வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (03/11/2017)

கடைசி தொடர்பு:17:47 (03/11/2017)

அமர்த்தியா சென்... மக்கள் நலன் சிந்தித்த பொருளாதார தத்துவவாதி..! #HBDAmartya Sen

1998- ஆம் ஆண்டு பொருளாதாரத் துறையில் அவரது பங்களிப்பைப் பாராட்டி நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் வைத்து ‘பிரதிச்சி' என்ற அமைப்பைத் தொடங்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காகச் செலவு செய்கிறார். தேசத்தின் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் முன்னேற்றத்தில்தான் உள்ளது என்பதையே எப்போதும் வலியுறுத்துவார் அவர். பொருளாதாரத் துறையில் தவிர்க்கமுடியாத அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது. அவர் பெயர் அமர்த்தியாசென். 

அமர்த்தியா சென்

உலகமே பறவைக்கூடு:

‘உலகமே பறவைக்கூடு' என்ற வாசகத்தைத் தாங்கி நிற்கும் இரவீந்திரநாத் தாகூரின் 'சாந்தி நிகேதனில்' தான் அமர்த்தியாசென் பிறந்தார். தாகூர்தான் அமர்த்தியா சென் என்ற பெறரைச் சூட்டினார். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். இந்தியா, இங்கிலாந்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அமர்த்தியா சென், தன்னுடைய பொருளாதாரப் பார்வையை வங்கத்தின் ஏழை மக்களின் பசியின் வழியே பார்த்தார். எளிய மக்களின் வளர்ச்சியே உண்மையான பொருளாதார வளர்ச்சி என்ற கருத்தில் மிக உறுதியாக இருந்தார்.  உணவு உற்பத்தியை அதிகப்படுத்திக்கொண்டே செல்வது மட்டும் போதாது. பஞ்சத்தில் வாடும் மக்கள் அதைவாங்க வழிசெய்யவேண்டும். அதுதான் தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச்செல்லும் என்ற கோட்பாட்டை ஆழமாக எடுத்துரைத்தார். 1999-ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியது.

அமர்த்தியா சென்

புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்:

சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி, வெளியிட்ட பெருமை அமர்த்தியா சென்னுக்கு உண்டு. 1982-ம் ஆண்டு அவர், ‘Poverty and famines’ (வறுமை மற்றும் பஞ்சம்) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.  ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தில் வெளியிடப்பட்ட 'ஹ்யூமன் டெவலப்மென்ட் ரிப்போர்ட்' (மனித அபிவிருத்தி அறிக்கை), என்ற கட்டுரையை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு. 1990-ம் ஆண்டில்,  'தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸ்’-ல்,  'More than 100 million womens are missing' என்ற கட்டுரையை வெளியிட்டார். இந்தக் கட்டுரை சர்ச்சைக்குள்ளானது. அமர்த்தியா சென் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

தன் ஆராய்ச்சி மூலம் அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் புதிய தரங்களைக் கொண்டு வந்தார். பொருளாதார வளர்ச்சிப் பகுதியில், அவர், 'ஈக்வாலிட்டி ஆஃப் வாட்' என்ற ஆய்வுக் கட்டுரையின் மூலமாகச் செயல்திறனின் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். 

அரசியல் சர்ச்சைகள்:

அமர்த்தியாசென்

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், ‘‘நாட்டின் சில தொழிற்துறை சேர்ந்தவர்களுக்கு வேண்டுமானால் மோடி நல்லவராக இருக்கலாம். ஆனால், அவர் சிறுபான்மையினரின் மனதை, எண்ணங்களைப் புரிந்துகொள்ளக்கூடியவர் அல்ல. சில துறைகளில் மட்டுமே அவர் திறமைசாலி’’ என்றார். ‘குஜராத் உண்மையில் வளர்ச்சியடைந்த மாநிலமல்ல கேரளாவும், தமிழகமும் மட்டுமே வளர்ச்சி அடைந்தவை. குஜராத்தின் ஒரு பகுதி வளர்ச்சியடைந்திருந்தாலும், பிற பகுதிகளில் மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்ற கருத்தை முன்வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர், 'அமர்த்தியா சென்னிடமிருந்து பாரத ரத்னா' விருதைத் திரும்பப்பெற வேண்டும்’ என்றனர். அதற்கு, 'வாஜ்பாய் கேட்டுக்கொண்டால் பாரத ரத்னாவைத் திருப்பித் தரத் தயார்’ என அமர்த்தியா சென் பதிலடி கொடுத்தார். 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தபோதும் அதற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.

ஆவணப்படத் தணிக்கை:

'தி ஆர்கியுமனட்டேட்டிவ் இந்தியன்' என்ற பெயரில் இவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை சுமன் கோஷ் தயாரித்தார். மத்திய திரைப்பட தணிக்கைக் குழு, படத் தயாரிப்பாளர் சுமன் கோஷிடம்,  ''குஜராத், பசு, ஹிந்து இந்தியா, இந்தியாவின் ஹிந்துத்துவப் பார்வை ஆகிய வார்த்தைகளில் பீப் ஒலியை ஒலிக்க விட்டால்தான் தணிக்கைச் சான்றிதழ் வழங்கமுடியும்’' என்று தெரிவித்தது. ஆனால், அதை நீக்கப் போவதில்லை என்று சுமன் கோஷ் தெரிவித்தார். அவரது கருத்துக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

பல நாடுகளில் ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க பல்வேறு கோட்பாடுகளை வகுத்தவர். எப்போதும் பொருளாதாரமும், தத்துவமும் கலந்த பார்வையிலேயே மக்களைப் பற்றி சிந்திப்பவர். நாட்டின் வளர்ச்சி சரியான விகிதத்தில் பங்கிடப்படுவதில்லை என்ற ஆதங்கப்படுபவர். கல்வி, ஜனநாயகம் மட்டுமே மனிதகுலத்தை மேம்படுத்தும் என்ற உறுதியோடு செயல்படுபவர் என அமர்த்தியா சென் புகழ் பாட பல காரணங்கள் இருக்கின்றன. தாகூர் வைத்த 'அமர்த்தியா' என்ற பெயருக்கு வங்க மொழியில் 'இறவாத' என்று பொருள். அமர்த்தியா சென் அவரது செயல்பாடுகளால் எப்போதும் இறவாத புகழுக்குச் சொந்தக்காரராகவே இருப்பார்.


டிரெண்டிங் @ விகடன்