340 அருவிகள்... 300 வெப்ப நீரூற்றுகள்... 8987 சதுர கி.மீ-ல் ஒரு தேசியப் பூங்கா! #Yellowstone | World's first and biggest national park Yellowstone

வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (17/11/2017)

கடைசி தொடர்பு:10:57 (17/11/2017)

340 அருவிகள்... 300 வெப்ப நீரூற்றுகள்... 8987 சதுர கி.மீ-ல் ஒரு தேசியப் பூங்கா! #Yellowstone

அமெரிக்காவின் பார்க் கவுண்டி வ்யோமிங் பகுதியில் இருக்கிறது யெல்லோஸ்டோன் உயிரியல் பூங்கா. உலகின் முதல் தேசிய பூங்காவான இது 1872  மார்ச் 1-ம் தேதி உருவாக்கப்பட்டது. இன்றைய பூங்காவின் பரப்பளவு 8987 சதுர கிலோ மீட்டர்கள். ஐந்து நுழைவாயில்களைக் கொண்டது. 466 கிலோ மீட்டர்கள் சாலை வழியாகப் பூங்காவில் பயணிக்க முடியும். இந்தச் சாலைகளில் பயணித்து பூங்காவைப் பார்க்க நேரிட்டால் பூங்காவின் இரண்டு சதவிகிதத்தை மட்டுமே பார்க்க முடியும். 5% நீராலும் 15% புல்வெளிகளாலும் சூழப்பட்டுள்ள பூங்கா 80% அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. இந்தப்பூங்காவில் 15 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே நடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. உலக சுற்றுலாப் பயணிகளின் முதல் சாய்ஸ் இந்த யெல்லோஸ்டோன், இயற்கையாக எவ்வளவு அழகைக் கொண்டிருக்கிறதோ அவ்வளவு ஆபத்தையும் கொண்டிருக்கிறது யெல்லோஸ்டோன். பூங்காவில் இருக்கிற ஒவ்வொன்றும் அழகு, அந்த ஒவ்வொன்றும் ஆபத்து!

யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா

யெல்லோஸ்டோன் பூங்காவில் 340 அருவிகள் இருக்கின்றன. 300 வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இங்கிருக்கும் ஓல்ட் ஃபெய்த்புல் (OLDFAITHFUL) என்கிற வெப்ப நீரூற்று ஒவ்வொரு முறையும் சுமார் 32000 லிட்டர் வெப்ப நீரை 180 அடிக்கு மேல் கொப்பளிக்கிறது. ஆரம்பகாலங்களில் 60 நிமிடங்களுக்கு ஒரு முறை வெடித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1959 இல் ரிக்டர் அளவில் 7.5 அளவிற்கு நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் நிலப் பிளவுகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மாற்றங்களால் வெப்ப நீரூற்று இப்போது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை கொப்பளிக்கிறது. யெல்லோஸ்டோன் குறைந்தபட்சம் 10,000 புவிவெப்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. நிலப்பரப்பு அம்சங்கள் மற்றும் உலகின் வெப்ப நீரூற்றுகளில் மூன்றில் இரண்டு பங்கு யெல்லோஸ்டோனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊற்றுகள் இயல்பாகவே தொடர்ந்து நீரை வெளியேற்றும் தன்மை கொண்டவை. ஆனால்,யெல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கிற ஊற்றுகள் இடைவேளை விட்டு  தண்ணீரை வெளியேற்றுகின்றன. காரணம் பூமிக்கடியில் எரிமலைகள் இருக்கும் இடங்களில், நிலத்தடி நீரானது மிகுதியான அழுத்தம் காரணமாக, அதிகம் சூடாகிவிடும். கொதிநிலையைத் தொட்ட உடன், சட்டென்று நீராவியாகி மேல் நோக்கிச் சீறும். சீறும்போது கீழே இருக்கும் கொதிநீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டு வெளியேறும். ஒரு சில நிமிடங்கள் இப்படி நீராவியும் கொதிநீரும் வெளியேறும். அதே நேரத்தில் நிலத்தடி நீரூற்றுப் பாதையில் குளிர்ந்த நீர் வந்து சேரும். சிறிது நேரத்தில் அந்த நீரும் கொதிநிலையை அடைந்து, நீராவியாகி வெந்நீரை வெளியே தள்ளும்.

யெல்லோஸ்டோன்

எரிமலைகள் உள்ள பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளும், கொதி நீரூற்றுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்கா, ஜப்பான், மலாய், ஆர்ச் பிலாகோ, இத்தாலி போன்ற நாடுகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. ஐஸ்லாந்து, நியூசிலாந்து, யெல்லோஸ்டோன் பார்க், ஆகிய இடங்களில் இவை அதிகமாக உள்ளன. ‘கெய்ஸர்’ என்று அழைக்கப்படும் கொதிநீருற்று தரையிலிருந்து நீரையும், நீராவியையும் பல மீட்டர் உயரத்துக்குப் பீய்ச்சி அடிக்கும். வெந்நீர் ஊற்றானது, கொதிநீருற்று போன்று பீய்ச்சி அடிக்காது. இதன் வெப்ப நிலை ஏறத்தாழ ஒரே அளவாக இருக்கும். இதன் நீர் எவ்வளவு சீக்கிரம் சூடு அடைகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குளிர்ந்துவிடும்.

வெப்ப நீரூற்று

GRAND PRISMATIC SPRING  என்கிற கொதி நீரூற்று யெல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கிறது. ஒரு வகையில் தூங்கும் எரிமலைக்கு ஒப்பானது இந்த நீரூற்று. சுமார் 15000 லிட்டர் கொதி நீரை ஒவ்வொரு நொடிக்கும் வெளி தள்ளுகிறது. ஜூன் 7, 2016 அன்று யெல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கிற நோரிஸ் கெய்சர் பேசின் (Norris Geyser basin) நீர் சூடேற்றி பகுதியில் 'உள்ளே நுழையக் கூடாது' என்கிற எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டிருக்கிறது.

போர்ட்லாந்திலிருந்து வருகிற 23 வயது பயணி காலின் ஸ்காட் என்கிற நபர் புகைப்படம் எடுக்க முயல்கிறார். அதை அவரின் சகோதரி சைப் ஸ்காட் காணொளியாகப் பதிவு செய்கிறார். நீரில் கை வைப்பது போல புகைப்படம் எடுக்கும் போது ஸ்காட் தவறி சூடேற்றியின் குழிக்குள் விழுந்து விடுகிறார். காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்க நினைக்கிற அடுத்த நொடி இயற்கை தன்னுடைய இயல்பைக் காட்டுகிறது. சில வினாடிகள்தான்; எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. விழுந்த அடுத்த நொடி நீரின் சூட்டில் கரைந்து போகிறார். ஆனால் இந்த இறப்பைப் பூங்கா நிர்வாகம் வெளியில் தெரிவிக்காமல் மறைத்து விடுகிறது. நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் மாதத்தில் ஓர் உள்ளூர் தொலைக்காட்சி  “சுதந்திர அறிக்கை தகவல் சட்டம்” (FOIA) மூலம் பூங்கா நிர்வாகத்திடம் தகவல் கேட்கிறது. அதற்கு விளக்கமளித்த பூங்கா அதிகாரிகள் இறப்பை அதிகாரபூர்வமாக தெரிவித்த பிறகுதான் உலகத்திற்குத் தெரிய வந்தது. 

பூங்காவில் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் பூங்காவின் எருமைகளின் எண்ணிக்கை 23 க்கும் குறைவாக இருந்திருக்கின்றன. அவை அழிந்து போகும் தருவாயில் இருந்தன. அதற்கு பிறகான காலங்களில் பணியாளர்களின் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் எருமைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய அளவில் யெல்லோஸ்டோன் பூங்காவில் 5500 க்கும் அதிகமான எருமைகள் இருக்கின்றன. உலகில் சுதந்திரமாக எருமைகள் வாழும் ஒரே இடமாக யெல்லோஸ்டோன் இருக்கிறது. பறந்து விரிந்து கிடக்கிற இப்பூங்காவில் பல வகையான விலங்குகள் வசிக்கின்றன. கடா மான்கள், மான்கள், கூர் கொம்புடைய மான்கள், மலை சிங்கங்கள், நீர் நாய்கள், ஓநாய்கள் எனப் பல வகையான விலங்குகள் வசிக்கின்றன. 

பூங்கா

பூங்காவின் பெரும் பகுதிகள் பாறைக்குடைவுகளையும் (Canyons), காடுகளையும் உள்ளடக்கிய பகுதி. நூற்றுக்கணக்கான விலங்கினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்தப் பூங்கா பூமிக்கடியில் இருக்கும் ஒரு மாபெரும் எரிமலையின் வாய்ப்பகுதியில் அமைந்திருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். சூப்பர் வல்கனோ (Super Volcano) என்று இந்த எரிமலையைச் சொல்கிறார்கள். சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன்னர்வரை இந்த எரிமலை வெடித்திருக்கிறது. இப்போதுகூட இந்தப் பூங்காவின் பெரும்பகுதி நிலத்துக்கு அடியில் புதைந்திருக்கிறது. இதன் நிலப்பரப்பிலிருந்து 5-10 கி.மீ. ஆழத்தில் பாறைகள் உருகிய நிலையில் இருக்கின்றன. எரிமலையைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணம் யெல்லோஸ்டோன் பூங்கா வருடத்திற்கு 2000 முறை நிலநடுக்கத்தை சந்தித்து வருகிறது.

யெல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கிற ஒவ்வொன்றும் ஓர் ஆபத்தை வைத்திருக்கிறது. ஒவ்வோர் ஆபத்தும் ஓர் அழகை வைத்திருக்கிறது. உலகத்திற்கு யெல்லோஸ்டோன் என்பது வெறும் வார்த்தை. அமெரிக்காவிற்கு?


டிரெண்டிங் @ விகடன்