Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு! #MotivationStory

ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு!

ழ்ந்த தியானத்தில் இருந்தார் குரு. அந்த வெளியில் ஆழ்ந்த அமைதி ததும்பியது. ஒளி மிளிரும் அவரது முகத்தையே கூர்த்து பார்த்தபடி எதிரில் அமர்ந்திருந்தார்கள் சீடர்கள். 

அதிகாலை என்பது கேள்விக்கான நேரம். புத்தி, கூர்மையாக இயங்கும் நேரம். புத்தியைக் கூர்தீட்டும் ஆற்றல் கேள்விகளுக்கு உண்டு. கேள்விகள், எழ எழத்தான் அறிவு விசாலமாகும். தேடல், விளிம்புகளை உடைத்துச் சீறிப்பாயும். சீடர்கள் நிறையக் கேள்விகளைத் தங்களுக்குள் தேக்கிவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

சில நிமிடங்களில் கண்விழித்து, ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் பார்த்தார் குரு. அவரது பார்வையில் கருணை பொங்கியது. சீடர்களின் கண்களில் தொக்கி நிற்கும் கேள்விகள் அவருக்குப் பெருமிதத்தைத் தந்தன. அவர்கள் பேச இசைவளித்தார்.  

வயதில் சிறியவனான அந்தச் சீடன் கேட்டான். 

"குருவே, நேற்று நீங்கள் எங்களுக்கு போதித்தபோது, `ஆமைபோல் வேகம்கொள்’ என்றீர்கள். ஆனால், ஆமை பற்றி யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. 'ஆமை புகுந்த வீடும் வழக்குமன்ற ஊழியன் புகுந்த வீடும் ஒன்று' என்று எங்கள் பகுதியில் பழமொழியே இருக்கிறது. ஆமையை அமங்கலத்தின் சின்னமாகவே நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம். ஆமை, வேகமாகச் செயல்படும் விலங்கும் அல்ல. அது மிக மெதுவாகவே நகரும். பிறகெப்படி ஆமையை நாங்கள் முன்னுதாரணமாகக்கொள்ள முடியும்? ஆமையிடம் நாங்கள் கற்றுக்கொள்ள அப்படியென்ன நல்ல குணம் இருக்கிறது..?’’ 

குரு

சீடனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் குரு. "நல்லது சீடனே... நான் சொன்ன செய்தியை நன்கு உள்வாங்கியிருக்கிறாய். அதனால்தான் உனக்கு இவ்வளவு கேள்விகள் உதித்திருக்கின்றன. எல்லா விஷயங்களையுமே மேலோட்டமாகப் புரிந்துகொள்வதுதான் மனித குணம். எதையும் உடைத்து, பகுத்துப் பார்க்கப் பழக வேண்டும். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எதுவுமே காரணம் இல்லாமல், திறன் இல்லாமல் படைக்கப்படவில்லை. ஆமையும் அப்படித்தான். மனிதன் தனக்கு ஏற்புடையவாறு, தனக்குக் கீழான எல்லாவற்றையும் காழ்ப்புஉணர்வோடே புரிந்துவைத்திருக்கிறான் அல்லது போதித்திருக்கிறான். முதலில் எந்த ஒரு விஷயத்தையும் விறுப்பு, வெறுப்பற்று பகுத்தறிந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆமையைப் பற்றிக் கேட்டாயல்லவா..? ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை. தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும். பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும். ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும். 'அதுதான் தனக்கான இடம்' என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும்.

முதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே இடத்தில்தான் காலம் முழுவதும் முட்டையிடும். 

கடல் வாழ் உயிரிகளில் தன் வாழ்நாளுக்குள் அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய உயிரினம் ஆமைதான். ஆனால், பிற உயிரினங்களுக்கு இருப்பதைப்போல வசதியான துடுப்புகள் ஆமைக்கு இல்லை. உடல் வடிவமும் நீந்த ஏதுவாக இல்லை. ஆனால், அது பிற உயிரினங்களைவிட வேகமாகப் பயணம் செய்யும். 

கடல் ஆமை

முட்டையிடும் உணர்வு ஏற்படும்போது, பரந்து விரிந்த இந்தக் கடற்பரப்பில் எவ்வளவு தொலைவுக்கு அப்பால்  இருந்தாலும், அதிவேகமாகப் பயணித்து தன் பழைய இடத்தைத் தேடி வந்துவிடும்..."

குரு சொல்வதை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் சீடர்கள். 

அந்தச் சிறுவயது சீடன்தான் இப்போதும் பேசினான். 

"வசதியான துடுப்புகள் இல்லாத ஆமை, அவ்வளவு வேகமாக எப்படிப் பயணிக்கிறது?"

அவனது ஆர்வத்தை ரசித்த குரு, மேலும் சொல்லத் தொடங்கினார். 

ஆமையின் இலக்கு

"இங்குதான் நீ ஆமையாக மாற வேண்டும். தனக்குத் துடுப்புகள் இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டு முடங்கிப்போகவில்லை ஆமை. அது இயற்கையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. 

அது செல்ல திட்டமிட்டுள்ள திசையில், அதிவேக நீரோட்டம் தொடங்கும் நேரத்துக்காக அது அமைதியாகக் காத்திருக்கிறது. நீரோட்டம் தொடங்கிய விநாடியில் அதில் ஒன்றிவிடுகிறது. நீரின் தன்மைக்கேற்ப ஏறி, இறங்கி, வளைந்து, நெளிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. அந்த நீரோட்டமே ஆமையை அதன் இலக்கில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. துடுப்பை அசைக்காமல் நெடுந்தொலைவு பயணத்தை அது கடந்துவிடுகிறது..."

குரு -சீடர்

சீடர்களின் முகங்கள் பிரகாசமாகின. கனிவாக மேலும் தொடர்ந்தார் குரு. 

“ ‘ஆமைபோல் வேகம் கொள்’ என்பதன் உள்ளீடு இப்போது உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்கான இலக்கைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அது உங்கள் இயல்புக்கேற்ற இலக்குதானா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். `மற்றவர்களுக்கு இருப்பது போன்ற வசதிகள் நமக்கு இல்லையே...’ என்று வருந்தி முடங்கிப் போகாமல், நம் இலக்கைத் தொட என்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடலோடு இருங்கள். உங்களுக்கான நீரோட்டத்தை அடையாளம் கண்டதும் களத்தில் இறங்குங்கள். நிச்சயம் அந்த நீரோட்டம், உங்களை உங்கள் இலக்கில் கொண்டு போய் நிறுத்தும். வெற்றி என்பது திறனின் அடிப்படையில் மட்டுமல்ல... அந்தத் திறனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஆமை நமக்குக் கற்றுத்தரும் பாடம் அதுதான்...” என்றார் குரு.

இது போன்ற கதைகளை படிக்க: கதைகள் / Tamil Stories

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement