வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (07/11/2017)

கடைசி தொடர்பு:17:11 (07/11/2017)

டப் டுப் டப் டுப்... ராயல் என்ஃபீல்டின் முதல் 2 சிலிண்டர் புல்லட்!

`பைக் ஆர்வலர்களின் மெக்கா' என வர்ணிக்கப்படும் EICMA-வின் 75-வது எடிஷன், அதாவது மிலன் மோட்டார் ஷோ - இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்நிலையில், அங்கே புதிதாகக் காட்சிப்படுத்த உள்ள இரு பைக்குகளில் இருக்கும் புதிய இன்ஜின் பற்றிய விவரங்களை, தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பைக்கொண்டிருக்கும் இந்த 648சிசி இன்ஜினின் டெக்னிக்கல் விவரங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போதே, நம்மையும் அறியாமல் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய இன்ஜின் என்ற பெயரைப் பெற்றிருக்கும் இதில், அப்படி என்னதான் இருக்கிறது?

ஹிமாலயனுக்குப் பிறகு, முற்றிலும் புதிய இன்ஜின்!

350சிசி, 411சிசி, 500சிசி, 535சிசி என தன் கைவசம் வைத்திருக்கும் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களிலிருந்து எந்த பாகத்தையும் எடுக்காமல் முற்றிலும் புதிய அணுகுமுறையில் இந்த இன்ஜினைத் தயாரித்துள்ளது ராயல் என்ஃபீல்டு. இது ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் நிறுவனங்களுக்குப் போட்டியாக, 750சிசி திறனைக்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிறுவனம் 650சிசி இன்ஜினைத் தயாரித்திருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு

தனது நிறுவன தயாரிப்புகளிலிருந்து அப்கிரேடு ஆக விரும்புபவர்களுக்கும், புதிதாக 2 சிலிண்டர் பைக் வாங்க இருப்பவர்களுக்கும், 650சிசிதான் கச்சிதமாக இருக்கும் என இதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. மேலும், ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் A2 லைசென்ஸ் விதிகளுக்கும், இந்த இன்ஜின் உட்படுவதும் மற்றுமொரு காரணி எனலாம். ஆக, புதிதாக இந்த வகை பைக் ஓட்டுபவர்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் ஏற்ற அப்கிரேடு என `காதலா காதலா' படத்தில் கமல் சொல்வதுபோல, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

டெக்னிக்கல் விவரங்கள்:

royal enfield

தனது காலம்சென்ற 1948 Interceptor Mark II பைக்கின் 500சிசி, ட்வின் (2) சிலிண்டர் இன்ஜினை நினைவுகூர்ந்து, அதன்படியே தனது புதிய 648சிசி பேரலல் ட்வின் இன்ஜினையும் ஏர் கூல்டு வகையிலேயே தயாரித்திருக்கிறது. ஆனால், இன்ஜினின் செயல்திறனை மனதில்வைத்து, ஆயில் கூலரும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகள் வீதம், மொத்தம் எட்டு வால்வுகள் மற்றும் அதை இயக்க SOHC அமைப்பு ஆகியவற்றைக்கொண்டிருக்கிறது இந்த இன்ஜின். இந்த நிறுவனத்தின் வரலாற்றிலே முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் 270 டிகிரி Firing Order-க்கு ஏற்ப இயங்கும் Forged Crankshaft, இன்ஜினுக்கு வெளியே இருக்கும் அதிர்வுகளைக் குறைக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இதனுடன் இணைந்து இயங்கும் Balancer Shaft, இன்ஜினுக்குள்ளே ஏற்படக்கூடிய அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் உதவியுடன் இயங்கக்கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், இந்த இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது.

siddharth lal

ரைடர்கள் ஒருவேளை அதிக திறன்கொண்ட லைட் மற்றும் ஹார்ன்களை பைக்கில் பொருத்தினால், அதற்கு ஈடுகொடுத்து இயங்கும்விதமாக க்ளட்ச் மற்றும் Alternator அமைப்பு Heavy Duty ரகத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேரலல் ட்வின் 648சிசி இன்ஜின் அதிகபட்சமாக 47bhp@7, 100rpm பவரையும், 5.2kgm@4, 000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆரம்பகட்ட மற்றும் மிதவேகப் பயன்பாட்டை (Low Range & Mid Range) மனதில்வைத்தே இந்த இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. தனது சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்கள் வெளியிடும் தனித்துவமான `Thump' இல்லாவிட்டாலும், எக்ஸாஸ்ட் சத்தம் ரசிக்கும்படியே இருக்கும் என நம்பலாம். ஏனெனில், இந்த நிறுவனத்தின் CEO-வான சித்தார்த் லால் வெளியிட்ட டீஸரில், இந்த இன்ஜின் வெளியிட்ட சத்தம் ஸ்பெஷலாகவே இருந்தது. இப்போதைக்கு BS-4 மற்றும் Euro-4 விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜின், BS-6 மற்றும் Euro-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்துகொள்ளவும் முடியும் எனத் தெரிகிறது. 

RE Testing Center, UK

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இங்கிலாந்தில் இருக்கும் Leicestershire, Bruntingthorpe-ல் ஒரு மாடர்ன் டெஸ்ட் சென்டரை வைத்திருக்கிறது. இங்கே இருக்கும் டெஸ்ட் டிராக்கில், இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்குகள், சர்வசாதாரணமாக 120-140 கிமீ வேகத்தில் சென்றதாகத் தகவல்கள் வருகின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது, இந்த பைக்குகளில் டாப் ஸ்பீடு, 160 கிமீ-க்கும் (100 மைல்) அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இந்தியா மற்றும் ஐரோப்பாவில் டெஸ்ட் செய்யப்பட்ட இந்த பைக்குகள், 10 லட்சம் கிமீ தூரம் பயணித்திருக்கின்றன. இந்திய பொறியாளர் குழுவும் இங்கிலாந்தின் பொறியாளர் குழுவும் சம அளவில் இணைந்து பணியாற்றியிருப்பதால், ஹிமாலயனில் நிகழ்ந்த தவறு இங்கே நடக்காது என நம்பலாம். இங்கிலாந்தில் இருக்கும் ஹை-டெக்கான டெஸ்ட் சென்டரில் பரிசோதனை செய்யப்பட்ட தயாரிப்புகள், தற்போது விற்பனையில் இருக்கும் RE பைக்குகளைவிட பெர்ஃபாமன்ஸ் மற்றும் தரத்தில் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பைக் எப்படி இருக்கும்?

cafe racerclassic

இந்திய நேரப்படி, இன்று (நவம்பர் 7, 2017) இரவு 8.30 மணிக்கு, மிலன் மோட்டார் ஷோவில்  இந்த பைக்கின் மீடியா அறிமுகம் நடைபெறவுள்ளது. சென்னையில் நமக்குக் கிடைத்த ஸ்பை போட்டோக்களை வைத்துப் பார்க்கும்போது, க்ளாஸிக் டிசைனைக்கொண்ட மாடலும் - ஒரு கஃபே ரேஸர் போன்ற மாடலும் வெளிவரும் எனத் தெரிகிறது. Double Cradle சேஸி, வட்ட ஹெட்லைட், அனலாக் - டிஜிட்டல் மீட்டர்கள், முன்-பின் Brembo டிஸ்க் பிரேக்ஸ், Paioli ட்வின் ஷாக் அப்சார்பர், Pirelli டயர்கள், கவுல் உடனான சீட் என கான்டினெட்டல் ஜிடி 535 பைக்கில் உள்ள பல அம்சங்கள், ராயல் என்ஃபீல்டின் புதிய கஃபே ரேஸர் பைக்கில் இடம்பெறும் எனலாம்.

கூடுதலாக ஏபிஎஸ் வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். தவிர, இரண்டு சிலிண்டர்கள் என்பதால் இரட்டை எக்ஸாஸ்ட் பைப் உண்டு. இதுவே க்ளாசிக் மாடல் என்றால், சிங்கிள் பீஸ் சீட் இருக்கிறது. இதற்கு `Interceptor' எனப் பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த இரண்டு மாடல்களுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது, அதிகாரபூர்வமான அறிமுகத்துக்குப் பிறகே தெரியும். விரைவில் நடைபெற உள்ள 2017 Royal Enfield Rider Mania-வில் இன்ஜின் மட்டும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. 

இது எப்போது இந்தியாவுக்கு வரும்?

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது புதிய பைக்குகளைக் களமிறக்க உள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்திய சந்தை முதன்மையானதாக இருந்தாலும், பிறகு தேவைக்கு ஏற்ப சர்வதேச சந்தைகளுக்கும் பைக் ஏற்றுமதி செய்யப்படும் எனலாம். எனவே, உலகெங்கும் விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக், எல்லா நாடுகளுக்கும் ஒரே தரம், ஒரே மாதிரியான வசதி, ஒரே டிசைன், ஒரே பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைக்கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தனது நிறுவனத்துக்குப் புதிய ரைடர்களை இணைப்பதற்கான கருவியாகவே, இந்த பைக்குகளைப் பார்க்கிறது ராயல் என்ஃபீல்டு.

648cc

இதில் இருக்கும் இன்ஜின், குறைவான வேகத்திலேயே அதிக செயல்திறனை வெளிப்படுத்துவதால், டாப் கியரில் நெடுஞ்சாலைகளில் ரிலாக்ஸாகப் பயணிப்பதற்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தவிர, 750சிசி முதல் 800சிசி பிரிவில் அதிக மாடல்கள் இருப்பதால், 650சிசியில் தனது புதிய பைக்குகளைப் பொசிஷன் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இதனுடன் இந்த நிறுவனத்தின் ரசிகர் வட்டம் மற்றும் வாடிக்கையாளர்களும் சேரும்போது, அவர்களுக்கான அப்கிரேடாகவும் இது இருக்கும். ஏனெனில், கடந்த 2008-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 350சிசி மற்றும் 500சிசி Unit Construction Engine பொருத்தப்பட்ட பைக்குகள், இதுவரை 2.5 மில்லியன் என்றளவுக்கு விற்பனையாகியுள்ளன! ஆக, போட்டியாளர்களை வீழ்த்துவதற்கு, மற்றுமொரு பிரம்மாஸ்திரத்தை ஏவ ராயல் என்ஃபீல்டு தயாராக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்