வானம்பாடி கூட்டத்தில் கவிபாடிய குயிலுக்கு இன்று பிறந்தநாள்! | 'Kaviko' Abdul Rahman's birthday special

வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (09/11/2017)

கடைசி தொடர்பு:10:18 (09/11/2017)

வானம்பாடி கூட்டத்தில் கவிபாடிய குயிலுக்கு இன்று பிறந்தநாள்!

'கவிக்கோ' என்று போற்றப்படும் கவிஞர் அப்துல் ரகுமான், கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு1937-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி, மதுரை கீழ்ச்சந்தைப் பேட்டையில் பிறந்தார். கவிதை,  தந்தை, தாத்தா வழியில் இயற்கையாக வந்ததால் சிறந்த இலக்கியவாதியாக நாடறியப்பட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இவருக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. தமிழில் மட்டுமே ஆர்வம்கொண்டிருந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பதை அறிந்து, அங்கேயே சேர்ந்து பயின்றார். 

படிக்கும் காலத்தில் ஆங்கில இலக்கியம் மீதும் தன் ஆர்வத்தைக் கொண்டுசென்றார். கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் நடக்கும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் முதல் பரிசை வென்றுவிடுவார்.

முதுகலைக் கல்வி பயிலும்போது, மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தார். அவர்களைப் போலவே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே எழுதவும் தொடங்கினார். 

‘தமிழ்நாடு’ என்ற நாளிதழில் சில ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் புதுக்கவிதைக் குறியீடுகள்குறித்து ஆராய்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பிறகு, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றினார்.

சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம்கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். 1974-ல் இவரது முதல் கவிதையான ‘பால்வீதி’ வெளிவந்தது.

திராவிட நாடு, திராவிடன், முரசொலி, தென்றல், இன முழக்கம், மன்றம், விகடன் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது தொடர் கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்தன.

இலக்கியத்தின் பல களங்களில் முத்திரை பதித்தாலும், ஒரு கவிஞராகவே இவர் புகழ்பெற்றார். இவரது தத்துவக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

வானம்பாடி இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவரானார். மற்றவர்களைக் கவரும் வண்ணம் பேச்சு நடையில் சிலேடை மொழிகளாலும், நையாண்டி கலந்தும் பேசும் ஆற்றல் படைத்திருந்தார் கவிக்கோ.

"ஆண் தாய்" என்று கவிஞர்களால் அழைக்கப்படும் கவிக்கோ, இன்றைய காலத்து இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு ஆசிரியராய் விளங்கினார்.

நீண்ட காலமாக தமிழ்க் கவிதைக்கு வழங்கப்படாமல் இருந்த சாகித்ய அகாடமி விருது,  இவரின்  ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் முதன் முதலாக சாகித்ய அகாடமி விருதை பெற்றுத்தந்த பெருமையை அடைந்தார்

ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளைத் தமிழில் பரவச்செய்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் தெரியும் வண்ணம் இவரது பாடல்கள் அமைந்திருக்கும்.

கவிதை உலகில் பெரும் ஆளுமையைப் பெற்ற கவிக்கோ, 2017 ஜுன், 2-ம் தேதி மரணமடைந்தார். "மரணம் முற்றுப்புள்ளி அல்ல" என்ற அவரது கட்டுரைக்கு எடுத்துக்காட்டாக இருந்தும்வருகிறார்.

கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.