வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (11/11/2017)

கடைசி தொடர்பு:17:57 (11/11/2017)

“இட ஒதுக்கீடு மூலம்தான் எங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்!’’ - திருநங்கை கிரேஸ் பானு

கிண்டலும் கேலியுமாக திருநங்கைகளை நம்மில் சிலர் கடந்து செல்கிறோம். லோக்கல் டிரெயினில், கடைகளில் கையேந்தி நிற்கும்போது முகத்தைத் திருப்பிக் கொள்கிறோம். நம்மை நெருங்கிவரும்போது அச்சம் கொள்கிறோம். 'இதெல்லாம் ஒரு பொழப்பா?' என வியாக்கியானம் பேசுகிறோம். தூரத்தில் வரும்போதே திருடர்களைப் பார்த்ததுபோல விலகிக் கொள்கிறோம். ஐந்து ரூபாயை கொடுத்து விட்டு நம் தலைமுறையே செழிக்க வேண்டுமென வாழ்த்தச் சொல்கிறோம்.

நகைக்கடைத் திறப்புவிழாவுக்கு அழைத்து 'ராசி' யான கடையாக வேண்டுமென ஆசைப்படுகிறோம். ஏதோ இந்த சமூகத்தின் இழிவாக பார்க்கப்படும் 'திருநங்கைகளின்' கனவைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ அவர்களிடம் நாம் பேசுவது குறைவு. நம்மைப் போலவே அரசுக்கு வரி செலுத்தினாலும் கல்வி, வேலைவாய்ப்பு... ஏன், வாடகைக்கு வீடு கிடைப்பதில் கூட அவர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது. இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் அனைத்து விதமான பிம்பங்களையும் உடைத்தெரியவே அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், சமூகத்தின் பிற்போக்கான எதார்த்த நிலை வேறு விதமாக உள்ளது. அவர்களைப் பற்றிய பார்வைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் நிலை குறித்தான காரணங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

திருநங்கை

திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு , அரசியல் அனைத்திலும் இடஒதுக்கீடு கேட்டு  தொடர்ந்து போராடி வரும் திருநங்கை கிரேஸ் பானுவிடம் பேசினோம். இவர் தமிழகத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி. திருநங்கைகள் பற்றிய பொதுப் பார்வை, கல்வியில் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு, திருநங்களின் எதிர்கால நிலை உள்ளிட்ட பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்தார்.

பொது மக்களின் பார்வை மாற வேண்டும்:

“இப்பக் கூட டெல்லிலதான் இருக்கேன். ஒரு திருநங்கைக்கு விமான பணிப்பெண் வேலைக்கான இன்டர்வியூல ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அதுக்காகவும் சித்த மருத்துவக் கல்லூரில சீட் கொடுக்க மாட்டேன்னு சொல்லப்பட்ட திருநங்கைக்கு நீதி கேட்டும்தான் உச்ச நீதிமன்றத்துக்காக வந்திருக்கேன்”, என்றவரிடம் திருநங்கைகள் குறித்தான பொதுப்பார்வை குறித்து கேட்டதும், பலவித தரவுகளுடன் பேசத்தொடங்கினார்.

"ப்ரித்திகா யாசினி எஸ்.ஐ ஆனப்புறம் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கான்ஸ்டபிள் வேலைக்கு அப்ளை பண்ணுனாங்க. அதுல இப்போ 3 பேர் கான்ஸ்டபிளா இருக்காங்க. 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் எனக்கு தெரிஞ்சே இன்ஜினீயரிங் படிச்சிட்டு இருக்காங்க. நம்பிக்கையான ஒரு எதிர்காலத்தை நோக்கி நிறையபேரு தங்களோட பயணத்தைத் தொடங்கிட்டாங்க. திருநங்கைகள் கல்வி, வேலை வாய்ப்புகள் கிடைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்குனு தெரிஞ்சா, மக்கள் அவங்கள தப்பா பாக்க மாட்டாங்க". என்று தெளிவான  பதிலை முன்வைத்தார்.

திருநங்கை

விடுதி, கழிப்பிட வசதி போன்ற தேவைகள் சரிசெய்யப்பட வேண்டும்: 

“வீட்டை விட்டு வெளியேற்றப்படும் திருநங்கைகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமலேயே தவறான தொடர்புகளால் பாதை மாறிவிடுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகைள் தங்களின் படிப்பை பாதியிலேயே விட்டு விடும் நிலை ஏற்படுகிறது.  பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பெண்கள் விடுதியிலேயே திருநங்கைகளுக்குமென சில அறைகளைக் கொடுத்தால் கூட அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோல நிறைய தனியார் நிறுவனங்களில் உங்களுக்கு வேலை கிடைத்தால் எந்த கழிப்பிடத்தைப் பயன்படுத்துவீர்கள் என கேட்கிறார்கள். இது போன்ற சில காரணங்களுக்காகவே நிறைய திருநங்கைகளுக்கு சில தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பதில்லை" என்றார் வேதனையுடன்.

இடஒதுக்கீடுதான் ஒரே தீர்வு: 

“எப்போதும் ஒடுக்கப்படுகிறவர்கள் முன்னேறி வருவதற்கு இடஒதுக்கீடுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். 2013-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்தேன்.  இதேபோல உச்ச நீதிமன்றத்திலும் ஓர் அமைப்பு வழக்குத் தொடுத்திருந்தது. உச்ச நீதிமன்றம் இதுபோன்ற அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பொதுவான தீர்ப்பு வழங்கியது. திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு. அதில் நிறைய நிபந்தனைகளும் இருந்தன. ஆனால், என் கோரிக்கை திருநங்கைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் என ஒவ்வோர் இடத்திலும் தனி இட ஒதுக்கீடு வேண்டும். அப்போதுதான் திருநங்கைகளின் வாழ்வு மேம்படும்’’ என்றார் உறுதியான குரலில்.

திருநங்கை

“எங்களுக்காக இந்தச் சமுதாயத்துல யாரும் குரல் கொடுக்கல. என்ன ஜாதியோ அதுலயேதான் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு தரேன்றாங்க. நாங்க படுற சிரமத்துல மத்தவங்களுக்கும் எங்களுக்கும் ஒரே மாதிரியான இட ஒதுக்கீடுன்றது எப்படி சரியாகும். எங்களுக்கு தேர்தல்ல ஒரு தொகுதி குடுத்தா எங்களோ கஷ்டத்தைச் சொல்ல சரியான ஒரு வழியாயிருக்கும்’’ என்றபடியே கோர்டுக்கு கிளம்புறேன்’’ என்றார்.

சில வாரங்களுக்கு முன் 'வைகை எக்ஸ்பிரசில்' வரும்போது ஒரு பயணியிடம் திருநங்கை ஒருவர் காசு கேட்டார். அதற்கு அவர், “உனக்கெல்லாம்  பொழைக்குறதுக்கு வேற வழியே இல்லயா? ஏதாவது வேலைக்குப் போக வேண்டியதுதானே?’’ என்றார். “ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க சார்’’ என்றார் அந்தத் திருநங்கை. உடனே அவர் அமைதியாகிவிட்டார். அந்தக் கேள்வியைத்தான் அரசிடமும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  குடும்பம், அரசு, சமூகம் என ஒட்டுமொத்தமாக அனைவராலும் புறக்கணிக்கப்பட்டாலும் தங்களை நிரூபிக்க அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் உடனிருந்து உதவ மறுத்து அவர்களை கேலிப் பொருளாக பாரத்துக் கொண்டே இருக்கிறோம்! 


டிரெண்டிங் @ விகடன்