Published:Updated:

மதுப்பழக்கத்தால் அடுத்த தலைமுறை..? இளைஞர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை அட்வைஸ்

எம்.திலீபன்
மதுப்பழக்கத்தால் அடுத்த தலைமுறை..? இளைஞர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை அட்வைஸ்
மதுப்பழக்கத்தால் அடுத்த தலைமுறை..? இளைஞர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை அட்வைஸ்

இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளானால், அடுத்த தலைமுறைக்கு ஆண்களே இருக்க மாட்டார்கள். அப்துல்கலாம் சொன்ன இளைஞர்களாக நீங்கள் வர வேண்டும் என்று உணர்வுபொங்க  மாணவர்களிடம் பேசினார் அரியலூர் ஏ.டி.எஸ்.பி. 


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் மது ஒழிப்போம் பிரசார விழிப்பு உணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு டி.எஸ்.பி கென்னடி முன்னிலை வகித்தார். மாவட்ட ஏ.டி.எஸ்.பி சண்முகநாதன் கலந்துகொண்டு பேசினார். மது அருந்தும்போது சுகமாகத்தான் இருக்கும். இதில் வரும் பின்விளைவுகளை யாரும் நினைத்துகூட பார்ப்பதில்லை, குடிப்பதால் குடும்பத்தில் தகராறு, பிரிவினை, வாகனம் ஓட்டும்போது ஏற்படும் உயிர் சேதங்கள், இதையெல்லாம் யாரும் நினைப்பதில்லை, குடிப்பழக்கத்தால் இன்னும் 10 வருடங்களுக்குப் பின்னர், ஆண்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இப்போதே ஆண்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

இளைஞர்கள் அதிகம் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். அடுத்த தலைமுறைக்கு ஆண்கள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. ஆதலால் பெண்களுக்கு வேலை அவசியம் இருக்க வேண்டும், ஆண்கள் இல்லையென்றால் தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். சுயமாகச் சம்பாதிக்க இப்போது இந்த வயதிலேயே நன்கு படிக்க வேண்டும். இது இரண்டும் கெட்டான் வயது சிந்தனையைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மது குடிப்போர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். செல்போன், வாட்ஸ் சப் போன்றவற்றை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், 2020-ல் இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவுக்கு இன்னும் மூன்றுவருடங்கள் தான் உள்ளன. நீங்கள் முன்னேற வேண்டும், நாட்டை முன்னேற்ற வேண்டும் இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, கல்லூரி முதல்வர்கள் திருவள்ளுவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கழனியப்பன் வரவேற்றார். இறுதியில் முதல்வர் மாபாலன் நன்றி கூறினார். கூட்டம் முடிந்து ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் மதுவிலக்கு விழிப்பு உணர்வு துண்டுபிரசுரங்கள் ஏ.டி.எஸ்.பி மற்றும் போலீஸாரால் வழங்கப்பட்டது.