Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நன்னன்... இலக்கண மன்னன்!

நன்னன்

“எல்லா எழுத்தாளர்களும் எழுதுகோலைக் கீழே வைக்கிற காலத்தில் நான் எழுதுகோலை எடுக்கிறேன்” என்றவர் தமிழறிஞர் மா.நன்னன். ஆனால், இன்று அவருடைய எழுதுகோலை முழுமையாகப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டான் காலன். 

மறைமலை அடிகளும் பரிதிமாற்கலைஞரும் தம் பெயர்களை மாற்றிக்கொண்டதுபோல் நன்னனும் திருஞானசம்பந்தன் என்கிற தன்னுடைய பெயரை, ‘நன்னன்’ என்று மாற்றிக்கொண்டார். பெயரை மட்டும் மாற்றம் செய்யவில்லை நன்னன். தமிழ் மொழிக்காகப் பல மாற்றங்களைச் செய்தார். அதைச் சுவைபட எழுதுதல் குறித்துப் பாடமெடுத்தார்; பயிற்சி கொடுத்தார். 

“நீந்தினால்தான் பள்ளியில் சேர்ப்பார்கள்!”

இப்படித் தமிழுக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் வளர்ந்து மறைந்த நன்னன், தன் ஆரம்பக்கால கல்வி குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார். “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம். எல்லோருக்கும் விவசாயம் மட்டுமே தெரிந்த எங்கள் ஊரில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஏதோ விரோதம். அன்றைய காலத்தில் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தாலும் இருப்பார்களே தவிர, எதிரிகளின் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்க்க மாட்டார்கள். இதனால், என்னையும் என் பெற்றோர்கள் அந்தப் பள்ளியில் சேர்க்கவில்லை. எங்கள் ஊரில் மணிமுத்தாறு ஒருபக்கமும் வெள்ளாறு மற்றொரு பக்கமும் ஓடிக்கொண்டிருக்கும். இந்த ஆறுகளில் எங்கள் ஊர் பிள்ளைகள் எல்லோருக்கும் நீந்தத் தெரியும். ஏனெனில், குழந்தைகள் நன்றாக நீந்தினால்தான் பள்ளியிலேயே சேர்ப்பார்கள். நீச்சலுக்குப் பிறகு நானும் அருகில் இருந்த திருமுட்டம் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்” என்று ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார் மகிழ்ச்சி பொங்க.

“இங்கேயே விட்டுட்டுப் போங்க!”

அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்த நன்னன், பிறகு குடும்பத்தினருடன் இணைந்து விவசாயம் செய்துகொண்டிருந்தார். இந்தச் சூழலில், தங்கள் வீட்டில் செய்த வெல்லக்கட்டிகளை விற்பதற்காகத் தன் தந்தையாருடன் சிதம்பரத்துக்குச் சென்றார் நன்னன். அங்கே, மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை என்பவரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருவரும் சாப்பிட்டபோது, நன்னனின் தந்தையிடம்... சோமசுந்தரம் பிள்ளை, “என்ன செய்கிறார் உம் மகன்” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “எங்கள் அப்பா குடும்பம் பார்க்கிறான்” என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த சோமசுந்தரம் பிள்ளை, “என்ன, குடும்பம் பார்க்கிறானா. குடும்பத்தைப் பார்க்கத்தான் நீங்க இருக்கீங்க. உங்க மூத்த பிள்ளைங்க இருக்கிறாங்க. அப்புறம் என்ன” என்று வினவியதோடு, “இவனை இங்கேயே படிக்க விட்டுட்டுப் போங்க” என்று கண்டித்துள்ளார். 

“வாழ்க்கையில் நிலைக்கப் படிக்க வேண்டும்!”

அதன் காரணமாக, அந்த ஊரில் இருந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் சேர்வதற்கான புதுமுகத் தேர்வுக்குத் தயார் செய்கிற பள்ளி ஒன்றில் நன்னன் சேர்க்கப்பட்டார். அவரைப்போலச் சில பையன்களோடு மாதம் ஐந்து ரூபாய் சாப்பாட்டுக்கு ஓர் ஆச்சியம்மா வீட்டில் தங்கிப் படித்தார் நன்னன். இங்கு படித்த அந்த வசந்தகாலம் பற்றி அவர், “எட்டாம் வகுப்புப் படித்ததோடு வந்திருந்தால் நான் அப்போதே ஓடியிருப்பேன். ஆனால், இரண்டு ஆண்டுகள் விவசாயத்தில் அதிகம் உழைத்ததால், இந்தச் சுகமான வாழ்க்கையில் ஓர் ஆர்வம் வந்துவிட்டது. இந்த வாழ்க்கை நிலைக்க வேண்டுமென்றால் படிக்க வேண்டும். அதனால் எனக்குப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. அப்புறம் படித்தேன்; நன்றாகப் படித்தேன்” என்று குறிப்பிடுகிறார்.  

“எனக்கு உதவுவது புலவர் படிப்புதான்!”

இப்படிக் கஷ்டப்பட்டுப் படித்த நன்னன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, அந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மாணவனாகத் தேறியபோது உ.வே.சாமிநாத ஐயர் அவருக்கு 50 ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார். அந்தப் பணத்திலும் தன்னுடைய இறுதியாண்டுப் படிப்புக்கான புத்தகங்களை வாங்கிக் குவித்த நன்னன், மேலும் 20 புத்தகங்கள் வாங்குவதற்கான ஒரு பட்டியலை உ.வே.சா-விடம் அளித்தார். அவர் கேட்ட புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டார் உ.வே.சா. படிப்பில் நன்கு கவனம் செலுத்திப் படித்த நன்னன், பின்னாளில் தமிழ்ப் புலவர் பட்டம் பெற்று பல மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்தினார். ‘தமிழ்ப் புலவர்’ குறித்து அவர் சொன்னபோது, “எனக்கு இப்பவும் உதவி செய்வது என் புலவர் படிப்புதான்” என்றாராம்.

நன்னன்

‘குங்கும’த்தில் எழுதச் சொன்ன கருணாநிதி!

“ ‘தேர்தலில் வெற்றிபெற்றதைக் கண்டு நான் இறும்பூதெய்துகிறேன்’ என்றால், ‘இந்தத் தேர்தலில் தோற்றுப்போய்விடுவாய், எப்படி வெற்றிபெற்றாய்’ என்று கேட்டதாகும். ‘நீங்கள், நலமுடன் இருப்பதைக் கண்டு நான் இறும்பூதெய்துகிறேன்’ என்றால், ‘நீ செத்துப் போயிருப்பாய் என்று நினைத்தேன். நீ எப்படி உயிருடன் இருக்கிறாய்’ என்று பொருள். இதை, தவறாக எல்லோரும் பயன்படுத்துகிறோம். ‘இறும்பூது’ என்பதற்கு ஆச்சர்யம், வியப்பு, அதிசயம் என்று பொருள். அதற்கு, ‘மகிழ்ச்சி’ என்று பெரிய அறிஞர்கள்வரை நினைத்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் இதை ஒரு கூட்டத்தில் சொன்னேன். அதைக் கேட்ட மு.கருணாநிதி, ‘இதை எல்லாம் நீங்கள் குங்குமத்தில் எழுதுங்கள்’ என்று சொன்னார். நானும் குங்குமத்தில் தொடர்ந்து எழுதினேன்” என்று ஒரு பேட்டியின்போது சொல்லியிருக்கிறார் நன்னன்.

நன்னன் உருவாக்கிய புதிய முறை!

பிற்காலத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப் பணியாற்றிய நன்னன், ‘மூவாண்டு முனைப்புத் திட்டம்’ என்கிற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார். இதில், ‘தமிழை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று ஆணை வெளியிட்டார். இதற்கு, ‘எங்களிடம் தமிழ் டைப்ரைட்டர் இல்லை’,  ‘தமிழ் அகரவரிசை இல்லை’,  ‘ஆட்சிச் சொல் அகராதி இல்லை’ என்று பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து தமிழுக்காக வாழ்ந்த நன்னன், எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கினார்.

சென்னைத் தொலைக்காட்சியில்  ‘எண்ணும் எழுத்தும்’, ‘தமிழறிவோம்’, ‘உங்களுக்காக’ போன்ற நிகழ்ச்சிகளை வழங்கிய நன்னன், ‘உரைநடையா... குறைநடையா’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவமின்றித் தமிழ் எழுதுவோம்’, ‘பைந்தமிழுரைநடை நைந்திடலாமா’, ‘தமிழ்  எழுத்தறிவோம்’, ‘கல்விக்கு அழகு கசடற எழுதுதல்’ எனத் தமிழுக்காகப் பல நூல்களை எழுதியுள்ளார்.

“அப்பளம் உடைந்துவிடும்!” 

“தொலைக்காட்சியில் அவர் பாடம் நடத்தும் அழகே தனி” என்று அவருடைய மாணவர் ஒருவர் சொல்கிறார். “வகுப்பில் சில ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் பிடிக்காது. ஆனால், இவர் எத்தனை மணி நேரம் பாடம் நடத்தினாலும் அதைக் காதுகொடுத்து கேட்க மாணவர்கள் ஆர்வமுடன் இருப்பர். ‘அப்பளம்’ என்கிற வார்த்தையைக்கூட அழகாய் உச்சரிப்பார். ஆம், அந்த வார்த்தையை எழுதும்போது ‘ப்’  என்ற எழுத்தின் மீது வைக்கும் புள்ளியைக்கூட அழுத்திவைக்க வேண்டாம் என்பார். அழுத்திவைத்தால், அப்பளம் உடைந்துவிடும் என்று நகைச்சுவையுடன் பாடம் நடத்துவார்” என்கிறார் அந்த மாணவர்.

மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நன்னன் குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் முன்னாள் மேயரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில்,  “நன்னனின் உடல்நலம் குன்றியிருப்பதை அறிந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்துக்குச் சென்றார். அப்போது அவரிடம்... ‘எனக்கு நினைவாற்றல் நன்றாக இருக்கிறது... இயக்கப்பணி ஆற்றிட என்னையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று கோரிக்கைவைத்தார் நன்னன். சுற்றி நின்ற நாங்கள் அனைவரும் வாயடைத்து நின்றோம்” என்று பதிவிட்டுள்ளார்.

தள்ளாடும் அந்த வயதிலும் உழைக்க வேண்டும் என்று ஆர்வம்கொண்டிருந்த தமிழறிஞர் நன்னனைத்தான், ‘இங்கு எழுதியதும், உழைத்ததும் போதும். இனி, மேலே வந்து எழுது; உழை’ என்று இறைவனும் அழைத்துக்கொண்டான் போலும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close