வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (11/11/2017)

கடைசி தொடர்பு:13:30 (11/11/2017)

பார்க்கிங் பிரச்னை இல்ல, கூட்டத்துல மூச்சுத் திணற வேண்டியது இல்ல - அசரடிக்கும் Food Bike ஐடியா!

''இந்த கார்ப்பரேட் உலகத்துல ஒரு இடத்துல நிக்கிறதுக்கே நேரமில்லாம ஓடவேண்டிய சூழல். நாம கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பண்ணணும்னு காலேஜ் படிக்கும்போதே நானும் தம்பியும் யோசிச்சோம். காலேஜ் பசங்க என்ன பண்ண போறாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு எல்லாருக்குள்ளேயுமே இருந்துச்சு. ஷங்கர் சாரோட 'பாய்ஸ்' படம்தான் எங்களோட இந்த food Bike ஐடியாவுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இப்போ இருக்க பிசினஸ் மார்க்கெட்ல ஹோட்டல் பிசினசுக்கு எப்போவுமே வரவேற்பு இருக்கும், அதுல வித்தியாசமா பண்ணணும்னு யோசிச்சு இந்த ஐடியா பிடிச்சோம்'' என நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் பேசுகிறார் அருண் வர்மா. இந்தியாவில் முதல் food bike உணவகத்தைத் தொடங்கி ஒரு புல்லட்டையே ஓட்டலாக வடிவமைத்திருக்கிறார். தற்போது டெல்லி, பாண்டிச்சேரி, சென்னை  என இந்தியா முழுவதும் 21 கிளைகள் பரப்பி அடுத்ததாக லண்டனிலும் சிறகு விரிக்க இருக்கும் ஆந்திரா இளைஞர்.

Food Bike

உங்களோட முதல் கிளை எங்க ஆரம்பிச்சீங்க? அதற்கு வரவேற்பு எப்படி இருந்துச்சு?

நண்பர்களோட சேர்ந்து பெங்களூருவுலதான் முதல் தடவை இந்த ஃபுட் பைக் முறையை அறிமுகப்படுத்துனோம். எல்லாருக்குமே இது வித்தியாசமா தெரிஞ்சது. சுவைல குறை வைக்காததால ரொம்ப நல்ல வரவேற்பு கிடைச்சது. புதுசா ஒரு விஷயம் பண்றோம்னா முதல் தடவை ஆர்வமா வருவாங்க. அப்படி வர்றவங்களை தக்க வச்சுக்குற அளவுக்கு நம்ம சேவை தரமா இருக்கணும். அதை சரியாவே பண்ணிட்டுருக்கோம்னு நம்புறேன்.

ஹோட்டல் துறைனு முடிவு பண்ணுன பிறகு அதை எப்படி பைக் ஐடியாவுல பொருத்துனீங்க?

இந்தியாவுல எல்லா மாநிலத்துலயுமே ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளைக் கொண்டாடி ரசனையோட சாப்பிடறவங்க அதிகம். ஆட்கள் அதிகம் இல்லாம, இடத்தையும் அடைச்சுக்காம ஒரு  புல்லட்டோட எல்லாத்தையும் மேட்ச் பண்ணிக்கலாமேன்னுதான் இந்த ஐடியா. பார்க்கிங் பிரச்சனை இல்ல, வேலையாட்கள் அதிகம் தேவை இல்ல, ரொம்ப பெரிய இடம் தேவை இல்ல, அதிகபட்சம் ரெண்டு பேரு இருந்தாலே போதுமானதுதான். இதையெல்லாம் மனசுல வச்சுதான் ஃபுட் பைக் ஆரம்பிச்சோம். இப்படி தேவையில்லாம ஆகுற செலவை எல்லாம் கட்டுப்படுத்தி எண்ணெய் இல்லாத வெறும் நிலக்கரில இயற்கையான ஆரோக்கியமான சமையலுக்கு அதை செலவு பண்றோம்.  ஆரம்பத்துல வர்ற கஸ்டமர்ஸ் உட்கார்ந்து சாப்பிடுறதுக்கு சிரமமா இருந்துச்சு. இப்போலாம் எல்லாரும் குரூப் குரூப்பா வந்து ஒரு நண்பனோட வீட்டுக்குள்ள சாப்பிடுற அனுபவம் கிடைக்கிறதா சொல்றாங்க.

ஃபுட் பைக் பற்றி செலிப்ரிட்டிகளோட பாராட்டு?

கிரிக்கெட் பிளேயர் ஸ்டூவர்ட் பின்னிக்கு இந்த ஃபுட் பைக் பார்பிக்யூ ரொம்ப பிடிச்சுருந்துச்சு. அவர் சாப்பிட்டதுலயே சிறந்த பார்பிக்யூனு சொன்னார். அதுமட்டுமில்லாமல் டாப் லிஸ்ட்ல இருக்குற பெரும்பாலான செஃப்களுக்கு பிடிச்சுருக்குன்னு சொன்னாங்க.
 
ஒரு food bike தொடங்க எவ்வளவு செலவாகும்?

food bike

எல்லாம் சேர்த்து ஒரு அஞ்சுல இருந்து ஆறு லட்ச ரூபாய் செலவாகும். ஒரு வருசத்துக்குள்ளயே நீங்க போட்ட முதலீடை எடுத்துடலாம். இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்ல, உணவின் மேல் உங்களுக்கு தீராக்காதல் இருக்கணுமே. அப்படி இருக்குறவங்க யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலை தொடங்கலாம்.

எதிர்கால திட்டம் என்ன?

பெங்களூர்ல ஆரம்பிச்சு இப்போவரை 21 கிளைகள் இருக்கு. சென்னைல வேளச்சேரி, நாவலூர்னு ரெண்டு இடத்துல தொடங்கி இருக்கோம். சீக்கிரமே கொச்சி, மும்பை, புனேன்னு இன்னும் ஒரு வருஷத்துல இதோட எண்ணிக்கையை நூறா மாத்தணும். இந்த food chain-ஐ உலகம் முழுக்க பரப்பணும்ங்கிறதுதான் எங்களோட நோக்கம். அதோட அடுத்த கட்டமா லண்டன்ல தொடங்குறதைப் பத்தியும் பேசிக்கிட்டு இருக்கோம்.


டிரெண்டிங் @ விகடன்