வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (06/11/2017)

கடைசி தொடர்பு:21:20 (06/11/2017)

தலையில் இறங்கிய இரும்புக் கம்பி... பிழைத்ததும் ஆளே மாறிய அதிசயம்! #PhineasGage

சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத, அல்லது செய்ய கடினமான காரியங்களைச் சுலபமாகச் சாதிப்பவனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம், மக்களால் அவனுக்குக் கிடைக்கும் அடைமொழி. அப்படிப் பல வித்தியாசமான பெயர்கள், அடைமொழிகள் அமெரிக்காவில் நிறையவே உண்டு. இதில் மருத்துவ வரலாற்றை ஆராய்ந்தால் இன்னமும் பல விந்தையான பெயர்கள், கதைகள் கிட்டும். அப்படி அமெரிக்காவின் 'கடப்பாரை மனிதன்' எனப் பெயர் பெற்ற பினியாஸ் கேஜ் என்பவரின் கதை சற்று பயமூட்டுவது, ஆனால், சிந்திக்கவைப்பது.

பினியாஸ் கேஜ் - கடப்பாரை மனிதன்

Originally from the collection of Jack and Beverly Wilgus; now in the Warren Anatomical Museum, Harvard Medical School.

ரயில்வே கட்டுமானப் பணியாளரான பினியாஸ் கேஜ் 1823ம் வருடம் பிறந்தார். ஐந்து பிள்ளைகளில் மூத்தவரான பினியாஸ் 25 வயது வரை நல்ல திடகாத்திரமான, ஆரோக்கியமான இளைஞனாகவே வாழ்ந்து வந்தார். செப்டம்பர் 13, 1848ம் வருடம் வெர்மான்ட் மாகாணத்தில் இருக்கும் கேவன்டிஷ் என்னும் சிறிய நகரில் ரட்லாண்ட் மற்றும் பர்லிங்டன் இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பாறைகளை உடைக்க வெடிமருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கவனக்குறைவால் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிமருந்தை வைத்து அழுத்தி, பேக் செய்யும் பெரிய இரும்பு கம்பி ஒன்று இவர் முகத்தைத் தாக்கியது. இடது தாடை வழியாக உள்ளே சென்ற அந்தக் கம்பி, அவர் உச்சந்தலை வழியாக வெளியேறியது. 43 அங்குல நீளம், 3.2 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 6 கிலோ எடை கொண்ட அந்தக் கம்பி ஒரு துப்பாக்கிக் குண்டை போல அவர் தலை வழியாக வெளியேறி தரையில் விழுந்தது.

விபத்து விளக்கப்படம்தூக்கி எறியப்பட்ட பினியாஸ்க்கு முதலில் வலிப்பு ஏற்பட்டது. ஆனால், சில நிமிடங்கள் கழித்து அவரால் பேச முடிந்தது. கைத்தாங்கலாக வாகனம் வரை சென்று, கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் பயணம் செய்து மருத்துவரைச் சந்தித்தார். ஜான் மார்டின் ஹார்லோ என்ற அந்த மருத்துவரைச் சந்தித்தவுடன் பினியாஸ் கூறிய அந்த ஒரு வாக்கியம் மருத்துவ உலகில் மிகப் பிரபலம். “உங்களுக்கு இதோ ஒரு பெரிய கேஸ்!” (Here's business enough for you) என்ற அந்த வார்த்தைகள் மருத்துவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நக்கலான சீண்டலாக இருந்தாலும், அதுவல்ல பிரச்னை. இப்படி ஒரு விபத்துக்குப் பிறகு, அவர் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்னும் நிலையில், பினியாஸ் முழு சுயநினைவுடன் இருக்கிறார் என்பதே!

அந்தத் தருணத்தில் இருந்து பினியாஸ் கேஜ் அந்த ஊரில் ஒரு சினிமா நட்சத்திரம் போல பிரபலமானார். சாவையே வென்ற சூப்பர் ஹீரோ என்று எல்லோராலும் கொண்டாடப்பட்டார். பரிசோதனையில் அவருடைய மூளையின் முன்புற மடல் (Frontal Lobe) பெரும் பாதிப்படைந்திருந்தது. முதலுதவி சிகிச்சையின் போது அவரின் தலையை மொட்டையடித்து, உறைந்திருந்த ரத்தம், மண்டை ஓட்டின் சிதறிய சில எலும்புத் துண்டுகள் மற்றும் வெளியில் வந்த அவர் மூளையின் ஒரு சிறிய பகுதி (30 கிராம்) ஆகியவை நீக்கப்பட்டன. கட்டுப் போடப்பட்டு படுக்கையில் வைக்கப்பட்டார். இரண்டாம் நாளின் போது, கட்டுப்பாடு இல்லாத மனிதரைப் போல தெரிந்தாலும், சீக்கிரமே இயல்பு நிலைக்குத் திரும்பினார். வெளியூரிலிருந்து வந்த தன் தாய், மாமா மற்றும் நண்பர்களை அடையாளம் கண்டுகொண்டார். நினைவுகளுக்குப் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு, அவருக்குச் சில மாதங்கள் சிகிச்சை அளித்தார் மார்ட்டின். சிறிது சிறிதாக உடல் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியிருந்தது. ஆனால், பிறகுதான் தொடங்கியது ஒரு புதிய பிரச்னை.மருத்துவர் ஜான் மார்டின் ஹார்லோ

விபத்திற்கு முன், பினியாஸ் கேஜ் என்ற அந்த ரயில்வே தொழிலாளி, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். பணியில் கண்ணுங்கருத்துமாக இருப்பவர். தன்னுடன் வேலை பார்ப்பவர்களை மிகவும் மதிப்பவர். விபத்திற்குப் பிறகு, இதில் தலைகீழ் மாற்றம். அட்டவணை படி வேலை செய்ய மறுத்தார். நண்பர்களை மதிக்காமல் செயல்பட தொடங்கினார். ரயில்வே நிர்வாகம் இவரைத் தொடர்ந்து பணியில் அமர்த்திக்கொள்ள மறுத்தது. பின்பு ஒரு குதிரை லாயம், மீண்டும் வேறு ஓர் இடத்தில் ரயில்வே வேலை என்று சுற்றிவிட்டு சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் தன் சொந்தங்களுடனே வாழச் சென்றுவிட்டார். 1860ம் ஆண்டு, மே மாதம் தன் 36வது வயதில், தொடர்ந்து வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார் பினியாஸ் கேஜ்.

அதன் பிறகுதான் மேலும் பிரபலமானார். அவரைத் தாக்கியது ஒரு கனமான இரும்புக் கம்பி என்றாலும், அமெரிக்காவின் கடப்பாரை மனிதர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், நரம்பியல் மருத்துவர்கள் இவரைக் குறித்து ஆராய்ச்சி செய்தனர். இப்படி ஒரு கோர விபத்திலிருந்து அவர் தப்பியது ஓர் ஆச்சர்யம் என்றால், சுயநினைவுடன் இருந்தது அதைவிடப் பெரிய ஆச்சர்யம். விபத்திற்குப் பிறகு அவர் குணநலன்களில் ஏற்பட்ட மாற்றங்கள் வேறு மருத்துவர்களுக்குப் பல குழப்பங்களை ஏற்படுத்தியது. இன்று வரை பல உளவியலாளர்கள் இந்த விசித்திர மனிதனைப் பற்றி ஆராய்ந்து எழுதி வருகின்றனர்.

தாக்கப்பட்ட மண்டை ஓடு

Photo Courtesy: Phyllis Gage Hartley/Creative Commons

1940களில், நரம்பியல் நிபுணர் ஸ்டான்லி காப் பினியாஸ் கேஜ்ஜின் மருத்துவ கோப்புகளைக்கொண்டு அவரின் விபத்திற்குப் பிறகு அவரின் மண்டை ஓடு இப்படித்தான் இருந்திருக்கும் என்று வரைந்து காண்பித்தார். அதன் மூலம், அந்தக் கம்பி சென்ற பாதையைச் சரியாகத் தீர்மானித்து காட்டினார்.

1980களில்  சி.டி. ஸ்கேன் (CT Scan) தொழில்நுட்பம் கொண்டு அந்த வடிவத்தை மேலும் மெருகேற்றினர். அதன் மூலம், அதுவரை தென்படாத பல விஷயங்கள் புலப்பட்டன.

1990களில் அவரின் மண்டை ஓடு தெளிவான 3D வடிவம் பெற்றது.

2012ம் ஆண்டில், இயல்பு நிலையில் இருக்கும் ஒரு சில மனித மூளைகளின் எம்.ஆர்.ஐ ஸ்கேன்களைக் (MRI) கொண்டு அந்த விபத்தால் பினியாஸ் கேஜ்ஜின் மூளையில் நரம்புகள் எவ்வாறெல்லாம் மாற்றமடைந்தன என்று தெளிவாக விளக்கினார்.

 

 

விபத்திற்குப் பிறகு, அவரின் நடவடிக்கையில், குணநலன்களில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டது என்று அவரின் தாயார் தொடங்கி, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரை உறுதி செய்தனர். இது ஒரு புறம் என்றாலும், இப்படி ஒரு கோர விபத்தில் இருந்து கூட, ஒரு மனித உயிரை, அதுவும் மூளைக்கு, அதன் நினைவுகளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படாமல் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்குப் பிறந்தது. பினியாஸ் கேஜ்ஜின் மருத்துவக் கோப்புகள் நமக்குச் சொல்லும் மிக முக்கியமான விஷயமும் அதுதான்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்