Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! - மரணத்தைத் தள்ளிப்போட்ட நார்மேன் கசின்ஸ்! #MotivationStory

‘சிரிப்பே மருந்து’... எத்தனையோ பேர் நம்மிடம் சொல்லியிருப்பார்கள், பலமுறை கேட்டிருப்போம். உண்மையில் அதை முயன்று பார்ப்பதற்கு நம்மில் பலர் தயாராக இல்லை. சிரிப்புக்கு அத்தனை மகத்துவம் உண்டு. அதை மருந்தாகப் பயன்படுத்தி ஒரு பெரிய துன்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட ஒருவர் உண்டு. கடந்த 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர், பேராசிரியர், வழக்கறிஞர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மையோடு இயங்கிய அவர் நார்மேன் கசின்ஸ் (Norman Cousins). சிரிப்பின் அருமையை உலகுக்கு உணர்த்திய அவரின் கதை இது.

நார்மேன் கசின்ஸ்

1915, அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் பிறந்தார் நார்மேன் கசின்ஸ். பதினோரு வயதிலேயே காசநோய் பாதிப்பு... மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். காசநோய் போன்ற நுரையீரல் பாதிப்புக்கு ஆளான சிறுவர்களால் விளையாட்டில் ஈடுபடுவது கடினம். ஆனால், தடகள விளையாட்டுகளில் அத்தனை ஆர்வமாக இருந்தார் கசின்ஸ். உற்சாகமாக அந்த விளையாட்டுகளில் பங்கெடுத்துக்கொள்ளவும் செய்தார். சிறுவயதிலேயே பத்திரிகைகளைப் படிப்பதிலும், எழுதுவதிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அவர் படித்த பள்ளியிலிருந்து வெளிவந்த பத்திரிகையின், கட்டுரைகளில் தன் எடிட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

படித்து முடித்ததும் `நியூயார்க் ஈவினிங் போஸ்ட்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்த வருடமே `கரன்ட் ஹிஸ்டரி’ என்ற பத்திரிகையில் வேலை. ஒருகட்டத்தில் அங்கே மேனேஜிங் எடிட்டர் பதவி வரை உயர்ந்தார். பிறகு `சாட்டர்டே ரிவ்யூ ஆஃப் லிட்டரேச்சர்’ என்ற பத்திரிகையில் சேர்ந்து, அங்கே முதன்மை ஆசிரியரானார். 20,000 பிரதிகள் மட்டுமே விற்றுக்கொண்டிருந்த பத்திரிகை விற்பனையை 6,50,000 லட்சத்துக்கு உயர்த்தினார்.

நார்மேன் கசின்ஸ்

நேர்மறைச் சிந்தனை ஒரு மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு உதாரணம் நார்மேன் கசின்ஸ். லாஸ் ஏஞ்சலிஸில் இருந்த கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியாகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. மனநிலைக்கும் உடல்நிலைக்கும் உள்ள தொடர்பை ஆராய்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இன்னொரு பக்கம் சமூக அக்கறையும் அவருக்கு இருந்தது. அணு ஆயுதங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள், உலக அமைதிக்கான செயல்பாடுகள் என ஒரு சமூகச் செயல்பாட்டாளராகவும் இருந்தார். ஒரு மனிதரின் பயோடேட்டாவை விவரிப்பதுகூட சில நேரங்களில் அவசியமாகிறது. தன்னம்பிக்கை, எதையும் பாசிட்டிவாக அணுகுவது என்கிற பழக்கம் ஆரம்பகாலத்திலிருந்து இருந்ததால்தான் கசின்ஸால் எதையும் தன் வாழ்வில் எதிர்கொள்ள முடிந்தது. பல பரிசுகள், விருதுகள், பல அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளையெல்லாம் வகித்தார் கசின்ஸ். இனி கதைக்கு வருவோம்.

1964-ம் ஆண்டில் திடீரென்று அவருக்கு உடல்நல பாதிப்பு. `கனெக்டிவ் டிஸ்யூ டிசீஸ்’ (Connective Tissue Disease), `கொலாஜன் டிசீஸ் (Collagen Disease)’ என்ற பெயரையெல்லாம் சொல்லி `வாழ்வே மாயம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்குச் சொல்வதுபோல மருத்துவர்கள் நாள் குறித்தார்கள். `இன்னும் ஆறு மாசம்தான்... அதுக்கு மேல தாங்காது’ என்றார்கள். `இந்த நோய் வந்தவர்களில் 500-ல் ஒருவர் பிழைப்பதற்குத்தான் வாய்ப்பு இருக்கிறது’ என்று பயமுறுத்தினார்கள். எதற்கும் அசரவில்லை கசின்ஸ். அதே நேரத்தில் அவர் அனைத்தையும் கடந்த துறவியும் அல்ல. அவருக்கும் கோபம், மனஅழுத்தம், கவலை இவையெல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஒருவேளை இந்த நோய் வந்ததற்கு இவையெல்லாம்கூட காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்தார்.

நேர்மறை

வீட்டுக்கு வந்தார். ஆர அமர உட்கார்ந்து `என்ன செய்யலாம்... இந்த மாதிரி நோயெல்லாம் எனக்கு வரக் கூடாதே... இதுல இருந்து மீண்டுடணுமே...’ என்றெல்லாம் யோசித்தார். யோசிக்க யோசிக்க அவருக்கு ஓர் உண்மை பிடிபட்டது. `எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் உடல்நலக் குறைபாட்டுக்கு காரணமாகின்றன. அப்படியானால், நேர்மறை எண்ணங்களும் செயல்களும் உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்க வேண்டும் அல்லவா?’ அதை நடைமுறையில் செய்து பார்த்துவிடுவது என்கிற முடிவுக்கு வந்தார். செயலில் இறங்கினார்.

நேர்மறை எண்ணங்கள்

அவருக்குத் தெரிந்து நேர்மறை செயல்பாடுகளில் முக்கியமானது சிரிப்பு. அதையே தன்னை நோயிலிருந்து காக்கும் கவசமாகப் பயன்படுத்த முடிவெடுத்தார் கசின்ஸ். கீட்டோன், சார்லி சாப்ளின், மார்க்ஸ் பிரதர்ஸ்... என்று அப்போதிருந்த பிரபல நகைச்சுவை நடிகர்கள் நடித்த படங்களையெல்லாம் பார்க்க முடிவெடுத்தார். அது வி.சி.ஆரெல்லாம் பயன்பாட்டில் இல்லாத காலம். இவர்கள் நடித்த திரைப்படங்களையெல்லாம் வாடகைக்கு வாங்கி வீட்டிலேயே தனியாக புரொஜெக்டர், திரையெல்லாம் அமைத்து போட்டுப் பார்த்தார். படங்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார். இது போதாதென்று நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்தார். நண்பர்களிடம் சதா நகைச்சுவை குறித்தே பேசிச் சிரித்து மகிழ்ந்தார். கூடவே உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொண்டார். வைட்டமின் சி மருந்துகளை எடுத்துக்கொண்டார்.

சிரிப்பு

 

அவருக்கு வந்த நோய் சாதாரணமானதல்ல. உடல் வலியில் உறக்கம் வராது. ஆனால், தன் சுயபரிசோதனை முயற்சிகளில் ஒன்றைக் கண்டுபிடித்தார் கசின்ஸ். பத்து நிமிடங்களுக்குச் சிரித்தால் பல மணி நேரங்களுக்கு வலி வருவதில்லை என்பதைக் கண்டுகொண்டார். அதனாலேயே சிரிப்பை `சிக்’கென்று பற்றிக்கொண்டார். சிரிப்பை வாழ்நாளெல்லாம் துரத்திக்கொண்டு ஓடினார். சிரிப்பும் அவரை `விடாது சிரிப்பு’ என்பதுபோல கூடவே வந்தது. நோயோடு போராடியதில் வெற்றி அவருக்கே கிடைத்தது. `ஆறு மாதங்கள்கூட வாழ முடியாது’ என்று சொல்லப்பட்ட கசின்ஸ், 20 வருடங்களுக்கும் மேல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார். அந்த நோயிலிருந்து தான் மீண்ட கதையை ஒரு புத்தகமாக எழுதி, விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் கசின்ஸ். அந்தப் புத்தகத்தின் பெயர், `அனாட்டமி ஆஃப் அன் இல்னெஸ் பெர்சிவ்டு பை தி பேஷன்ட்’ (Anatomy of an Illness as Perceived by the Patient). மகிழ்ச்சியான வாழ்க்கையும் சிரிப்பும் நமக்கெல்லாம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் புத்தகம். கசின்ஸ் மரணத்தைத் தள்ளிப் போட்டதன் மூலமாக நமக்கெல்லாம் அதன் உண்மையை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close