Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அறிவியல் ஆய்வுக்காக அரசு வேலையை உதறியவர்..! சர்.சி.வி.ராமன் பிறந்ததினப் பகிர்வு

Chennai: 

``கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் தன் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல விரும்புகிறார் ஓர் இளைஞர். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், உடல்நிலை தகுதிச் சான்று கிடைக்கவில்லை. எனவே, அன்று அவருடைய விருப்பம் நிறைவேறாமல்போனது. அதன் பிறகு இந்தியாவிலேயே படித்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். 1930-ம் ஆண்டில் தன் `ராமன் விளைவு'க்காக நோபல் பரிசும் பெற்றார். நோபல் பரிசுக் குறிப்பில் இருக்கும் முதல் தமிழ்ப் பெயருக்குச் சொந்தக்காரரான சர் சி.வி.ராமனின் பிறந்த தினம் இன்று.  

வாசிப்பை நேசித்தவர்: 

சர்.சி.வி.ராமன்

விளையாட்டுச் சிறுவனாக இருந்தபோதே தன் தந்தையின் அலமாரியில் இருந்த புத்தகங்களின் வசமானார் ராமன். அங்கே இருந்த எண்ணற்ற அறிவியல் புத்தகங்கள், அவரை அறிவியலின் பக்கம் திருப்பின.

ஆசிய ஜோதி - எட்வின் அர்னால்டு

தி எலமண்ட்ஸ் - யூகிலிட்

Sensations Of Tone - Hermann von Helmholtz.

இந்த மூன்று புத்தகங்களும் அவருக்கு மிகவும் நெருக்கமானவை. சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற ராமன், 1907-ம் ஆண்டில் நடைபெற்ற நிதித்துறைத் தேர்வில் முதல் இடம் பெற்றார். பிறகு அவரது வாழ்க்கை கொல்கத்தாவில் தலைமைக் கணக்கு அலுவலராகத் தொடர்ந்தது. அந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதும் அவரது அறிவியல் ஆர்வம் காரணமாக தன் ஊதியத்தின் பெரும்பங்கை ஆய்வுக்கே செலவுசெய்தார். அப்போதுதான் அவருக்கு `இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்' பற்றித் தெரியவந்தது. பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு மாலையில் அங்கு சென்று ஆய்வுகள் செய்துபார்ப்பார். ஒருகட்டத்தில் தன்னுடைய வேலையைத் துறந்துவிட்டு முழுநேரமாக ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

ஆய்வுக் கருவிகள் கண்டுபிடிப்பு: 

சர்.சி.வி.ராமன்

தான் மேற்கொள்ளும் ஆய்வுக்குத் தேவையான சிறுசிறு கருவிகளைத் தானே உருவாக்கினார். முக்கியமான சில கருவிகளை மட்டுமே வெளிநாட்டிலிருந்து வரவழைப்பார். ஆய்வுகளை, மிகவும் சிக்கனமாகச் செய்து முடிப்பார். இவை தவிர, அறிவியல் இதழ் ஒன்றையும் நடத்திவந்தார். Mediterranean Sea வழியாகக் கடற்பயணம் மேற்கொண்டிருக்கும்போதுதான் `கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?' என யோசித்ததன் விளைவுதான் `ராமன் விளைவு'க்கு வித்தானது. தன் ஆய்வு மாணவர்களிடம், `அறிவியலை, கற்றலின் வழி மட்டுமே கண்டடைய முடியாது; தொடர்ச்சியான கேள்வி கேட்பதன் மூலமாகத்தான் அடைய முடியும்' என்பார். ராமனின் அந்தத் தொடர் கேள்வி கேட்கும் தன்மைதான் அவரை நோபல் பரிசு வரை அழைத்துச் சென்றது. 

நோபல் பரிசு:

சர்.சி.வி.ராமன்

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டனின் X- கதிர்கள் குறித்தான ஆய்வு, ராமனை `ராமன் விளைவு' குறித்த ஆய்வுக்குத் தள்ளியது. தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியே அதில் வெற்றியும் கண்டார். 1954-ம் ஆண்டில் பாரத் ரத்னா விருதும், 1957-ம் ஆண்டில் லெனின் அமைதிப்பரிசும் பெற்றார். இவரது மார்பளவு சிலை ஒன்று கொல்கத்தாவின் பிர்லா இண்டஸ்டரியல் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28-ம் தேதி `தேசிய அறிவியல் தின'மாகக் கொண்டாடப்படுகிறது.

சர்.சி.வி.ராமன்

`ஐந்து வயதிலிருந்தே குழந்தைகளை விஞ்ஞானியாக வளர்க்க வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து சலிப்படையாமல், நாம் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்களின் கற்றல் அறிவு, புத்தகங்களோடு தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நாடு அறிவியலில் ஒளிரும்' என்பார் ராமன். சம்பளம், டார்கெட் எனத் தங்கள் கல்வி, அறிவு முழுவதையும் பணம் சம்பாதிக்கப் பலரும் முதலீடு செய்கையில், மிகப்பெரிய வேலையை உதறித் தள்ளிவிட்டு, தனக்கான திறமையும் விருப்பமும் உள்ள ஒன்றில் சிகரம் தொட்ட சர் சி.வி.ராமனும் `உலக நாயகன்'தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close