வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (09/11/2017)

கடைசி தொடர்பு:18:59 (09/11/2017)

மலக்குழிச் சாவு... கறுப்பு - வெள்ளை உலகம்...! பா.இரஞ்சித் ஒருங்கிணைத்த ‛நானும் ஒரு குழந்தை’ கண்காட்சி

மழை பெய்யாத நேற்றைய மாலையில் `நிலா தம்மா' குழுவினரின் பறையிசை இடி என முழங்க, எக்மோரில் ஆரம்பமானது `நானும் ஒரு குழந்தை' புகைப்படக் கண்காட்சி. குழந்தைகளுக்கான புகைப்படங்கள் என்றதும், கலர் கலராக டிரெஸ் அணிந்து புல் தரையில் அமர்ந்தபடி புன்னகைக்கும் குழந்தையின் புகைப்படம் நம் மனதில் இயல்பாகத் தோன்றும். ஆனால், கேலரிக்குள் நுழைந்தவுடன் மாட்டப்பட்டிருக்கும் புன்னகையற்றச் சிறுமிகளின் புகைப்படம், வெறித்த பார்வையுடன் நம்மை `கறுப்பு-வெள்ளை' உலகுக்கு அழைத்துச்செல்கிறது. அந்தப் புகைப்பட உலகின் முகங்கள், இதுநாள்வரை நாம் பார்க்கவே கூடாது எனத் திட்டமிட்டுத் தவிர்த்துவந்த முகங்கள்; நம் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க தங்களை அழுக்காக்கிக்கொண்டவர்களின் முகங்கள்; நம் துர்நாற்றத்தைப் போக்க தங்களின் உயிரைக் காவுகொடுத்தபோதும் மூக்கைப் பொத்தியபடியே குற்றவுணர்ச்சியின்றி நாம் கடந்து சென்றவர்களின் முகங்கள்; நம் வீட்டுக் கால்வாயைச் சுத்தம் செய்த பிறகு நம்மிடம் குடிதண்ணீர் கேட்டதற்கு, நாம் கொடுக்காமல் சாதி முகம் காட்டியபோதும் நம்மை ஏதும் சொல்லாமல் விலகிச் சென்றவர்களின் முகங்கள். அந்த முகங்களைப் பற்றி, சற்று விரிவாகக் காண்போம்.

புகைப்படக் கண்காட்சி

கேலரியில் மாட்டப்பட்டிருந்த அத்தனை புகைப்படங்களும் மலம் அள்ளும், துப்புரவுத் தொழில் செய்பவர்களின் வாழ்வியல் சார்ந்த புகைப்படங்கள். மலக்குழியில் விழுந்து இறந்தவர், ஒப்பாரிவைக்கும் பெண்கள், மாநகராட்சிக் கழிப்பிடங்கள், கவலைதோய்ந்த குழந்தைகள், மலம் சுமந்துச் செல்பவர்கள், குப்பைமேடுகள் என நிரம்பி இருந்தன புகைப்படங்கள். அந்தப் புகைப்படங்களை எடுத்தவர், சென்ற வருடம் வெளியாகி மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை எழுப்பிய `கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர் பழனிக்குமார்.

எப்போதும் வண்ணங்கள் நிறைந்த ஓவியக் கண்காட்சிகள், புகைப்படக் கண்காட்சிகள் பல, லலித்கலா அகாடமியில் நடந்துள்ளன. ஆனால், இந்தப் புகைப்படங்கள் அனைத்துமே வண்ணங்களற்று கறுப்பு வெள்ளையாகவே இருந்தன. அப்படியிருப்பது அந்தத் தொழிலாளர்களின் வாழ்வைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. பல வருடங்களாக மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் முதியவர் ஒருவர் அழும் புகைப்படம் நம் மனதை உலுக்கியது.

புகைப்படக் கண்காட்சி

டிரைனேஜ் குழியில் மூழ்கியபடி சுத்தம் செய்பவரைத்தான், சாலைகளில்  நாம் பார்த்தும் பார்க்காததுபோல் விரைந்திருப்போம். அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருந்தவரின் புகைப்படம் அந்தத் தொழிலின் பெரும் அவலத்தை நமக்கு உணர்த்தியது.

மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இறந்தவருடைய குடும்பத்தின் புகைப்படத்தை நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. ஒரு குழந்தை, தன் வாயில் குச்சியை வைத்து விளையாடிக்கொண்டிருக்க, பின்னால் இருவர் மலக்கழிவுகளை அகற்றிக்கொண்டிருக்கும் புகைப்படம் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. விஷவாயு தாக்கி இறந்துபோனவர் கண்ணாடிப் பேழைக்குள் கிடத்தப்பட்டிருக்க, சொந்தபந்தங்கள் கதறி அழும் புகைப்படம்  நம் மனதைக் கணக்கச்செய்தது. இப்படி அங்கு உள்ள புகைப்படங்கள் அத்தனையும் நம்மை அதிரவைக்கின்றன.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் `நீலம் பண்பாட்டு மையம்' இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா, நவம்பர் 8-ம் தேதி லலித்கலா அகாடமியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் `கக்கூஸ்' ஆவணப்படத்தின் இயக்குநர் திவ்யபாரதி, நாடகக் கலைஞர் கருணா பிரசாத், ஒளிப்பதிவாளர் முரளி, கலை இயக்குநர் ராமலிங்கம், குழந்தைகள் நல செயற்பாட்டாளர் எழிலரசன், கல்வியாளர் வ.கீதா ஆகியோர் பங்கேற்றனர்.

புகைப்படக் கண்காட்சி

பற்பல தொழில்நுட்பங்களில் வளர்ச்சி கண்டுவிட்டதாகச் சொல்லப்படும் நம் `டிஜிட்டல் இந்தியா'வில், மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. புகைப்படக் கலைஞர்களின் கேமராக்கள் எப்போதும் அழகிய மாடல்கள், காட்டுக்குள் வசிக்கும் மிருகங்கள், கட்டடங்கள், விழாக்கள் இவற்றைதான் அதிகமாகப் படமெடுக்கின்றன. `ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி' எனப்படும் தெருக்களை, மனிதர்களைப் படமெடுப்பவர்கள்கூட தங்கள் கேமராவை இந்தத் தொழில் செய்யும் மக்களை நோக்கி தங்கள் கேமராவைத் திருப்புவதில்லை. இந்த நிலையில், மாபெரும் வரலாற்றுச் சாட்சியான இந்தப் புகைப்படங்களை எடுத்த பழனிக்குமாரிடம் புகைப்படங்கள் குறித்துப் பேசினோம்...

``எங்க அம்மா மீன் விக்கிறவங்க. நான் இன்ஜினீயர் ஆகிட்டா, அவங்களை  நல்லபடியா பார்த்துக்கணும்கிறது அவங்க ஆசை. படிச்சு முடிச்சப்புறம் அரசு கல்வி உதவித்தொகையில வாங்கின கேமராவை எடுத்துக்கிட்டு ஊர் ஊரா சுத்திக் கத்துக்கிட்ட அனுபவப் பாடம்தான் எல்லாமே. `களிமண் விரல்கள்' குழுவுடன் சேர்ந்திருந்த பொழுதுகள்தான் என்னோட வாழ்க்கையை அர்த்தப்படுத்துச்சு. `கக்கூஸ்' டாக்குமென்ட்ரி பண்ணப்போ துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பம்,  வாழ்க்கை, அந்தக் குழந்தைங்களின் எதிர்காலம் பற்றிய அவங்களோட கண்ணோட்டம் என்னை ரொம்பவே பாதிச்சது. குழந்தைங்க ரொம்ப நல்லவங்க. அவங்க சாதி மதம் ஏற்றத்தாழ்வு எதுவும் பார்க்காதவங்க. அந்தக் குழந்தைங்க கூட செலவிட்ட  நேரத்தை ரொம்ப முக்கியமானதா பார்க்கிறேன். இதுவே கலையாவும் வாழ்க்கையாவும் இந்த நேரத்துல தோணுது. மலம் அள்ளும் இழி தொழில்ல இருந்து அவங்களை மீட்டெடுக்கிறதுக்கான என்னால முடிஞ்ச சின்ன முன்னெடுப்பாதான் இதைப் பார்க்கிறேன்" என்றார், அவர் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தபடி.

புகைப்படக் கண்காட்சி

``தமிழகத்திலிருந்து சாதியை ஒழிக்கவேண்டிய முக்கியமான பொறுப்பில் நாம் இருக்கிறோம்'' என்று நிகழ்வு குறித்து பேசினார், இயக்குநரும் கண்காட்சியை ஒருங்கிணைத்தவருமான பா.இரஞ்சித். ``பழனிக்குமார் போன்ற இளைஞர்கள், கலையை சமூகப் பொறுப்புள்ள ஒன்றாகப் பயன்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. முழுக்க முழுக்க சாதியால் கட்டமைக்கப்பட்டுள்ள நம் சமூகத்திலிருந்து சாதியை ஒழிக்க, கலை, இலக்கியத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது" என்றார்.

சுதந்திரத்துக்கு முன் நடைபெற்ற `ஜாலியன் வாலாபாக் படுகொலை' போன்ற பல சம்பவங்களைப்  பற்றி அறிந்துவைத்திருக்கும் நாம், நம் சமகாலத்தில் நடக்கும்  மலக்குழிச் சாவைப் பற்றி எந்தவிதமான புரிதலுமின்றி இருக்கிறோம். இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் அதைப் பற்றி காத்திரமாகப் பேசுகின்றன. புகைப்படக் கலையில் `ஃப்ரேமிங் மற்றும் போகஸ் என்பது மிக முக்கியம்' என்பார்கள் புகைப்படம் எடுப்பவர்கள். இன்று பலரும் கேமராவும் கைகளுமாகப் புகைப்படமெடுக்கிறார்கள். ஆனால், இந்தச் சமூகத்தில் எதை `போகஸ்' செய்யவேண்டுமோ, அதைப் பலரும் செய்வதே இல்லை. கலை, மக்களுக்கானதா இல்லையா என்பதுபோல விவாதங்கள் பல ஆண்டுகளாக நடக்கின்றன. ஆனால், எந்த மக்களுமே இல்லாதபோது `கலை' என்ற ஒன்றே இல்லாமல்போகும். கேலரியில் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்த ஃப்ரேம்கள் சற்று ஒழுங்கின்றி அமைந்திருந்தன. இந்தச் சமூகம், ஏற்றத்தாழ்வை எப்போதும் தாங்கிப் பிடித்திருப்பதைத்தான் அவை காட்டுவதாகத் தோன்றியது. புகைப்படங்களை எல்லாம் பார்த்து முடித்துவிட்டு வெளியேறும்போது நம்மை வரவேற்ற புகைப்படத்திலிருந்த அதே சிறுமியின் கண்கள் நம்மை எதிர்கொள்ளும். அந்தக் கண்கள் மட்டுமல்ல, அங்கு இருந்த பல குழந்தைகளின் கண்கள் நம்மை உற்றுநோக்கியபடி இருக்கும். அதை எதிர்கொள்ள முடியாமல் நாம் நகரும்போது வெளியே சிறுவர் சிறுமிகள் இசைத்த பறையொலி நம் இதயத்தில் இடியாக எதிரொலித்தது.

(நவம்பர் 9 - 14 வரை காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்தப் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.)


டிரெண்டிங் @ விகடன்