தற்கொலை செய்துகொள்ளப் போனவர், ‘டாப் செல்லர்’ புத்தகத்தின் ஆசிரியரான கதை! #MotivationStory | This is the story of a best seller book's American author

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (15/11/2017)

கடைசி தொடர்பு:11:14 (15/11/2017)

தற்கொலை செய்துகொள்ளப் போனவர், ‘டாப் செல்லர்’ புத்தகத்தின் ஆசிரியரான கதை! #MotivationStory

உன்னை அறிந்தால்...

னிதர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத, நல்ல திருப்பங்கள் எப்போது வரும்? எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒரு திருப்பமோ, வாய்ப்போ வரும்போது, அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சரியான பாதையில் நடந்தால், மேலும் மேலும் முன்னேறலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அறியப்படாத மனிதராக இருந்தால்கூட, அரிய சாதனைகளை நிகழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்கவைக்கலாம். அப்படி ஒரு திருப்பம், ஒரு குடிகாரரின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அது, அவர் வாழ்வையே மாற்றிப்போட்டது. தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்த அவர், உலகம் வியக்கும் விற்பனையில் சாதனை படைத்த புத்தகம் எழுதிய எழுத்தாளரான கதை இது. 

புத்தகம் - சுயமுன்னேற்ற நூல்

1923, டிசம்பர் 12. அமெரிக்காவில், மாசாசூசெட்ஸுக்கு அருகிலிருக்கும் நாட்டிக்கில் (Natick) பிறந்தார் ஓஜி மாண்டினோ (Og Mandino). பெற்றோர், `அகஸ்டின்’ என்று பெயர்வைத்தார்கள். பள்ளியில் படிக்கும் வயதிலேயே படிக்கும் ஆர்வம் மாண்டினோவுக்குக் கொஞ்சம் இருந்தது. அதிலும் பத்திரிகைகள் படிப்பது அவருக்குப் பிடித்திருந்தது. கையில் கிடைப்பதையெல்லாம் படிப்பார் மாண்டினோ. விளையாட்டு, அரசியல், கலை, இலக்கியம்... எனக் கலந்துகட்டிப் படித்ததில் பத்திரிகைத்துறை மேல் அவருக்கு ஆர்வம் அதிகமானது. பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, ஜர்னலிசம் படிப்பது என்று முடிவெடுத்திருந்தார். அதிலும், மிஸௌரி பல்கலைக்கழகம்தான் (University of Missouri) தனக்கு ஏற்றது என்று நினைத்திருந்தார். ஆனால், அது கைகூடவில்லை. அவர், கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக, அம்மா மாரடைப்பு வந்து இறந்துபோனார். அதோடு அவர் வாழ்க்கை திசைமாறிப்போனது. 

தனக்கு விருப்பமான பத்திரிகை, எழுத்து... இதற்கெல்லாம் கொஞ்சமும் தொடர்பில்லாத வேலையில் சேர்ந்தார் மாண்டினோ. அமெரிக்க விமானப்படையில் (United States Army Air Corps ) பணி. விமானத்திலிருந்து குண்டுவீசித் தாக்கும் (Bombardier) வேலை. மாண்டினோவுக்கு அந்த சாகசம் நிறைந்த வேலை கொஞ்சம் பிடித்துத்தான் இருந்தது. விமானத்தில் பறந்து, ஜெர்மானியப் படைகளின்மீது குண்டுமாரிப் பொழியும் வாய்ப்பெல்லாம் கிடைத்தது. போர் முடிந்த பிறகு, விமானப் படையிலிருந்து வெளியே வந்தார். பிறகு, ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வேலை. எந்தப் பிடிப்புமில்லாமல், உப்புச் சப்பில்லாமல் போய்க்கொண்டிருந்தது மாண்டினோவின் வாழ்க்கை. 

புத்தகம் - சக்சஸ் த்ரோ எ பாசிட்டிவ் மென்டல் ஆட்டிட்யூட்

எதற்காக வாழ்கிறோம் என்பது தெரியாதபோதுதான், ஒருவருக்கு தீய பழக்கங்களுக்கான வாசல் விரியத் திறக்கிறது. மாண்டினோ தன்னை யார் என்று அறிந்துகொள்ளாதது, அவரை மெள்ள மெள்ள ‘குடி’ என்கிற பள்ளத்தில் தலைகுப்புற விழச் செய்துகொண்டிருந்தது. விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது என ஆரம்பித்த பழக்கம், நாளடைவில் தீவிரமானது. மொடாக்குடியரானார் மாண்டினோ. மாலையில் ஆரம்பித்த குடி, நள்ளிரவு தாண்டியும் நீண்டது. தள்ளாடித் தடுமாறி நடப்பது, ஏதாவது மதுபான விடுதியில் விழுந்துகிடப்பது, நடு ரோட்டில் தனியாக நின்றுகொண்டு தனக்குத் தானே சத்தம் போட்டுப் பேசுவது... இவையெல்லாம் அவர் அன்றாட நிகழ்வுகளில் சகஜமானவையாகிப் போயின. 

அது, அமெரிக்காவில் குளிர்காலம். அப்போது, க்ளீவ்லாண்டில் (Cleveland) இருந்தார் மாண்டினோ. அன்றைக்கு அதிகாலை 3 மணி வரை குடித்திருந்தார். எவ்வளவு குடித்திருந்தாலும், இன்னும் மது வேண்டும்போல வேட்கை. இலக்கில்லாமல் தெருவில் நடந்துகொண்டிருந்தார். என்னசெய்வது என்று அவருக்குப் புரியவில்லை. வீட்டுக்குப் போகவும் மனமில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே தவிர, என்ன செய்வது என்று தெரியாத பித்துப்பிடித்த நிலை. அப்போதெல்லாம் அமெரிக்காவில், கடைகளில்  துப்பாக்கி விற்பது என்பது வெகு சாதாரணமான விஷயம். ஒரு கடைக்குள் நுழைந்து துப்பாக்கி ஒன்றை வாங்கினார்.  துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தார். 

நூலகம் - புத்தகங்கள்

பனியோடு சேர்ந்து குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. எங்கோ ஓர் அடுக்குமாடி வீட்டிலிருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. சாலையின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்துக்குப் பின்னால் போனார். துப்பாக்கியை எடுத்தார். குண்டுகள் லோடு செய்யப்பட்டிருக்கின்றனவா என்று சரிபார்த்தார். துப்பாக்கியைத் தன் நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டார். இன்னும் ஒரு விநாடி.. ட்ரிக்கரை அழுத்தினால் போதும். தலை `டமார்.’ ஆனால், ட்ரிக்கரை அழுத்தவிடாமல் ஏதோ ஒன்று அவரைத் தடுத்தது. `சரி... தற்கொலையைக் கொஞ்சம் தள்ளிப்போடுவோம்’ என்று முடிவெடுத்தார். மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அவர் நடந்து நடந்து, ஒரு கட்டடத்துக்கு முன்னால் வந்து நின்றார். தெருவிளக்கு வெளிச்சத்தில் அது என்ன கட்டடம் என்று நிமிர்ந்து பார்த்தார். அது ஒரு நூலகம் என்று வாசலில் இருந்த போர்டு அறிவித்தது. அவருடைய நல்ல நேரம், அதிகாலையிலேயே நூலகம் திறந்திருந்தது. 

‘என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே...’ என்று உள்ளே நுழைந்தார். ஏதோ ஒரு புத்தக அடுக்கு... ஏதோ ஒரு புத்தகம். கையில் எடுத்தார். அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவருடைய போதை தெளிந்தது. அப்படியே புத்தகத்தில் ஆழ்ந்துபோனார். அது ஒரு சுயமுன்னேற்றப் புத்தகம். அதோடு, அவர் படிப்பதை விட்டுவிடவில்லை. அதேபோல இன்னொரு புத்தகத்தை எடுத்தார். அதுவும் விறுவிறுவென்று நகரும் புத்தகமாக இருந்தது. இரண்டையும் படித்தது அவருக்கு ஏதோ ஒரு நிறைவைத் தந்தது. அவருக்கான இலக்கு, தெரிய ஆரம்பித்தது. 

மாண்டினோவின் புத்தகம்

வீட்டுக்கு வந்தார். துப்பாக்கியை எடுத்து தூரப் போட்டார். மதியத்துக்குப் பிறகு மதுபான விடுதிக்குப் போகாமல், வேறொரு நூலகத்துக்குப் போனார். பல புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய குடிவெறி குறைந்துகொண்டே வந்தது. ஒரு கட்டத்தில், குடிப்பதின் மேல் ஆர்வமே இல்லாமல்போய்விட்டது. படிக்கும் பழக்கம் அதிகமாகிப்போனது. `என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் `சக்சஸ் த்ரோ எ பாசிட்டிவ் மென்டல் ஆட்டிட்யூட்’ (Success Through a Positive Mental Attitude)’’ என்று பின்னாளில் ஒரு பத்திரிகைப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் மாண்டினோ. பல நாள்கள் தொடர்ந்து படித்ததில், தானும் ஒரு புத்தகம் எழுதலாமே என்று தோன்ற, எழுத ஆரம்பித்தார். தன் அனுபவங்கள், அதுவரை சுயமுன்னேற்றப் புத்தகங்களில் யாரும் கடைபிடிக்காத புதிய வழிமுறைகள் எல்லாவற்றையும் கலந்துகட்டி எழுதினார். வெற்றி, அவரை மிக நெருக்கமாக வந்து அணைத்துக்கொண்டது. 

அவர் எழுதிய `கிரேட்டஸ்ட் சேல்ஸ்மேன் இன் தி வேர்ல்டு’ (The Greatest Salesman in the World) அமெரிக்காவில், அந்த வருடத்தின் அதிகமாக விற்பனையான (Best Seller) புத்தகம். மாண்டினோ எழுதிய புத்தகங்கள் இதுவரை ஐந்து கோடி பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை புரிந்திருக்கின்றன. பிறகு, மேடைப் பேச்சாளர் ஆனார். ஆக, ஒரு மனிதரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், எந்த வடிவிலும் வரலாம். மாண்டினோவுக்கு புத்தக வடிவில் வந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்