‘கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும் விருப்பமான செயலாக இருந்தது. அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம் எடுப்பது பிரபலமாகிவிட்டது. தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது பிரபலமாகிவருகிறது. ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை. யூ டியூப் எங்கும் நிறைந்துகிடக்கும் குறும்படங்களில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை, கதைகளை மையப்படுத்தி எடுத்த குறும்படங்கள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

பசி : 

பசி

‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தாளர் கே.ராஜாராமின் ‘பசி’ என்ற சிறுகதையைத் தழுவி இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். உடல்நிலை சரியில்லாத தன் அம்மா படுக்கையில் இருக்க, ஆட்டைப் பிடித்துக் கட்டிவிட்டு பள்ளிக்குக் கிளம்புகிறான் ஒரு சிறுவன். வீட்டில் உள்ள காலிப் பாத்திரங்களைத் தடவிப்பார்த்துவிட்டு பட்டினியுடனே பள்ளிக்கு ஓடுகிறான்.

பள்ளியில் அவன் நுழையும்போது  சத்துணவுக்காக சமையல் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகத் தொடங்குகிறது குறும்படம். வெளியே தயாராகிக்கொண்டிருக்கும் உணவைப் பற்றியே வகுப்புக்குள் இருக்கும் சிறுவன் சிந்தித்துக்கொண்டிருப்பான். பசியின் உக்கிரம் ஆட்கொண்டிருக்கும் கணமும், உணவுக்கான காத்திருப்பும், அந்தச் சிறுவனின் மன ஓட்டமும் இந்தக் குறும்படத்தில் நிறைவாகச்  சித்திரிக்கப்பட்டிருக்கும்.

தரமணியில் கரப்பான் பூச்சிகள்: 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதையான `தரமணியில் கரப்பான் பூச்சிகள்' கதையைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட குறும்படம். இந்தக் குறும்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின். இவர் சமீபத்தில் வெளியான `குரங்குபொம்மை' திரைப்படத்துகான வசனம் எழுதியவர். இவர் `தர்மம்' என்ற குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர். சென்னை வீதிகளில் அயர்ன் செய்த சட்டையுடன் டை அணிந்தபடி புத்தகங்கள் மற்றும் வாஷிங் பவுடர்களை மார்க்கெட்டிங் செய்யும் எண்ணற்ற இளைஞர்களை நாம் கடந்திருப்போம். அத்தகைய மார்க்கெட்டிங் வேலையில் அல்லல்படும் இளைஞர்களை மையமாகவைத்து இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தக்கையின் மீது நான்கு கண்கள்: 

எழுத்தாளர் சா.கந்தசாமியின் `தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதையை மையப்படுத்தி, இயக்குநர் வசந்த் இயக்கியிருக்கும் குறும்படம். இதில் நடிகர் வீராசாமி, தாத்தாவாக நடித்திருப்பார். பல ஆண்டுகளாக மீன் பிடித்துவரும் தாத்தாவால் குளத்தில் இருக்கும் மீன் ஒன்றைப் பிடிக்க முடியாமல்போகவே அந்த ஆற்றாமை, பேரனின் மீதான கோபமாக மாறும். பேரனுக்கும் அந்த மீனைப் பிடிக்கும் ஆசையிருக்க, தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான மனப்போட்டியாக கதை நகரும். 

கர்ண மோட்சம்: 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மிகச்சிறந்த கதை. எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவரான முரளிமனோகர் இயக்கிய குறும்படம். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், தேசிய விருதைப் பெற்றுள்ளது. கூத்துக் கலைஞர்களின் வாழ்வு எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் குறும்படம் சித்திரிக்கிறது. பள்ளியில் நடக்கும் விழாவுக்காகத் தன் மகனுடன் கூத்துக்கட்ட வருகிறார் கூத்துக்கலைஞர். அந்த விழா ரத்துசெய்யப்பட்டவுடன் அவரும் மகனும் வீட்டுக்குத் திரும்புவதாகத் தொடங்கும் படம், கூத்துக் கலைஞரின் அகவுணர்வுகளைச் சார்ந்து நகரும்.

இந்தக் குறும்படங்கள் தவிர, இன்னும் சில குறும்படங்களும் சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கின்றன. உலகின் முக்கியமான இயக்குநர்கள் பலரும், ஏதாவது ஒரு முழு நாவலையோ அல்லது நாவலின் ஒரு பகுதியையோ திரைக்கதை அமைத்து படம் எடுக்கிறார்கள். தமிழ்ச் சூழலில் நாவலைத் தழுவியோ, சிறுகதைகளைத் தழுவியோ குறும்படங்கள், திரைப்படங்கள் எடுப்பது குறைவாகவே உள்ளது. இதனாலேயே திரைப்படம், குறும்படம் எடுப்பதற்கு தகுதியுடைய ஏராளமான கதைகள் இன்னும் திரைவடிவம் பெறாமல் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!