Published:Updated:

குப்பை அள்ளும் வண்டியான நாய் பிடிக்கும் வண்டி! பள்ளப்பட்டி பேரூராட்சி அவலம்

குப்பை அள்ளும் வண்டியான நாய் பிடிக்கும் வண்டி! பள்ளப்பட்டி பேரூராட்சி அவலம்
குப்பை அள்ளும் வண்டியான நாய் பிடிக்கும் வண்டி! பள்ளப்பட்டி பேரூராட்சி அவலம்

"குப்பை அள்ளுவதற்குத் தனியாக வண்டிகள் இல்லை.  அதனால், எங்க பேரூராட்சியில் மலை மலையாக குப்பைகள் பெருகிக்கிடக்கு. நாய்களும் பன்றிகளும் அந்தக் குப்பைகளைக் கிளறி, வீதியெங்கும் விசிறியடிக்குது. அதனால் கொசுக்கள் பெருகி, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் மக்களைப் பாடாய்ப்படுத்துது. ஆனால், எங்க பேரூராட்சியில் குப்பை அள்ளவே தனியாக வாகனங்கள் இல்லை. அதனால்,பேரூராட்சி நிர்வாகம் நாய் பிடிக்கும் வண்டியை எடுத்துட்டுப் போய், குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்திவருது. இந்தக் கொடுமை எங்காவது உண்டா?" என்று வெம்பிக் கொண்டிருக்கிறார்கள், பள்ளப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, பள்ளப்பட்டி பேரூராட்சி. 50,000கும் மேல் மக்கள்தொகைகொண்ட இந்தப் பேரூராட்சி, தமிழ்நாட்டில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் ஒன்று. ஆனால், இதன் நிர்வாகம், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அசட்டையாக இருப்பதாக மக்கள் பொருமுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள்,  "இந்த பேரூராட்சியில், எங்கு பாத்தாலும் குப்பைகளின் ராஜ்ஜியம்தான். வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை குப்பைகள் குவிஞ்சி கிடக்குது. அதில் உழலும் பன்றிகள் வீதிக்குள் வந்து, சமயத்தில் மக்கள் வசிக்கும் வீடுகளிலும் புகுந்து, நோய்களைப் பரப்பிவிட்டுச் செல்லும். இது பல ஆண்டுகளாக நடக்குது. பேரூராட்சி நிர்வாகம் ஒருமுறைகூட குப்பைகளை முழுமையாக அகற்றவில்லை.

கரூர் மாவட்ட நிர்வாகம், டெங்குவை ஒழிக்கும்பொருட்டு மாவட்டம் முழுக்க குப்பைகளை அகற்றவும், முழுச் சுகாதாரத்தைக் கடைபிடிக்கவும் என்று கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால் பள்ளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம், குப்பைகளையும் அள்ளாமல், சுகாதாரத்துக்கும் வழிவகுக்காமல் இருந்து குறட்டை விட்டு வருகிறது. நாங்களும் இங்கு குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றும்படி வகைவகையான புகார் மனுக்களை அனுப்பிவிட்டோம்; விதவிதமான போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால், குப்பைகளை முழுதாக அகற்ற பள்ளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் துளியும் அக்கறை காட்டவே இல்லை. கடமைக்கு அவ்வபோது குப்பைகளைக் கொஞ்சமாக அள்ளிவருகிறது. அதுவும் குப்பை அள்ளும் வண்டியில் இல்லை. நாய்பிடிக்கும் வண்டியில் அள்ளுகிறது.

இதிலிருந்தே பள்ளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ள எடுத்துக்கொள்ளும் அக்கறையை நீங்கள் புரிந்துகொள்ளலாம். குப்பை வண்டிகள் வாங்க பணம் ஒதுக்கியிருப்பாங்க. ஆனால், அதைத் தங்கள் பாக்கெட்டுகளில் போட்டுக்கொண்டு, இப்படி நாய் பிடிக்கும் வண்டியை குப்பை அள்ளும் வண்டியாகப் பயன்படுத்திவருகிறார்கள் பள்ளப்பட்டி பேரூராட்சி அதிகாரிகள். அதனால், மாவட்ட நிர்வாகம் உடனே இதில் தலையிட்டு, குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்கணும். குப்பைகளை அள்ள பிரத்யேக வண்டிகளை வாங்கணும். அதற்குரிய தொகையை ஆட்டையைப் போட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும். இல்லைனா,பள்ளப்பட்டி பேரூராட்சிக்கு எதிராக அனல்பறக்கும் போராட்டங்களைத் தொடங்குவோம்" என்றார்கள் ஆவேசமாக!