Published:Updated:

’ஒரு லட்சத்துக்கு ரூ.3.60 லட்சம் கொடுத்த பிறகும் வீ்ட்டை அபகரித்த கந்துவட்டிக்காரர்! - கூலித்தொழிலாளி கண்ணீர்

’ஒரு லட்சத்துக்கு ரூ.3.60 லட்சம் கொடுத்த பிறகும் வீ்ட்டை அபகரித்த கந்துவட்டிக்காரர்! - கூலித்தொழிலாளி கண்ணீர்
’ஒரு லட்சத்துக்கு ரூ.3.60 லட்சம் கொடுத்த பிறகும் வீ்ட்டை அபகரித்த கந்துவட்டிக்காரர்! - கூலித்தொழிலாளி கண்ணீர்

"கந்துவட்டி கொடுப்பவரிடம் நான் வாங்கிய ஒரு லட்சத்துக்கு இதுவரை 3,60,000 ரூபாய் வட்டி செலுத்தியுள்ளேன். இன்னமும் வட்டி கேட்டு என்னை கொடுமைப்படுத்தியவர், என் நிலத்தை அபகரித்துவிட்டார். எங்களை அடிச்சு விரட்டிட்டு, எனது வீட்டை இழுத்துப் பூட்டிவிட்டார். அதனால், நான் வாடகை வீட்டில் குடியிருந்துவருகிறேன். அவர்மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனது நிலத்தையும் வீட்டையும் மீட்டுத் தாங்க" என்று கண்ணீரும் கம்பலையுமாக ஈரோடு மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார் மனோகரன்.

ஈரோடு மாவட்டம், விளக்கேத்தி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன், பா.ம.க-வை சேர்ந்த வடிவேல் மற்றும் உறவினர்களுடன் வந்து ஈரோடு எஸ்.பி-யிடம் மேற்கண்ட புகார் மனுவை அளித்துள்ளார். அவரிடம் பேசினோம்.  "என்னோட தாய், லட்சுமியின் மருத்துவச் செலவுக்காக கடந்த 2014 ல் எங்க ஊருக்கு அருகில் உள்ள பச்சாகவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற கந்துவட்டிக்காரரிடம் கரூர் வைஸ்யா பேங்க் செக் சிலிப் இரண்டு, புரோ நோட் ஆகியவற்றில் கையெழுத்திட்டு இரண்டு ரூபாய் வட்டிக்கு ஒரு லட்சத்தை கடனாக வாங்கினேன். 6 மாதங்களுக்குப் பிறகு 10 ரூபாய் வட்டி என மாதம் 10,000 செலுத்த வேண்டுமென என்னையும், எனது குடும்பத்தாரையும் வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார் கோவிந்தசாமி. அதோடு, நான் குடியிருந்த வீட்டையும் நிலத்தையும் அடமானமாக எழுதித் தர வேண்டும். அசலும் வட்டியும் செலுத்திய பிறகு, திருப்பி எழுதிக்கொடுப்பதாகக் கூறினார். எனது குடும்ப கௌரவம் கருதி பயந்துகொண்டு, கடந்த 25.06.2014 அன்று (எண் 357/4(10 செண்ட் 4360 சதுர அடி ஓட்டு வீடு) சிவகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நானும், எனது தாயும் கையொப்பமிட்டு சுத்த கிரயம்செய்து கொடுத்தோம். இதில் எனது மனைவி ஆர்த்தி கையெழுத்துப் போடவில்லை. மேற்கண்ட வீட்டின் தற்போதைய மதிப்பு, 10 லட்சமாகும்.

கடந்த மூன்று வருடங்களாக, மாதம் 10,000 என இதுவரை ரூ 3,60,000 ரூபாயை வட்டியாகச் செலுத்தியுள்ளேன். இந்த மன வேதனையில் எனது தாய் இறந்துவிட்டார். நான் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதால், வீட்டில் இல்லாத நேரத்தில் கோவிந்தசாமி அடையாளம் தெரியாத நபர்களுடன் அரிவால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளார். அதோடு, மின்சார இணைப்பு, கேபிள் டி.வி ஒயரை கட் பண்ணிவிட்டார். மேலும், எனது மனைவியையும் மகனையும் வெளியே தள்ளி வீட்டை இழுத்துப் பூட்டிவிட்டார். இதனால், கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் திருப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்துவருகிறோம். மனவேதனையில் சிக்கித் தவிக்கிறோம். இதுகுறித்து விசாரித்து, கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுப்பதோடு, கந்துவட்டியால் அபகரிக்கப்பட்ட எனது நிலத்தையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறேன்" என்றார் வேதனையுடன்.