வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (09/11/2017)

கடைசி தொடர்பு:17:14 (09/11/2017)

உடன் பணிபுரிந்த மோப்ப நாய்க்கு இறுதிச்சடங்கு...நெகிழவைத்த மும்பை காவல்துறை!

மோப்ப நாய்

தங்களுடன் இணைந்து பணியாற்றிய மோப்ப நாய் இறந்த பின்பு அதற்கு இறுதிச்சடங்குகள் செய்து நெகிழ வைத்திருக்கிறது மும்பை காவல் துறை.

நாய்களுக்கு இயல்பாகவே மோப்பசக்தி அதிகம். மனிதர்களோடு வெகு சீக்கிரமே நெருங்கிப் பழகுவது மட்டுமன்றி அவற்றிற்கு நன்றியுணர்வும் அதிகமாக இருக்கும். எனவே அவை உலகம் முழுவதும் பல்வேறு பணிகளில் மனிதர்களுக்கு உதவியாக இருக்கின்றன.  முக்கியமாக காவல்துறை, ராணுவம் மற்றும் ஆபத்து கால மீட்புப்பணிகளில் நாய்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாக இருந்து வருகிறது.

வெளிநாடுகளைப் பொறுத்தவரை காவல் பணியில் இருக்கும் நாய்களுக்கு என்றும் தனி மரியாதை இருக்கும். மோப்ப நாய்களைத் தாக்கினால் கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய நாடுகளும் இருக்கின்றன. அமெரிக்காவில், நாய்களுக்குத் தனியாக மனிதர்களைப் போன்றே பதவி மற்றும் பேட்ஜ்கள் அளிக்கப்பட்டிருக்கும். ஏதாவது வீரதீர சாகசங்களில் ஈடுபட்டால் நாய்களை வளர்க்கும் டாக் ஹாண்ட்லர்களுக்கு மட்டுமன்றி நாய்களுக்கும் தனியாக பதக்கம் அளித்து அமர்க்களப்படுத்துவார்கள். பணியில் இருந்த மோப்ப நாய் இறந்துவிட்டால் தேசியக் கொடி போர்த்தி அதற்கு அஞ்சலி செலுத்தப்படும்.அதன்பின்னர் அரசு மரியாதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதிச்சடங்குகள் செய்வார்கள். இது பெரும்பாலான வெளிநாடுகளில் வழக்கமான ஒன்று.

 மோப்ப நாய்

கிட்டத்தட்ட அதே போன்ற செயலைச் செய்து நெகிழ வைத்திருக்கிறார்கள் மும்பை காவல்துறையினர். ரூபி என்ற இந்த மோப்ப நாய் 2009ம் ஆண்டு பணியில் இணைந்திருக்கிறது. வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவில்தான் முதலில் தனது பணியைத் தொடங்கியிருக்கிறது. நரேஷ் என்ற டாக் ஹாண்ட்லரும் அதன் பின்பு சந்தீப் என்பவரும் ரூபிக்குப் பயிற்சியளித்திருக்கிறார்கள். மிக விரைவிலேயே தனது குழுவினருடன் ஒன்றிணைந்து மற்ற பணிகளிலும் சிறப்பாகச் செயல்பட தொடங்கியிருக்கிறது ரூபி. இதுவரை மொத்தம் நாற்பத்தியொரு வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது இவர்களின் குழு. இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்ததில் ரூபியின் பங்கு அதிகமானது.

மும்பை கர் பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு ரூபி பெரிதும் உதவியதாகத் தெரிவிக்கிறார்கள் காவல் துறையினர். செருப்பை மட்டுமே மோப்பம் பிடித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது ரூபி. நன்றாக இருந்த ரூபிக்குக் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. பரிசோதித்ததில் கார்சினோமா என்ற நோயால் ரூபி பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக ரூபிக்கு சிகிக்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தொடர் சிகிச்சையால் சற்று உடல் நலம் தேறியிருந்த ரூபி நான்கு நாள்களுக்கு முன்னர் கடந்த 5ம் தேதி இறந்திருக்கிறது.

ரூபி

ரூபி இறந்த பின்னர் அதற்குக் காவல் துறையினர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அதன் பின்பு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டிருக்கிறது ரூபி.

இதை ஒரு பதிவாக ட்விட்டரில் நேற்று வெளியிட்டிருக்கிறார்கள் மும்பை காவல் துறையினர். "காவல் துறைக்கு ரூபி செய்த  பங்களிப்பை வேறு யாராலும் கொடுக்க முடியாது. எங்கள் துறையின் நட்சத்திரமான ரூபியை நினைவுகூர்கிறோம்” என்று பதிவிட்டிருக்கிறார்கள். 


டிரெண்டிங் @ விகடன்