிறார் நாகராஜ்!

- இரா.வினோத் ,

படம்: சு.குமரேசன்