வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (04/11/2017)

கடைசி தொடர்பு:14:54 (09/07/2018)

ஒற்றைச் சாளர முறை... தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க உதவுமா?

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றால், பல்வேறு அனுமதிகளைப் பெற அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி ‘கவனிக்க வேண்டியதைக் கவனித்தால்’ மட்டுமே அனுமதி கிடைக்கும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால், முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கு யோசித்துவருகின்றனர். இந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்கும் வகையில் ஒருங்கிணைந்த ‘இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை’ (Single Window System) வசதியைத் தொடங்கி இருக்கிறது தமிழக அரசின் தொழில் துறை.

ஒற்றைச் சாளர முறை

இதற்கான இணையதள www.easybusiness.tn.gov.in வசதியை 2.11.2017 அன்று தொடங்கி வைத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.  இதுகுறித்து தமிழகத் தொழில்துறையினருடனும், தொழில் நிறுவனங்களிடமும் பேசினோம். 

‘‘இந்த ஒற்றைச் சாளர வசதியின்மூலம் நகர மற்றும் ஊரமைப்புத் திட்டமிடல் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, தொழிலாளர் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் போன்ற 11 அரசுத் துறைகள் மூலம் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு அனுமதிகள் கிடைக்கும். நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்ற அனுமதிகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் இந்த இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று தமிழகத் தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒற்றைச் சாளர முறை

மேலும், ‘‘இந்த இணையதளம் மூலமாக அரசுத் துறைகளின் 37 வகையான சேவைகளை முதலீட்டாளர்கள் பெற முடியும். இனி தொழில் தொடங்கவிருக்கும் முதலீட்டாளர்கள் இந்த இணையதளத்தின் வழியே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தவும் முடியும். இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலம் விண்ணப்பத்தின் நிலையினைத் தெரிந்துகொள்ளவும், இறுதி ஒப்புதல்களை விண்ணப்பம் செய்தவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இதன்மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் வலுவடையும். 

தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு ஒவ்வொரு அனுமதியைப் பெறுவதற்கும் கால நிர்ணயம் செய்திருப்பதன்மூலம், இனிவரும் காலத்தில் ஒற்றைச் சாளர முறை அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும். தமிழ்நாட்டில் வணிகத்தை எளிதாக்கும் வகையில் அவசரச் சட்டத்தையும், விதிமுறைகளையும் வகுத்துள்ளோம். இதில் தொழில் துறைக்குத் தேவையான அனுமதிகளை அரசுத் துறைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். உரிய காலத்தில் தொழில் துறையினருக்கு அனுமதிகள் வழங்கப்படுவதைக் கண்காணிக்கவும், முதலீட்டாளர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்துள்ளோம். இதன்மூலம், விரைவில் தமிழ்நாடு தொழில் துறையில் மற்ற மாநிலங்களுடன் போட்டி போடும் நிலை உருவாகும்’’ என்கிறார்கள் தமிழக அரசின் தொழில்துறையினர். 

ஒற்றைச் சாளரமுறை

ஒற்றைச் சாரள முறை வசதிகுறித்து சி.ஐ.ஐ-யின் தமிழகப் பிரிவின் துணைத் தலைவர் ‘பொன்ப்யூர்’ பொன்னுசாமியுடன் பேசினோம். “இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இணையதள வழி ஒற்றைச் சாளர முறை நடைமுறைப்படுத்தி இருந்தாலும், அவ்வளவாக செயல்பாட்டில் இல்லாமலேயே இருந்தது. ஆனால், தற்போது ஆந்திரா, தெலுங்கானா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ளதை விடச் சிறப்பான முறையில் செயல்படும் வகையில் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை வடிவமைத்திருக்கிறது தமிழக அரசின் தொழில் துறை. 

இந்த ஒற்றைச் சாரள முறை வசதியைப் பயன்படுத்தி தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான திட்ட அனுமதி, தொழிலாளர் துறை அனுமதி, நிறுவன ஆய்வாளரின் அனுமதி, மாசுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அனுமதி என அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிடலாம். அனுமதிக்காக நாள் கணக்கில் அலைய வேண்டியதில்லை. விண்ணப்பித்து குறிப்பிட்ட நாள்களில் துறை சார்ந்த சந்தேகமோ அல்லது கூடுதல் விளக்கமோ, தகவலோ தேவைப்பட்டால் அதனைத் தெரிவிக்க வேண்டும். கூடுதல் தகவல் கேட்டு, அதற்கு உரிய விளக்கம் கொடுத்த குறிப்பிட்ட நாள்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். எந்த விளக்கமும் கேட்கவில்லை என்றால் குறிப்பிட்ட நாள்களில் அனுமதி கிடைத்தாக பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். இதற்காக ஏற்கெனவே தொழில்நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தித்தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் தமிழக அரசின் தொழில்துறையினர். இதன்மூலம் இனி தமிழ்நாட்டில் நிறைய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார் பொன்னுசாமி. 

அரசு பல திட்டங்கள் தொடங்கும்போது சிறப்பாகத் தோன்றும். காலப்போக்கில் காணாமல் போய்விடும். அதுபோன்ற நிலை மாறி, இனி தமிழகத்தில் தொழில்துறை முன்னேற வேண்டும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. தமிழக அரசு இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் என்று நம்புவோமாக!


டிரெண்டிங் @ விகடன்