வெளியிடப்பட்ட நேரம்: 07:28 (08/11/2017)

கடைசி தொடர்பு:12:51 (08/11/2017)

காது கேட்கலைன்னா ஜெயிக்க முடியாதா என்ன?- 'ஹல்க்' லூ ஃபெர்ரிக்னோவின் கதை! #MotivationStory

தன்னம்பிக்கை கதை

ம்மூர் ஆட்களுக்கு மட்டுமல்ல... உலகம் முழுக்கவே சினிமா கனவில் மிதப்பவர்கள் ஏராளம். அழகுடன் கூடிய நல்ல உடற்கட்டு, அறிவு, திறமை எல்லாம் இருந்தாலும்கூட பலரால் திரைத்துறையில் காலூன்றவோ, தனி முத்திரை பதிக்கவோ முடிவதில்லை. இவற்றையும் தாண்டிய செல்வாக்கு, சிபாரிசு, பெரியவர்களின் அறிமுகம்... என என்னென்னவோ தேவைப்படும் துறை அது. இதில், மாற்றுத்திறனாளிகள் என்றால் திரைத்துறைப் பக்கம் காலூன்றக்கூட முடியாது. லூ ஃபெர்ரிக்னோ (Lou Ferrigno) ஒரு மாற்றுத்திறனாளி. `நீயெல்லாம் எங்கே உருப்படப் போறே!’ என்று தன் அப்பாவாலேயே சிறு வயதில் பல முறை விமர்சனத்துக்கும் திட்டுக்கும் ஆளானவர். அவர், ஹாலிவுட் திரையில் புகழ்பெற்ற நட்சத்திரமாக வலம் வந்த கதை இது. 

நியூயார்க்கிலிருக்கும் புரூக்ளினில் 1951-ம் ஆண்டில் பிறந்தார் லூ ஃபெர்ரிக்னோ. அப்பா மாட் ஃபெர்ரிக்னோ (Matt Ferrigno) ஒரு போலீஸ்காரர். பிறந்தபோதே லூ ஃபெர்ரிக்னோவுக்கு காதில் ஏதோ ஒரு இன்ஃபெக்‌ஷன். அது தீவிரமாகி, 75-ல் இருந்து 80 சதவிகிதம் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. சிறு வயதில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்னை வருவது என்பது கொடுமையிலும் கொடுமை. மற்றவர்கள் சொல்வதைக் குழந்தையால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தை பேசுவது ஏறுக்கு மாறாக இருந்தால், கேட்பவர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாக நேரிடும். துரதிர்ஷ்டவசமாக லூ-வின் பெற்றோர், அவருக்கு இந்தப் பிரச்னை இருப்பதை மூன்று வயதில்தான் கண்டுபிடித்தார்கள். அதற்குள் நிரந்தரமாகவே அவருக்கு காது கேட்காமல் போய்விட்டது. 

லூ ஃபெர்ரிக்னோவின் தன்னம்பிக்கை கதை

சக நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்டார் லூ ஃபெர்ரிக்னோ. என்னதான் காது கேட்காது என்றாலும், தன்னைக் கிண்டல் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதா என்ன? பல்லைக்கடித்துக்கொண்டு தாங்கிக்கொள்வார் லூ. பல நேரங்களில் கேலி பேசுவது தெரிந்தாலும், கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். தன்னைக் கிண்டல் செய்யும் நண்பர்களை, அக்கம்பக்கத்தவர்களை, உறவினர்களை, தெருக்காரர்களை சமாளிப்பதுகூட அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அப்பா உதிர்க்கும் வார்த்தைகள் அவரால் தாங்க முடியாததாக இருந்தன. லூ-வுக்குக் காது கேட்காது என்பதால், அவரைத் தொட்டு அழைத்து சைகை மூலமாகவெல்லாம் திட்டியிருக்கிறார் அவர் தந்தை. `நீயெல்லாம் வாழ்க்கையில எதையும் சாதிக்க மாட்டே!’, `நீ எப்படி உருப்புடுறேனு நானும் பார்க்குறேன்’... என்றெல்லாம் திட்டுவார் லூ-வின் தந்தை. இதற்கெல்லாம் எப்படியாவது பதில் தர வேண்டும், கேலி பேசிய அத்தனை பேரையும் தன்னை வியப்போடு பார்க்கவைக்க வேண்டும் என்பதுதான் லூ-வின் லட்சியமாக இருந்தது. அந்த லட்சியம் மெள்ள மெள்ள மனதில் ஊன்றி, வேர்விட்டு, கிளைபரப்பி, பெரிய ஆலமரமாக வளர்ந்துகொண்டிருந்தது. 

லூ ஃபெர்ரிக்னோ கதை

காதுதான் கேட்கவில்லையே தவிர, லூ-வுக்குத் தன் உடல்மீது அக்கறை இருந்தது. தன் உடலைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்; அதற்கு வலு சேர்க்க வேண்டும்; நல்ல திடகாத்திரமான, வலுவான ஆளாக உலகில் வலம்வர வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆஜானுபாகுவான, பார்ப்பவர்களை மிரட்டுகிற உடல்வாகு வேண்டுமென்றால் அதற்காக இருக்கும் ஒரே பயிற்சி... பளு தூக்கும் பயிற்சி. `சரி... ஒரு பாடி பில்டர் ஆகிவிடுவோம்’ என்று முடிவெடுத்தார் லூ. அவருக்குச் சிறு வயதிலிருந்தே ஹெர்குலஸ் கதை பிடிக்கும். ஹெர்குலஸைப் போல அசாதாரணமான பலம் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு ரோல் மாடலாக இருந்தவர்கள், ஹேர்குலஸும், அமெரிக்காவின் பிரபல பாடி பில்டரான ஸ்டீவ் ரீவ்ஸும்தான் (Steve Reeves). `ஹெர்குலஸ்’ திரைப்படமானபோது அதில் ரீவ்ஸ்தான் ஹெர்குலஸாக நடித்திருந்தார் என்பதும் ரீவ்ஸை, லூ-வுக்குப் பிடித்துப்போக ஒரு காரணமாக இருக்கலாம். இவர்கள் தவிர `ஸ்பைடர்மேன்’, `தி ஹல்க்’ கதாபாத்திரங்கள் லூ-வுக்கு மிகவும் பிடித்தமானவை. ஓஹியோவில் இருந்த கொலம்பியாவில், பிரபல ஹாலிவுட் நடிக ஆர்னால்டு ஸ்க்வாஷ்நேகரோடு பயிற்சி செய்யும் வாய்ப்பு லூ-வுக்குக் கிடைத்தது. அதுவே பிற்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு அவர் நகர பெரும் உதவியாக இருந்தது. 

13 வயதிலிருந்து பயிற்சிக்கூடத்தில் கடுமையாகப் பயிற்சி செய்தார் லூ. பெரும்பாலான நேரங்கள் பளு தூக்கும் இடத்திலேயே பழியாகக் கிடந்தார். 1969-ம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். படிப்பை முடித்த கையோடு `பாடி பில்டிங்’ எனப்படும் ஆணழகன் போட்டி. `இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் பாடிபில்டிங் அண்ட் ஃபிட்னெஸ்’ (International Federation of BodyBuilding & Fitness) நடத்திய போட்டியில் `மிஸ்டர் அமெரிக்கா’ பட்டம் வென்றார் லூ. அமெரிக்காவே `யார் இந்தப் பையன்?’ என்று திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. அவருடைய தொடர் பயிற்சி அடுத்த நான்கு வருடங்களில் இன்னொரு பெரிய பெருமையை அவருக்குப் பெற்றுத் தந்தது. அதே `இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் பாடிபில்டிங் அண்ட் ஃபிட்னெஸ்’ நடத்திய போட்டியில் `மிஸ்டர் யுனிவர்ஸ்’ பட்டம் பெற்றார்.   

பச்சை மனிதன்

1974-ம் ஆண்டு, `மிஸ்டர் ஒலிம்பியா’ போட்டி நடந்தபோது இரண்டாம் இடத்தில் இருந்தார் லூ. அதற்கு அடுத்த ஆண்டு நடந்தபோட்டியில் ஆர்னால்டும் கலந்துகொண்டார். ஆர்னால்டை எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்கிற அந்தப் போட்டியில் மூன்றாம் இடம்பிடித்தார் லூ ஃபெர்ரிக்னோ. ஆனால், அது அவருக்கு வாழ்க்கையில் முக்கியமான ஒரு திருப்பம். இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட `தி பம்ப்பிங் அயர்ன்’ (The Pumping Iron) என்ற ஆவணப்படம் லூ-வை பிரபலமாக்கியது. ஒரு பக்கம் புகழ் கிடைத்தாலும், மறுபக்கம் வருமானம் போதுமானதாக இல்லை. புரூக்ளினில் இருந்த ஒரு தொழிற்சாலையில் மூன்றாண்டுகள் வேலை பார்த்தார். அந்த வேலை பிடிக்காமல் வெளியேறினார். பிறகு என்னென்னவோ வேலைகள். ஒரு ஃபுட்பால் டீமில் போய்ச் சேர்ந்தார். இப்படிப் பல வேலைகள்... அப்போதுதான் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

`தி இன்க்ரெடிபிள் ஹல்க்’ (The Incredible Hulk) அதுதான் அந்தத் தொலைக்காட்சித் தொடரின் பெயர். இந்தத் தொடரில் சாதாரண ஹல்க் பாத்திரத்தில் பில் பிக்ஸ்பி என்பவரும், ஹல்க் பாத்திரத்தில் லூ-வும் நடித்திருந்தார்கள். அந்தத் தொடர் பெரும் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்துவந்தன. பிறகு, பல வாய்ப்புகள்... சினிமாவிலும் நடித்து அசத்தினார் லூ. `தி அவெஞ்சர்ஸ்’, `மாம்’ஸ் நைட் அவுட்’... எனத் தொடர்ந்து, `தோர்:ரக்னாரோக்’ வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது அவர் பயணம். 

பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகளில் லூ அழுத்தமாகச் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. ``எனக்கு மட்டும் காது நல்லாக் கேட்டிருந்தா, இப்போ இந்த இடத்துக்கு என்னால வந்திருக்க முடியாது. சின்ன வயசுல காது கேட்காம இருந்தப்போ எனக்கு கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, அதுக்காக நான் வெட்கப்படலை. காது கேட்காமப் போனதுதான் என்னால எதையும் செய்ய முடியும்கிற மன உறுதியை எனக்குத் தந்தது.’’ 

 

வெல்டன் லூ!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்