Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்லூரி கட்டணத்துக்கு கஷ்டப்பட்டவர் இரண்டு நோபல் வென்ற கதை! #MarieCurieMemories

Marie Curie

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று உலகம் முழுவதும் ரேடியம் முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால், ஏராளமானவர்கள் நோயிலிருந்து விடுபடவும் செய்கிறார்கள். இந்த மருத்துவப் புரட்சிக்கு வித்திட்டவர் மேரி கியூரி  (Marie Curie). 

கல்வி ஒன்று மட்டுமே மனித குலத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தக்கூடியது. ஆனால், கல்வி எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. அதிலும் பின்தங்கிய பொருளாதாரத்தில் இருக்கும் குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் கல்வியைப் பெற்று வெளியுலகில் தடம் பதிப்பது என்பது பெரும் போராட்டம்தான். அதுபோன்ற குடும்பம் ஒன்றில் பிறந்தவர்தான் மேரி. ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்ட போலந்து நாட்டில் 1867-ம் ஆண்டு நவம்பர் 7-நாள் பிறந்தார். ஜார் மன்னரின் கொடுமையான ஆட்சிக்குட்பட்டிருந்த அந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பலரும் ஈடுபட்டிருந்தனர். மேரியின் குடும்பமும் அவற்றில் ஒன்று. இவரின் பெற்றோர் ஆசிரியர்கள். இவருக்கு, பத்து வயதாக இருக்கும்போது அம்மா இறந்துபோகிறார். மேரிக்கு ஆசிரியராகவும் ஓவியராகவும் விளங்கிய அவரின் தாய் இறந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.  

தனது பள்ளிப் படிப்பில் முதல் மாணவியாக மேரி தேர்ச்சிப் பெற்றாலும் கல்லூரிப் படிப்பைப் படிக்க, போதுமான பொருளாதார வசதி இல்லாத சூழலில் குடும்பம் இருந்தது. அதனால், கல்லூரிக்கான பணத்தைக் கட்ட பகுதி நேர வேலைகள் பலவற்றைப் பார்த்தார். இவரின் அக்காவுக்குப் படிப்பின்மீது ஆர்வம் இருந்தும் குடும்பச் சூழலால், வேலைக்காகப் பாரிஸுக்குச் செல்ல வேண்டியிருந்தது. போராடிக் கிடைத்த கல்வியில் முழுக் கவனத்துடன் படித்து, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் முனைவர் எனும் பெருமையையும் சூடிக்கொண்டார்.

மேரி பாரிஸில் தன் ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்குப் பேராசிரியர் பியரி கியூரியைச் சந்திக்கிறார். இருவரும் ஒரு திசையில் பயணிக்கக் கூடியவர்களாக இருந்ததால் இருவரின் எண்ணங்களும் ஒன்றாக, திருமணம் செய்துகொள்கின்றனர். அறிவியல் மீது பேரார்வம் கொண்ட இந்தத் தம்பதி யுரேனியத்தை விடக் கதிரியக்கம் பொலோனியம் மற்றும் ரேடியம் ஆகியவற்றில் அதிகம் எனக் கண்டறிகின்றனர். 1903-ம் ஆண்டு ஹென்றி பெக்கெரலுடன் (Henri Becquerel) இணைந்து கதிரியக்கம் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசு பெறுகிறார். உலக அளவில் நோபல் பரிசு பெறும் முதல் பெண் எனும் பெருமையைத் தட்டிச்சென்றார்.

அடுத்தடுத்து ஆய்வில் பயணித்துகொண்டிருந்தபோது, மேரி கியூரியின் கணவர் பியரி கியூரி எதிர்பாராதவிதத்தில் இறந்துபோகிறார். உலகமே இருண்டுபோய்விடுகிறது மேரி கியூரிக்கு. சகப் பணியாளர்களின் வார்த்தைகளால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். அப்போதெல்லாம் தனது சொந்த கிராமத்துக்குச் சென்று பழைய நினைவுகளை மீட்டெடுத்துத் தன்னம்பிக்கை கொள்கிறார். 

மேரி கியூரி

கணவர் இறந்தபிறகு, மேரி கியூரி தனது ஆய்வில் தொடர்ந்து ஈடுபடுகிறார். ரேடியம் மற்றும் பொலோனியம் தொடர்பாக இவரின் ஆய்வுக்கு 1910-ம் ஆண்டு நோபல் பரிசு கிடைக்கிறது. இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் எனும் பெருமையும் கிடைக்கிறது. தனது மகளையும் ஆய்வில் ஈடுபடச் செய்தார். கேன்சரைக் குணப்படுத்தும் ரேடியத்தை இந்த உலகுக்கு மாபெரும் கொடையாக அளித்தார். ரேடியத்துக்கான காப்புரிமையைப் பெறச் சொல்லி பலரும் வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். ஏழை எளிய மக்களுக்கான சேவையாக அது அமையட்டும் என விட்டுவிட்டார். தனது அறுபத்தியேழு வயதில் மரணம் அடைந்தார். ஆனாலும் ஒவ்வொரு கேன்சர் நோயாளியின் சிகிச்சையிலும் அவர் உயிர்தெழுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement