Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மச்சு அணை... சிட்டா ஜிந்தங்... வெள்ளம் உடைத்த அணைக் கதைகள்!

செம்பரம்பாக்கம் ஏரியை அவ்வளவு எளிதில் சென்னைவாசிகளும் தமிழகமும் மறந்து விட முடியாது. ஏரியின் நீர்வரத்தைக் கவனிக்காமல் விட்டதன் பலனாய் 2015 டிசம்பர் 1 ஏரி அதன் கொள்ளளவைத் தாண்டியது. உடனடியாகத் திறந்து விடப்படுகிற நீரால் சென்னை அடைந்த இன்னல்கள் ஏராளம். இப்படி உலகம் முழுவதும் அணைகள் பற்றிய ஆயிரம் கதைகளும் துயரங்களும் உலகம் முழுமைக்கும் இருக்கிறது.  அழுத்தத்தால் உடைந்து போன சில அணைகள் பற்றிய சிறிய  அறிமுகம்.

பிரேசில்:

பிரேசில் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மரியானாவில் பெண்டோ ரோட்ரிக்ஸ் என்கிற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான சிறிய அணை ஒன்று உள்ளது. அங்கு முழுவதும் சுரங்கக் கழிவுகள் நிரப்பப்பட்டுள்ளன. 5 நவம்பர் 2015, 3:45 PM அணையின் பக்கவாட்டு சுவர் இடிந்ததில் தேக்கி வைத்திருந்த மொத்த இரும்பு தாதுக் கழிவுகளும் வெடித்துச் சிதறி ஊருக்குள் பாய்ந்தது. பதினேழு பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். பதினாறு பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். மொத்த கழிவுகளும் சேரும் சகதியுமாக தறிகெட்டு ஓடியது. செம்மண் கலவையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெண்ட்டோ ரோட்ரிக்ஸ் நகரம் மற்றும் அருகாமையிலுள்ள கிராமங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. 60 மில்லியன் கன மீட்டர் இரும்புக் கழிவுகள் டோவ் நதியில் ஓடியது. 17 நாள்களுக்குப் பிறகு நச்சு பழுப்புநிறத்தில் அட்லாண்டிக் பெருங்கடலை அடைந்தது. ஆற்றுக்கும், அதன் வாய்க்கும் அருகிலுள்ள கடற்கரைகளும், வனப்பகுதிகளும் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளைச்  சந்தித்தன.  இந்தச் சம்பவம் பிரேசில் வரலாற்றில் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு என்று விவரிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டின் பிரேசிலிய அதிகாரிகளிடமிருந்து  “அணையின் கட்டமைப்பில் சில பலவீனங்கள் இருப்பதாக அறிக்கை ஒன்றை அணையின் உரிமையாளர்களான வேல் மற்றும் பிஹெச்.பி பில்லிட்டோனுடன் சமர்ப்பித்திருக்கிறார்கள். BHP பில்லிடான் இந்த அறிக்கையை ஆரம்பத்தில் நிராகரித்தது. இந்தச் சம்பவத்தின் காரணங்கள்குறித்து இன்றளவும் விசாரணை நடக்கிறது.

பிரேசில் அணை


 

இந்தோனேசியா:

சிட்டா ஜிந்தங், இந்தோனேசியாவின் டாங்கரங்காங் மாவட்டத்தில் சிரிந்தீவு அருகில் இருக்கிற ஒரு செயற்கை ஏரி. 1933-ம் ஆண்டில் டச்சு காலனித்துவ அதிகாரிகளால் கட்டப்பட்ட இந்த அணை உயரம் 16 மீட்டர் (52 அடி). மார்ச்  27, 2009 கன மழை பெய்கிறது. பலத்த காற்றும் வீசுகிறது. ஏராளமான மரங்கள் பெயர்த்து எறியப்படுகின்றன. அப்போது அதிகாலை என்பதால் மக்கள் அனைவரும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். அன்று இரவு பல மணி நேரம் மழை பெய்தது. இதனால் அணையின் நீர்வரத்து அதிகரிக்கிறது. ஸ்ப்ரூவ் அணையின் நுழைவாயில் மிகவும் சிறியதாக இருந்தது. அணையின் மேற்பரப்பில் தண்ணீர் வரத்து அதிகரிக்க அதிகரிக்க  அணையில் விரிசல் ஏற்படத் தொடங்குகிறது. 27 அன்று காலை 2 மணியளவில் 70 மீட்டர் (230 அடி) அகலம் விரிசல் ஏற்பட்டது.  அணை உடைவதற்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. நள்ளிரவு என்பதால் வெள்ள எச்சரிக்கை மக்களுக்கு முறையாகச் சென்று சேரவில்லை. சில நிமிடங்களில் அணை உடைகிறது. வெள்ளத்தின் வேகத்துக்குக் கண்ணில் தென்படுகிற எல்லாவற்றையும் சுருட்டி வீசுகிறது. வீடுகள் மனிதர்கள் என யாரும் தப்பவில்லை. சில மீட்டர் உயரமான நீர் மற்றும் குப்பைகள் சிர்ன்டு நகரத்துக்குள் புகுந்தன. கார்கள், வீடுகள் மற்றும் பாலம் ஆகியவற்றை உடைத்து நொறுக்கியது. ஏற்பட்ட வெள்ளம் 2.5 மீட்டர் (8.2 அடி) ஆழத்தில் பாய்ந்தது.  பல மக்கள் இந்த நகரத்தில் சிக்கியிருந்தனர், பல நகரவாசிகள் வெள்ளப்பெருக்கைத் தவிர்ப்பதற்காக ஊரைக் காலி செய்கிறார்கள். வெள்ளம் 98 பேரைக் கொல்கிறது. 250 வீடுகள் சேதமடைந்தன. மினி சுனாமியைப்போல இது காணப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறுகிறார். தொடர்ந்து அப்பகுதியில், மீட்பு மற்றும் தேடுதல் வேட்டை நடந்தது .

இந்தோனேசியா அணை

இந்தோனேசிய அரசாங்கம் அருகிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மக்களைத் தங்கவைத்தது.  உயிர் பிழைத்தவர்களை காப்பாற்றுவதற்காகவும், சடலங்களை அருகில் உள்ள தற்காலிக சதுப்புநிலத்துக்குப் புதைக்கவும் ராணுவத்தை அழைத்தது. பேரழிவின் இடத்தை  ஜனாதிபதி யுதோயோனோ, துணைத் தலைவர் யூசுப் கல்லா மற்றும் அமைச்சர்  அபரிசல் பக்ரி  ஆகியோர்  பார்வையிடுகிறார்கள். வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் பழுதுபார்க்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியது. அணையின் கட்டுமானத்துக்கு அவசரகால மறுசீரமைப்பு நடைபெற்றது.  பேரழிவுக்கான காரணம்குறித்து விசாரணை செய்யப்படும் என்று ஜனாதிபதி யுதோயோனோ உறுதியளித்தார்.


ரஸ்யா

சயானோ-ஷுஷ்செஸ்காயா அணை ரஷ்யாவின் காகாசியாவில் சயனோகோர்கோஸுக்கு அருகே யெனீசீ ஆற்றின்மீது அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் மிகப்பெரிய மின் ஆலை மற்றும் உலகில் 9-வது மிகப்பெரிய நீர்மின் ஆலை. இதன் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 6,500 மெகா வாட்ஸ். 17 ஆகஸ்ட் 2009 இல் 8:13 AM அன்று,  ஹைட்ரோ-மின் ஆலை ஒரு விபத்தைச்  சந்தித்தது. மின் நிலையத்தின் இயந்திரம் மற்றும் (டர்பைன்) விசையாழி அறைகளை தண்ணீர் சூழ்கிறது. அங்கிருந்த  இரண்டு 711 MVA மின்சார ஜெனரேட்டர்கள் நீருக்கடியில் வெடிக்கின்றன.  மற்ற இயந்திரங்களும் சேதமடைந்தன. நான்கு ஹைட்ரோ-திரட்டுகள் இறுதியாக மீட்கப்பட்டன. 10 செப்டம்பர் 2012-ம் ஆண்டு அறிக்கையின் படி 75 பேர் இறந்திருக்கிறார்கள்.


இந்தியா

பீகார் மாநிலம், பாகல்பூர் அருகே கடந்த 40 ஆண்டுகளாக ரூ.389 கோடி செலவில் ஓர் அணை கட்டப்பட்டு வந்தது. பீகார்-ஜார்கண்ட் இணைந்துக் கட்டிய அந்த அணையை பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  திறப்பு விழாவுக்கு முந்தைய நாள் நடத்தப்பட்ட அணையின் முன்னோட்ட சோதனையின்போது, கங்கை நதியிலிருந்து முழு வேகத்தில் வந்த அதிகப்படியான நீர்வரத்தால் தடுப்பணையின் ஒரு பகுதி திடீரென உடைந்தது. அணை உடைப்பு ஏற்பட்டவுடன் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்குத் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 1977-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த அணைக் கட்டும் திட்டம், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் இத்திட்டம் கையில் எடுக்கப்பட்டு, அணை கட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  அணையில் புதிதாக கட்டப்பட்ட பகுதிக்கு எதுவும் நேரவில்லை என்றும் பழைய பகுதியில்தான் உடைப்பு ஏற்பட்டதாகவும் பீகார் மாநில நீர் வளத்துறை அமைச்சர் லல்லன் சிங் தெரிவித்துள்ளார். உலகிலேயே பயன்பாட்டுக்கு வருவதற்கு ஒரு நாள் முன் அணை உடைந்த வரலாறு பீகாரையே  சாரும். உயிரிழப்பு இல்லை என்பது மிகப் பெரிய ஆறுதல்.

பீகார் அணை

 

இந்தியா

மச்சூ அணையின் தோல்வி அல்லது மோர்பி பேரழிவு 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் 11 இல் இந்தியாவில் ஏற்பட்ட அணை தொடர்பான வெள்ளப் பேரழிவாகும். அணையின் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள மண் சுவர்கள் சிதைவுக்கு வழிவகுத்தது, அதிக மழை மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக உடைப்பு ஏற்பட்டது. ஆழ்ந்த மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நீர் வரத்து , வினாடிக்கு 16307 மீ  என்ற அளவுக்கு எட்டியது. 20 நிமிடங்களுக்குள் வெள்ளம் 12 முதல் 30 அடி உயரத்தில் (3.7 to 9.1 மீ) பாய்ந்தது. மச்சு ஆற்றின்மீது அமைந்துள்ள மச்சு 2 அணையில் நடந்த விபத்தில் 1800 இருந்து 25000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றளவும்  இல்லை.

அதிகப்படியான கொள்ளளவை எட்டியதும்தான்  பெரும்பாலான அணைகள் உடைந்திருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட அணைகளும் கூட அழுத்தம் தாங்காமல் உடைந்து விபத்தை சந்தித்திருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் எல்லா அணைகளுக்கும்  தாங்கும் திறன் என்கிற இயற்கை விதி ஒன்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டும்போதும் கவனிக்காமல் விடப்படும் போதும்தான்  உடைந்து விடுகின்றன. அல்லது உடைத்து விடப்படுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement