ஒலிம்பிக், டைட்டானிக், பிரிட்டானிக்... மூன்று கப்பல் விபத்துகளை சமாளித்த வயலெட் ஜெஸ்ஸப்! #FeelGoodStory

உன்னை அறிந்தால்...

நெருப்பு சுடும் என்று தெரிந்த பிறகு, யாராவது அதைத் தொடுவார்களா? வாழ்வதற்காக ஒரு வேலை... ஆனால், அந்த வேலையில் இருந்தால் உயிருகே ஆபத்து என்பதை உணர்ந்ததற்குப் பிறகும் யாராவது தொடர்ந்து அதில் இருக்க முயற்சிப்பார்களா? முயற்சிப்பார்கள்.  உயிருக்கு உத்தரவாதமில்லாத ராணுவம், விமானப் படை, கப்பற் படை போன்றவற்றை விட்டுவிடுவோம். பாதுகாப்பான, பொருத்தமான, பயமில்லாத வேலைகள் பல இருந்தும், அவற்றை இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு அபாயம் நிறைந்த வேலையைத் தேடி ஓடுகிறவர்களும் உண்டு. சிலர் அப்படித்தான். இதற்கு, அவர்கள் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று அர்த்தமில்லை; பார்க்கும் வேலையை அந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்று அர்த்தம். இது ஒரு மனோபாவம். வயலெட் ஜெஸ்ஸப் (Violet Jessop) அவர்களில் ஒருவர். ஒருமுறை அல்ல... மூன்று முறை கப்பல் விபத்துகளைச் சந்தித்து உயிர் மீண்டவர். அப்படியென்ன பேரிடர்களைச் சந்தித்தார் வயலெட் ஜெஸ்ஸப்? பார்க்கலாம்... 

வயலெட் ஜெஸ்ஸப்

1887-ம் வருடம் அர்ஜென்டினாவில் பிறந்தார் வயலெட். அப்பா, வில்லியம், அம்மா கேத்தரின். இவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் மூத்தவர் வயலெட். முதல் குழந்தை என்பதாலேயே வீட்டில் வயலெட்டுக்குப் பொறுப்பு அதிகம். அம்மாவும் அப்பாவும் இல்லாத நேரங்களில் அவர்தான் சகோதர, சகோதரிகளைப் பார்த்துக்கொள்வார். அப்பா வில்லியமுக்கு ஆடு வளர்ப்பதுதான் தொழில். அவர் வருமானத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. வயலெட்டுக்கு 16 வயது நடந்துகொண்டிருந்தபோது அப்பா வில்லியம் இறந்துபோனார். அதற்குப் பிறகு அங்கே வாழ வழியில்லாமல் கேத்தரின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். 

இங்கிலாந்தில் கேத்தரினுக்கு வேலை கிடைத்தது. கப்பல் பணிப்பெண் வேலை. ஒரு முறை கப்பலில் ஏறிக் கிளம்பிப் போனால் எப்போது வீடு திரும்புவார் என்று சொல்ல முடியாது. வாரங்கள், சில மாதங்கள்கூட ஆகலாம். வயலெட்தான் அம்மா இல்லாத நேரங்களில் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு, ஆதாரம். கான்வென்ட்டுக்குப் போய் படித்தபடியே, வீட்டையும் பார்த்துக்கொண்டிருந்தார். பலருக்கு வாழ்க்கை சுமுகமாக, ஒரே சீராகப் பயணிப்பதில்லை. விதி என்கிற ஒன்று மிக மோசமாக சிலரை மட்டும் தொந்தரவு செய்யும். அது, வயலெட்டையும் விட்டுவைக்கவில்லை. அம்மா கேதரினுக்கு கடல் பயணம் ஒப்புக்கொள்ளவில்லை; அவர் உடல் அந்த வேலைக்கு ஒத்துழைக்கவில்லை. படுக்கையில் விழுந்தார். இப்போது வயலெட்டின் முறை. குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கவேண்டிய அடுத்த தூணாக வயலெட்டை பீடத்தில் அமர்த்தியது காலம். 

அம்மாவைப்போலவே கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை வயலெட்டுக்கு இருந்தது. கப்பல் பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். அவரின் 21-வது வயதில் லண்டனில் இருந்த `ராயல் மெயில் ஸ்டீம் பாக்கெட் கம்பெனி’ என்ற கப்பல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிறகு `ஒலிம்பிக்’ (Olympic) என்ற புகழ்பெற்ற கப்பலில் பணிப்பெண் வேலை. ஒலிம்பிக் அந்தக் காலத்தில் மிகப் பெரிய பயணிகள் கப்பல் என்று பெயர் வாங்கிய ஒன்று. ஆடம்பரமான, அழகான கப்பல். அதில் பணியாற்றுவதை மிகவும் விரும்பினார் வயலெட். 

கடல் பயணம் அலாதியான அனுபவம். ஆனால், எந்த நேரமும் ஆபத்தும் நேரலாம். இது, வயலெட்டுக்குத் தெரிந்தேதான் இருந்தது. வயலெட், ஐந்தடி மூன்று இன்ச் உயரம். அவருடைய திறமைக்கு லண்டனிலேயே ஏதோ ஓர் நிறுவனத்தில் அல்லது மருத்துவமனையில் நல்ல வேலை கிடைத்திருக்கும். அது என்னவோ கப்பல் பயணம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு கடல் பறவையாக, கடலின்மேல் பறக்க முடியாவிட்டாலும், கப்பலிலாவது பயணம் செய்யலாமே என்கிற தீராத வேட்கை. 

ஒலிம்பிக் கப்பல்

1911-ம் ஆண்டு முதல் பேராபத்தை எதிர்கொண்டார் வயலெட். இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டன் (Southampton) துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஒலிம்பிக் கப்பல், இங்கிலாந்தின் போர்க்கப்பலான ஹெச்.எம்.எஸ் ஹாக் (HMS Hawke) மீது எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் மோதியது. இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு கப்பல்களுக்கும் பலத்த சேதம் என்றாலும்கூட, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இரு கப்பல்களும் கடலில் மூழ்கவும் இல்லை. இன்னொரு அதிசயம், இரண்டு கப்பல்களுமே கரைக்குப் பத்திரமாகத் திரும்பிவிட்டன. ஒலிம்பிக் அற்புதமான பயணிகளின் கப்பல்தான். ஆனால், அன்றைக்கு அதில் பயணம் செய்தவர்கள் எல்லோருமே அரண்டுபோனார்கள். எப்போது கரைக்குத் திரும்புவோம் என்கிற பீதியோடு உறைந்துபோயிருந்தார்கள். ஆனால், வயலெட் துளிக்கூட அச்சம்கொள்ளவில்லை. வேறு யாராக இருந்தாலும், அன்றைக்கே கப்பல் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போயிருப்பார்கள். வயலெட், எதுவுமே நடக்காததுபோலத் தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்தார். 

வயலெட், தன் 24-வது வயதில் `எதனாலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்’ என்று பெயர் பெற்றிருந்த `டைட்டானிக்’-ல் பணிப்பெண் வேலைக்குச் சேர்ந்தார். கப்பல் கிளம்பிய நான்காவது நாள், வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி விபத்து. அந்த விபத்து நடந்த இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் வயலெட். அவசரமாக எழுப்பப்பட்டார். மேல்தளத்தில் இருந்து உயிர்காக்கும் படகுகளில் பெண்களும் குழந்தைகளும் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெண்களை ஒருங்கிணைக்கும் வேலை வயலெட்டுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வயலெட்டுக்கும் ஒரு படகில் இடம் கிடைத்தது. படகு கப்பலிலிருந்து கீழே இறக்கப்படும் சமயத்தில், ஓர் அதிகாரி வயலெடின் மடியில் ஒரு குழந்தையைக் கிடத்தினார். `இந்தக் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கோ’ என்றார். பனிப்பாறையில் மோதிய இரண்டே மணி நேரத்தில் முழு டைட்டானிக்கும் கடலுக்குள் மூழ்கிவிட்டது என்கிறது வரலாறு. 

டைட்டானிக் கப்பல்

அடுத்த நாள் காலை, டைட்டானிக் விபத்தில் உயிர்பிழைத்தவர்களைக் காப்பாற்றியது கார்பாத்தியா (Carpathia) என்ற கப்பல். அதில் ஏறிய சில நிமிடங்களுக்குள் ஒரு பெண், வயலெட்டைத் தேடி ஓடி வந்தார். அவர் மடியிலிருந்த குழந்தையை எடுத்து, வாரி அணைத்துக்கொண்டார். `என் கண்ணு... என் செல்லம்’ என்று கொஞ்சியபடி குழந்தையோடு நகர்ந்தார். `அந்தப் பெண்மணிதான் குழந்தையின் தாய் என்பது பார்த்ததுமே புரிந்தது. ஆனால், அவர் எனக்கு ஒரு நன்றியோ... ஏன்... என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை’ என்று குறிப்பிடுகிறார் வயலெட். 

பிரிட்டானிக்

டைட்டானிக்கில் வயலெட்டுக்கு நடந்தது பேராபத்துகள். ஆனாலும், தன் பணிப்பெண் வேலையை விட அவர் தயாராக இல்லை. கடலும் கப்பலும் அவரை இரு கரம் நீட்டி, `வா... வா...’ என அழைத்துக்கொண்டிருந்தன. முதல் உலகப் போரின்போது இங்கிலாந்தின் செஞ்சிலுவை சங்கத்தில் நர்ஸாகப் பணியாற்றினார் வயலெட். `ஹாஸ்பிட்டல் ஷிப்’ என்று அழைக்கப்பட்ட பிரிட்டானிக் (Britannic) கப்பலில் வேலை செய்யவேண்டியிருந்தது. கப்பல் ஏஜியன் கடலில் (Aegean Sea) சென்றுகொண்டிருந்தது. அது, 1916, நவம்பர் 21. பயங்கரமான வெடிச் சத்தம். கப்பலில் இருந்தவர்கள் அலறினார்கள். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பதில் பலவிதமான ஊகங்கள் இருந்தனவே தவிர, கடைசிவரை உண்மை தெரியவில்லை. எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு ஏவுகணை வந்து மோதியது என்றார்கள். கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்றார்கள். எது எப்படியோ இந்த முறை வயலெட்டைக் காப்பாற்ற எந்த உயிர்காக்கும் படகும் வரவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வயலெட் கடலில் குதித்தார். 55 நிமிடங்களில் பிரிட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிப் போனது. 30 பேர் இறந்துபோனார்கள். 

கப்பல் பணிப்பெண்

கடலில் குதித்தபோது கப்பலின் அடித்தளத்திலிருந்த ஒரு கட்டையில் மோதிக்கொண்டதில், தலையில் பலமான அடி. எப்படியோ, எதையோ பிடித்துக்கொண்டு அடுத்த உதவி கிடைக்கும் வரை நீந்தித் தப்பித்தார் வயலெட். ஆனாலும் கப்பல் வேலையை அவர் விடவேயில்லை. 1920-ம் ஆண்டில் மறுபடியும் வேலைக்குத் திரும்பிவிட்டார். பின்னாளில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டார் வயலெட்... ‘அன்னிக்கி என் தலையில பட்ட அடி என்னனு அப்போ தெரியலை. நாளாக ஆக, அடிக்கடி தலைவலி வர ஆரம்பிச்சுது. டாக்டர்கிட்ட போனேன். என்னென்னவோ சோதனைக்கு அப்புறம் `மண்டை ஓட்டுல பலமான அடிபட்டதாலதான் தலைவலி வருது’னு சொன்னாங்க...’ என்றார்.

மன உறுதிமிக்க பணிப்பெண்ணாகவும் நர்ஸாகவும் பணியாற்றிய வயலெட், கப்பலில் கழித்த வருடங்கள் 42.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!