வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (16/11/2017)

கடைசி தொடர்பு:20:15 (16/11/2017)

செயற்கை எரிமலை வெடிப்புகள் குளோபல் வார்மிங்கை கட்டுப்படுத்துமா? விபரீத ஆராய்ச்சி

ஜூலை 16, 1990-ம் ஆண்டு. பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 7.8 என்று காட்டுகிறது. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரத்துக்கு அதன் வீரியம் இருந்தது. லுஸான் தீவில் இருக்கும் பினட்யூபோ எரிமலை (Mount Pinatubo) ஆட்டம் கண்டது. இதனால் அந்த எரிமலையின் கீழ் உள்ள புவி ஓடு எனப்படும் பூமியின் மேற்புறம் அழுத்தம் பெற்றது. ஊரெங்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். எங்கே எரிமலை வெடித்து விடுமோ என்ற பீதி நிலவியது. அங்கங்கே மலையைச் சுற்றி நிலச்சரிவுகள் ஏற்பட எரிமலையில் இருந்து குறிப்பிடும்படியான அளவில் புகை வெளியேறத் தொடங்கியது. மக்களின் அச்சம் இரண்டு மடங்கானது. ஆனால், நல்ல வேலையாக 500 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த எரிமலை மீண்டும் உறங்கவே சென்றது.

பினட்யூபோ எரிமலை வெடிப்பு

பினட்யூபோ எரிமலை வெடிப்பு

அதற்கடுத்து, சரியாக ஒரு வருடம் கழித்து, 1991-ம் ஆண்டு தீயினால் உருகிய பாறை எனப்படும் மேக்மா (Magma) பூமியின் அடியில் இருந்து 32 கிலோமீட்டர் மேலே வந்தது. மூன்று மலை குன்றுகள் வெடித்து வெண்புகை மூட்டம் வானெங்கும் பரவியது. அதன் பிறகு மூன்று மாதத்துக்கு அந்த மலையைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மூன்று மாதத்துக்கும் வானெங்கும் பரவிய வெண்புகையை கக்கிக்கொண்டே இருந்தது எரிமலை. அதில் ஆயிரமாயிரம் டன்கள் சல்பர் டையாக்ஸைட் வாயு கசிந்தது.

இதைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பு நிகழ்ந்த அந்த ஊரில் வெப்பநிலை குறைய தொடங்கியது. இதற்கு இரண்டு காரணங்கள் என்று பின்னர் அறியப்பட்டது. எரிமலையால் உருவான வெண்புகை மூட்டங்கள் சூரியனை மறைத்தது மற்றும் இந்த வெடிப்பினால் குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஏரோஸல்கள் (Aerosols) காற்றில் கலந்தன என்று விடைகள் அடுக்கப்பட்டன. இந்த உண்மையைத் தெரிந்துகொண்ட விஞ்ஞானிகளுக்கு எரிமலை வெப்பம் என்றாலும், அது வெடித்து வெளியேறியபின் குளிர்ச்சி ஏற்படும் என்று புரிந்துகொண்டார்கள்.

தற்போது, 21-ம் நூற்றாண்டில், புவியின் வெப்பம் மளமளவென உயர்ந்துள்ளது. அதீத கார்பன் வெளியேற்றம், மரங்களை வெட்டுவது போன்ற சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபடுவது இதற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன. வெப்பம் அதிகமாகும் இந்த நிலை தொடர்ந்தால், வெகு விரைவில் நம் பூமி வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவிடும். இந்த முடிவை நோக்கி பூமி செல்வதைத் தடுக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வகைகளில் முயன்று வருகின்றனர். இந்த எரிமலை வெடித்த பின் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களை உணர்ந்த அவர்கள், விபரீத முயற்சியாக ஒரு தீர்வை முன்வைக்கின்றனர்.

எரிமலை வெடிப்புகள் - செயற்கை மேகங்கள்

செயற்கையாக எரிமலை வெடிப்புகளை நிகழ்த்தினால் என்ன? வெடிப்புகள் கூட நிகழ்த்த வேண்டாமே, அந்த வெண்புகையை மட்டும் செயற்கையாக உருவாக்கலாம் அல்லவா? எரிமலையின் புகை செயற்கை மேகம் போல் செயல்பட்டு சூரியனை மறைத்து பூமியை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதற்குக் காரணம் அந்த வெண்புகையில் இருக்கும் சல்பர் டையாக்ஸைடு. இது காற்றில் கலந்தவுடன் தண்ணீர் மற்றும் இதர ரசாயனங்களுடன் செயல்பட்டு ஏரோஸல்கள் (Aerosols) உருவாக்கப்படுகின்றன. இவை சூரிய ஒளியை உள்வாங்கி வானிற்கே அதைத் திருப்பி அனுப்புவதால் பூமியின் வெப்பநிலை குறைகிறது.

பல வருடங்களாக எரிமலைகள்குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் எரிமலையின் இந்தச் செயல்பாட்டை வைத்து நம் பூமியின் அதீத வெப்பநிலையைச் சரி செய்யலாம் என்ற முனைப்புடன் தற்போது இறங்கியுள்ளனர். அந்தோனி ஜோன்ஸ் என்ற புவி ஆராய்ச்சியாளர் இதுகுறித்து பேசும்போது, “எரிமலையில் இருந்து வெளியேறும் ஏரோஸல்கள் சல்பர் டையாக்ஸைடால் ஆனவை. இது எளிதாகக் கிடைப்பது. உருவாக்கவும் பெரிதாக செலவு செய்ய வேண்டியதில்லை. இந்த முயற்சி எரிமலையின் செயல்பாட்டை அதன் முடிவு வரை அப்படியே காப்பியடித்தது போன்று தான்” என்று பதிவு செய்துள்ளார்.

சூரிய புவிசார் பொறியியல் (Solar Geoengineering) முறைப்படி இதைச் சாதிக்க முடியும் என்றாலும், இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகள் குறித்தும் அச்சப்பட வேண்டியுள்ளது. அந்தோனி ஜோன்ஸ் அவர்களின் ஆராய்ச்சிப்படி இவ்வகை ஏரோஸல்கள் பூமியின் தென் பகுதியில் செலுத்தப்பட்டால், பூமியின் சீதோஷ்ண நிலையில் மாறுதல் ஏற்பட்டு, அட்லாண்டிக் பெருங்கடலில் பெரும்புயல் உருவாக வாய்ப்புள்ளது. அதேபோல் ஆப்பிரிக்காவின் தற்போதைய வறட்சி நிலையிலும் மாற்றம் ஏற்படலாம். ஏரோஸல்கள் வட முனையில் செலுத்தப்பட்டால் அட்லாண்டிக் பெருங்கடலில் புயல் குறைந்த அளவில் தான் ஏற்படும் என்றாலும், ஆப்பிரிக்காவில் வெப்பம் அதிகமாகி வறட்சி அதிகமாக வாய்ப்புள்ளது. இதன் மூலம் அறியப்படும் உண்மை என்னவென்றால், ஏதோ ஒரு நாடு இந்த பிரச்னையை சரி செய்ய முயன்றால் அதன் பின்விளைவால் மற்ற நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எரிமலை வெடிப்புகள் - செயற்கை மேகங்கள்

“சூரிய புவிசார் பொறியியலைப் பொறுத்தவரை, இதுவரை முறையான சட்டதிட்டங்கள், வரைமுறைகள் எதுவும் இதுவரை நிறுவப்படவில்லை. எனவே, ஒரு நாடு தன் வெப்பத்தைக் குறைக்க இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், அது மற்றொரு நாட்டை நிச்சயம் பாதிக்கும். தங்கள் நாட்டில் நிலைமை மோசமாகும்போது, எல்லா நாடுகளும் மற்ற நாடுகளைப் பற்றி சிந்திக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பயமுறுத்துகிறார் அந்தோனி ஜோன்ஸ்.

ஒரு நவீன ரக விமானத்தைக் கொண்டு சல்பர் ஏரோஸல்களை வானில் தூவுவது எளிது என்றாலும் அதன் பின்விளைவுகளைக் குறித்து எல்லா நாடுகளும் நிச்சயம் அச்சப்படவேண்டும். இந்த முறை எளியது, இதன் மூலம் உலகைக் காக்கலாம் என்று முறையான ஆராய்ச்சிகள் செய்யாமல் அவசரப்பட்டு ஏதேனும் செய்ய முற்பட்டால், நமக்குத் தான் நஷ்டம். பின்விளைவுகளை அறிவியல் கொண்டு கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பின்னர் இந்தத் திட்டம் செயல்படுத்தினால் நலம் என்பது காலநிலை குறித்து ஆராயும் விஞ்ஞானிகளின் கருத்து.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்