வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (15/11/2017)

கடைசி தொடர்பு:11:44 (15/11/2017)

‘இளையராஜா, ரஹ்மான் ரசிகர்களை இப்படி யாரும் கலாய்ச்சதில்லையே’ - வைரல் வீடியோவின் கதை சொல்லும் ஜெகன் கிருஷ்ணன்

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தொடவே கூடாத சில சப்ஜெக்ட்டுகள் இருக்கின்றன. தல - தளபதி, ராஜா - ரஹ்மான் போன்றவை அதில் சில. தொட்டால் பற்றிக்கொள்ளும் அப்பேர்ப்பட்ட ராஜா - ரஹ்மான் ரசிகர்களின் அட்டகாசங்களைக் கிண்டலடித்து ஒரே வீடியோவில் வைரல் ஆகியிருக்கிறார் ஜெகன் கிருஷ்ணன். ஸ்டாண்ட் அப் காமெடியன்களில் லேட்டஸ்ட் வரவு இவர். இங்கிலீஷில் வாரும் பீட்டர் பாப்பாக்களுக்கு நடுவில் முழுக்க முழுக்க தமிழில் ஷோ செய்யும் சென்னைப் பையன். அவரோடு நடந்த ஜாலி கேலி உரையாடல். 

ஜெகன்

யாரு சாமி நீங்க? எங்கே இருந்து வந்தீங்க?

சென்னைப் பையன்தான். எல்லாரையும் போல ஐ.டி கம்பெனில வேலை பார்க்குறேன். இரண்டரை வருஷங்கள் முன்னால கம்பெனில நடந்த ஒரு டேலன்ட் ஹன்ட்ல ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணி ரன்னர் அப் ஆனேன். 'அட! இது நமக்கு நல்லா வரும் போலயே'னு தோணுச்சு. அப்புறம் ஓபன் மைக் ஷோக்கள் பண்ண ஆரம்பிச்சேன். முதல் தடவை அப்படிப் பண்ண ஷோவுக்கே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. முழுமூச்சா களமிறங்கிட்டேன்.

ஸ்டாண்ட் அப் காமெடினாலே இங்கிலீஷ்லதான்னு ஒரு எண்ணம் இருக்கே? நீங்க மட்டும் எப்படித் தமிழ்ல?

நானும் கொஞ்ச நாள் முன்னால வரை இங்கிலீஷ்லதான் பண்ணிட்டுருந்தேன். போன வருஷம் 'தங்கலீஷ் காமெடி க்ரூப்'னு ஒண்ணு தொடங்கினாங்க. அதுக்கப்புறம்தான் எனக்கும் தமிழ்ல ஸ்டாண்ட் அப் முயற்சி பண்ணலாமேன்னு தோணுச்சு. சிரிக்க வைக்கணும்னு முடிவு பண்ணிட்டா மொழி முக்கியமில்லை. பாடி லாங்குவேஜ்ல கூட சிரிக்க வைக்கலாம். நிறைய இந்தி காமெடியன்கள் சென்னைல ஷோ பண்றாங்களே! அவங்களுக்கே அவ்வளவு கூட்டம் வரும்போது தமிழ்ல பேசுனா இன்னும் அதிகமா வருவாங்கனு தோணுச்சு. அதான்!

 

 

முதல் யூ- டியூப் வீடியோவே ராஜா - ரஹ்மான் பத்தி? நெகட்டிவ் கமென்ட்ஸ் நிறைய வந்திருக்குமே?

நான் இளையராஜா, ரஹ்மான் இவங்களோட இசையை ஒப்பிட்டு எல்லாம் எதுவும் சொல்லலைங்க. இவங்களோட வெறியர்கள் செய்யுற கலாட்டக்களைத்தான் கிண்டல் பண்ணேன். நானும் இவங்க ரெண்டு பேரோட ரசிகன்தான். ஒரு ரசிகனா இந்த வெறியர்களைக் கிண்டல் பண்ணலாமே! காரணம், தங்களோட ஃபேவரைட் மியூசிக் டைரக்டர் மேல சின்ன விமர்சனம் வைக்கக் கூட இவங்க விடுறதில்லை. அதனால ஜாலியா கலாய்க்கலாமேன்னு பண்ணதுதான் அந்த வீடியோ. அதைப் பார்த்துட்டு நிறைய பேர் 'எங்களால ரிலேட் பண்ணிக்கமுடியுது ஜி'னு பாராட்டி மெசேஜ் அனுப்பினாங்க. நெகட்டிவ் கமென்ட்களும் வராம இல்ல. கமென்ட் செக்‌ஷன்ல மூணு தலைமுறைக்கு முன்னாடி இருந்தவங்களை எல்லாம் தோண்டி எடுத்து திட்டிருக்காங்க. ஆனா, 'இதெல்லாம் மனசுல வெச்சுக்காத, ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டும் எடுத்துக்கோ'னு சீனியர் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் அட்வைஸ் பண்ணினதால இப்போ லைட்டா எடுத்துக்குறேன்.

ஐ.டில வேலை பார்த்துகிட்டே ஸ்டாண்ட் அப் காமெடியனாவும் இருக்கிறது கஷ்டமா இல்லையா?

வீக்கெண்ட்லதான் பெரும்பாலும் ஷோ பண்ற மாதிரி இருக்கும். அதனால இப்போ வரை பிரச்னை இல்லை. நவம்பர் 18-ம் தேதி சென்னைல 'ஜே.கே சில சிரிப்புகள்'னு ஷோ பண்ணப்போறேன். அப்படியே படிப்படியா நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி, நல்லா ரீச் ஆனதும் முழுநேர ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆகுறதுதான் ப்ளான். பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்