ஆர்.கே.லக்ஷமண் முதல் அசீம் த்ரிவேதி வரை... சர்ச்சை கார்ட்டூனிஸ்ட்கள்!

சில கோடுகள் என்ன செய்துவிடும்? ஒரு பென்சிலுக்கு, அரசை உலுக்கும் சக்தியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வரலாற்றில் பல ஓவியர்களும் கார்ட்டூனிஸ்ட்களும் தங்கள் பதிலை வரைந்துள்ளனர். கார்ட்டூன்கள், பல சமயங்களில் அரசைக் கேள்விகேட்டு  விமர்ச்சித்துள்ளன. சில வேளைகளில் அது சர்ச்சைக்குள்ளாகி கார்ட்டூனிஸ்ட்களுக்கு சிறைத்தண்டனை பெற்றுத்தந்திருக்கிறது. சில நேரத்தில் கார்ட்டூனிஸ்ட்களை  நாட்டைவிட்டே வெளியேற்றியிருக்கிறது. 

கார்ட்டூனிஸ்ட்

பத்திரிகைத்துறையின் அபார வளர்ச்சியில் அதில் இடம்பெற்றிருந்த கார்ட்டூன்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. பல நாடுகளில்  கார்டூன்களுக்கு என்றே தனியாக இதழ்களும் அதற்கான வாசகர்களும் உள்ளனர். பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் மூலம் அரசை, சமூகப் பிரச்னைகளைப் பகடிசெய்வது தனி ஜானராகவே உள்ளது. நமது தமிழ்ச் சூழலிலும் கோபுலு தொடங்கி இன்றைய ஹாசிப்கான் வரை பலரும் கார்ட்டூன் மூலம் பல கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளனர். பல பக்கக் கட்டுரைகளில், பல மணி நேரத் திரைப்படங்களில் கூறவேண்டிய செய்தியை ஒரு கார்ட்டூன் காத்திரமாக வெளிப்படுத்திவிடும். பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய கார்ட்டூன்கள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

அசீம் த்ரிவேதி: 

கார்ட்டூனிஸ்ட்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் அசீம் த்ரிவேதி. இவரது அரசியல் கார்ட்டூன்கள், மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றவை. `Cartoon Against Corruption' என்ற பிரசாரத்தைத் தொடங்கி, நிறைய கார்ட்டூன்களை இவர் வரைந்தார். இவரின் கார்ட்டூன்கள் பெரிய அளவில் வரவேற்பையும் அதே சமயம் அரசிடமிருந்து பெரும் எதிர்ப்பையும் பரிசாகப் பெற்றன. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் வரைந்த ஊழலுக்கு எதிரான ஒரு கார்ட்டூனுக்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அசீம் த்ரிவேதியும் ஊடகவியலாளர் அலோக் தீக்‌ஷித்தும் சேர்ந்து 2012-ம் ஆண்டு `சேவ் யுவர் வாய்ஸ்' என்ற இணைய சென்சார்ஷிப்-க்கு எதிரான ஓர் அமைப்பை உருவாக்கினர். அதில் தற்போது  5,000-க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ப்ளான்ட்டு :

கார்ட்டூனிஸ்ட்

புகழ்பெற்ற பிரெஞ்சுப் பத்திரிகையான `லீ மோண்டே'வில் அரசியல் கார்ட்டூன்கள் வரைந்துவரும் Jean Plantureux என்கிற Plantu வரைந்த பல அரசியல் கார்ட்டூன்கள்  சர்ச்சையில் சிக்கியுள்ளன. இஸ்ரேல் படை வீரர்கள் பாலஸ்தீன குடிமக்களைச் சுடுவதுபோன்ற இவர் வரைந்த கார்டூன்கள் அரசிடமிருந்து பெரிய அளவிலான எதிர்ப்பைச் சம்பாதித்தன. 

அலி பஸ்ராத் : 

கார்ட்டூனிஸ்ட்

2012-ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட  உலகின் செல்வாக்கு நிறைந்த 100 மனிதர்களில் அலி பஸ்ராத்தும் ஒருவர். அரபு நாடுகளின் கார்ட்டூனிஸ்ட்கள் அசோசியேஷனின் தலைவராக உள்ளார். அவர் வரைந்த கார்ட்டூனுக்காக அவரைக் கடத்தி இரண்டு கைகளையும் பலமாகத் தாக்கியுள்ளனர். இவ்வளவு தாக்குதல்களுக்குப் பிறகும் தன் கார்ட்டூன்கள்  மூலம் சிறிய மக்களின் நிலையை உலகுக்கு அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறார் இந்த மக்கள் கலைஞன்.

நியூயார்க் டைம்ஸ்: 

கார்ட்டூனிஸ்ட்

இந்தியா, 2014-ம் ஆண்டில் மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பிய நேரம் அதற்கான செலவை விமர்சித்து `நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட ஒரு கார்ட்டூன் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்தியா செவ்வாய்க்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பிய அதே நேரத்தில் தன் நாட்டின் விவசாயிகளைக் கவனிக்க மறந்துவிட்டது என அவர்கள் வரைந்த கார்ட்டூனுக்கு, இந்திய மக்கள் பலரும் வரவேற்பளித்தனர்.

ஆர்.கே.லக்ஷமண்: 

கார்ட்டூனிஸ்ட்

மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண், தன்னுடைய `காமன் மேன்' கார்ட்டூன்களால் புகழ்பெற்றவர். நகைச்சுவை தன்மையாகத் தோற்றமளிக்கும் இவரது கார்ட்டூன்கள், அரசின் பயனற்றத் திட்டங்களை வெகுவாகப் பகடிசெய்பவை. NCERT-யின் அரசியல் மற்றும் சமூகவியல் சார்ந்த புத்தகம் ஒன்றுக்காக இவர் வரைந்த, இந்திரா காந்தியின் முன் தட்டை நீட்டி ஒருவர் யாசிப்பது போன்ற கார்ட்டூனுக்காக அரசிடமிருந்து எதிர்ப்பைப் பெற்றார். 

அம்பிகேஷ் மகாபத்ரா: 

கொல்கத்தாவின் ஜத்தாவ்பூர் யூனிவர்சிட்டியில் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் அம்பிகேஷ் மகாபத்ரா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்ட்டூன் வரைந்தார். சத்யஜித் ரே-யின் `சேனார் கேலா' திரைப்படத்தின் காட்சி ஒன்றை மம்தா பானர்ஜியை வைத்து `கேரிகேட்சர்' வகையில் அம்ரிகேஷ் வரைந்த கார்ட்டூன் சர்ச்சைக்குள்ளானது. இதன் காரணமாக அவர் கொல்கத்தா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டார். 

அரசின் மீது மக்களுக்கு நிலவும் அதிருப்தியை, அரசியல் தலைவர்கள் செய்யும் தவறுகளை... எனப் பல கார்டூன்கள் சுட்டிக்காட்டியுள்ளன. படைப்பாளிகள் அரசை விமர்சிக்கும்போது அரசு அதற்கான தீர்வை நோக்காமல், படைப்பாளிகளை அச்சுறுத்துவதே அதிகம் நடந்துள்ளன. எம்.எப்.ஹீசைன் போன்றோர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். மராத்தியில் ஒரு பத்திரிகை, சில கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்காகக் குரல்கொடுக்கும் பத்திரிகையாளர்களின் குரல்வளை நெரிக்கப்படும்போது, அவன் மட்டுமல்ல ஒட்டுமொத்தச் சமூகமும் குரலெழுப்ப முடியாமல் தவிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!