குழந்தையை அடிக்கும் பெற்றோரா நீங்கள்? இந்த 5 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள் #GoodParenting

குழந்தை

'அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான்’, ‘அடியாத மாடு படியாது’ என்பதெல்லாம் நம் சமூகத்தில் அடிப்பதற்கு ஆதரவான பழமொழிகள். இவற்றைப் பரிசோதித்துப் பார்ப்பதற்குச் சக மனிதர்களை விடவும் தம் குழந்தைகளைத்தான் பெற்றோர் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் பல பெற்றோர் எங்கள் குழந்தையை நாங்கள் அடிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்புகின்றனர். குழந்தைகள் இருக்கும் அநேக வீடுகளில் இது குறித்த உரையாடல் வராமல் இருப்பதில்லை.

பெற்றோர், குழந்தைகளை ஏன் அடிக்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம். பெற்றோர், தாம் இட்ட வேலையைச் சரியாகச் செய்யாததற்காகக் குழந்தைகளை அடிப்பது, பள்ளியில் ஏதேனும் சேட்டைகள் செய்ததாகப் புகார் வந்தால் அதற்காக அடிப்பது, பாடத்தில் பெற்றோர் நினைக்கும் அளவுக்கான மதிப்பெண் பெறாவிட்டால் அடிப்பது, கேள்விகளால் துளைத்தெடுத்தால் அடிப்பது, எதிர்த்துப் பேசினால், ஏதேனும் வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தால், விருந்தினர் முன் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டால், பொருளை உடைத்துவிட்டால்.... என, பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை அடிப்பதற்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்வார்கள். 

குழந்தைகளை அடிப்பதன் மூலம் அவர்களைத் திருத்துவதாகவும் மீண்டும் அந்தத் தவற்றைச் செய்யாமல் தடுப்பதாகவும் தங்கள் செய்கைக்கு நியாயம் கற்பிப்பார்கள். உண்மையில் அடிப்பதனால் அவையெல்லாம் சரி செய்யப்படுகிறதா என்றால் இல்லையென்றே குழந்தைகள் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் செய்ததாகப் பெற்றோர் நினைக்கும் தவற்றை, அவர்களின் தரப்பிலிருந்து ஒரு நிமிடம் யோசித்தால்போதும் அடிக்கும் சூழல்களின் எண்ணிக்கை எண்பது சதவிகிதம் குறைந்துவிடும். மீதம் உள்ளவற்றையும் பேசி சரி செய்துவிட முடியும். ஆனால், அதை விடுத்து அடிப்பது ஒன்றே தீர்வு என நினைக்கும் பெற்றோர்கள் கீழ்காணும் ஐந்து விஷயங்களை நினைவுகொள்ளுங்கள். 

 குழந்தை

1. உடல்நலம்:

குழந்தைகளை அடிக்கும் சூழலில் நிச்சயம் பெற்றோர் கோபத்துடன் இருப்பர். மேலும், அடிபடும்போது குழந்தைகள் துள்ளிக் குதிப்பார்கள். இதனால், குழந்தைகளின் உடலின் மென்மையான பகுதிகளில் (உதாரணமாக... கண்) பட்டுவிட்டால், அவர்கள் வாழ்முழுவதும் கடும் சிரமத்துடன் வாழ நேரிடும். ஓரிரு மாதங்கள் கழித்து, யோசித்துப் பார்த்தால் குழந்தையை அடித்தது மிக அற்பமான காரணமாக இருக்கும்.

2. மனநலம்:

குழந்தைகளின் உடல்நலத்தைப் போலவே மனநிலையும் அடிவாங்குவதால் பெரிதும் பாதிக்கப்படும். செய்த செயல் மீது தவறான புரிதலே அவர்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக, யாரேனும் ஒருவருக்கு, தன் பொருளைக் கொடுத்து உதவியிருப்பதற்காக அடிவாங்கினால், உதவும் குணத்தைப் பற்றிய மதிப்பீடே தவறாகப் புரிந்துகொள்வார்கள். மேலும்,. தன் வயதை ஒத்த குழந்தைகளின் எதிரில் அடிபட நேரிட்டால் அதை பெரும் அவமானமாகக் கருதி, நல்ல நட்பையும் இழக்க நேரிடக்கூடும்.

3. தவறான முன்உதாரணம்:

எதற்காகப் பெற்றோரிடம் அடிவாங்குகிறோமோ அதை மற்றவர்கள் செய்தால் அடிக்கலாம் எனும் தவறான முன் உதாரணமாக மாறக்கூடும். தன்னுடைய சக மாணவர் செய்யும் தவறின்போது அடித்துத் திருத்துகிறேன் என அடிதடியில் இறங்கக்கூடும். இது மோசமான முறையாகும்.

குழந்தை

4. உரிமை மீறல்:

என்னதான் அவர்கள் உங்கள் குழந்தைகள் என்றாலும் அவர்களை உடல் மற்றும் மன ரீதியாகக் காயப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். குழந்தைகள் உரிமை மீறலின் கீழ் இது வரும். 

5. குற்றவுணர்வு:

குழந்தைகள் செய்த தவறு ஒருபுறம், சட்டம் ஒரு புறம்... இவற்றை எல்லாம் நகர்த்திவிட்டுப் பாருங்கள். காலையில் உங்கள் குழந்தையை அடித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அன்றைய தினத்தின் வழக்கமான செயல்களில் எப்போதும்போல ஈடுபட முடியுமா? வலிக்க வலிக்க அடித்துவிட்டோமே என்கிற குற்றவுணர்வு உங்களைத் துரத்திக்கொண்டே இருக்குமே? இது தேவையா?

'குழந்தைகள் உங்கள் மூலமாக வந்தவர்கள் என்பதால் உங்களின் உடமைகள் அல்ல' எனக் கவிஞர் கலீல் ஜிப்ரான் எழுதியிருப்பார். இதை மனதில் கொண்டு, எந்தச் சூழலிலும் குழந்தைகளை அடிப்பதைத் தவிருங்கள். எதையும் பேசிப் புரிய வையுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!